Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label குட்டி கதைகள். Show all posts
Showing posts with label குட்டி கதைகள். Show all posts

July 30, 2017

ஓநாயும், ஆட்டுக்குட்டியும் ! - சிறுகதை


ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை.

அதைத்தான் இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய்.

""ஏன் இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்?'' என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி பயத்துடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது.

""நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? தாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும்!'' என்று மெல்லிய குரலில் கேட்டது.

""பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிடில் உங்கப்பன் கலக்கியிருப்பான்! உங்கப்பன் கலக்கா விட்டால், உன் பாட்டன் கலக்கியிருப்பான். உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது!'' என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது.

துஷ்டர்களிடம் நியாயம் எடுபடாது. மவுனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம்.

July 29, 2017

காரம் தாங்கலப்பா ! - சிறுகதை


வருணபுரி நாட்டு விதூஷகன் கமலன் சரியான சமர்த்துக்காரன். தன்னுடைய சாதுர்யமான பேச்சினால், காரியத்தை சாதித்து விடுவான்.

அவ்வப்போது அரசருடன் சேர்ந்து உணவு உண்பான்.
அங்கே அவன் தட்டில் எந்த உணவை வைத்தாலும் எந்தக் குறையும் சொல்லாமல் சாப்பிட்டு விடுவான்.

"நான் எல்லா உணவு வகைகளையும் விருப்பத்துடன் சாப்பிடுவேன். என்னால் சாப்பிட முடியாத உணவே இல்லை' என்று பெருமையாக பேசுவான்.

இப்படித் தொடர்ந்து இவனது பீத்தலை கவனித்து வந்தார் அரசர்.

இதனால், எரிச்சல் அடைந்தார் அவர். அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தார். சமையல்காரனை அழைத்தார்.

""இன்று கமலன் சாப்பிட வருவான். அவனுக்கு வைக்கும் வறுத்த மீனில், அதிகமான மிளகாய்த் தூள் இருக்க வேண்டும். காரம் தாங்காமல் அவன் துன்பப்பட வேண்டும். அப்படி அவன் துன்பப்படாமல் இருந்தால், உன்னைத் தொலைத்து விடுவேன்,'' என்றார்.

சமையல்காரனும் நிறைய காரம் போட்டுச் சமைத்து வைத்தான்.

வழக்கம் போல அரசருடன் சாப்பிட அமர்ந்தான் விதூஷகன். தன் தட்டில் இருந்த வறுத்த மீன்களில் ஒன்றை எடுத்து சாப்பிட்டான். மீனில் காரம் அதிகமாக இருந்தது. காரம் தாங்காமல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்கியது. தன் துன்பத்தை அரசருக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு, ஏதும் பேசாமல் சாப்பிடத் தொடங்கினான்.

அவன் நிலையை கவனித்த அரசன், அவனைக் கேலி செய்து மகிழ நினைத்தார்.

""ஏன் உன் கண்களில் கண்ணீர் வருகிறது?'' என்று கிண்டலாகக் கேட்டார்.

அரசரின் வேலைதான் இது என்பது அவனுக்குப் புரிந்தது. அவரின் கேலிக்கு ஆளாகக் கூடாது. தாங்க முடியாத காரத்தின் வேதனையையும் வெளிப்படுத்த வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான்.

""அரசே! என் தாயார்தான் எப்போதும் இப்படிக் காரமாக மீனை வறுத்து வைப்பாள். இந்த மீனை சாப்பிட்டதும், அவரின் நினைவு வந்து விட்டது. ஐயோ! அம்மா! என்னை விட்டு நீ போய் விட்டாயே...'' என்று அவன் அழத் தொடங்கினான்.

அவனது ஒப்பாரியை தாங்க முடியாமலும், நிறுத்த முடியாமலும் நொந்துப் போனார் அரசர்.

July 28, 2017

எது உண்மை?-சிறுகதை


முன்னொரு காலத்தில், அனந்தபுரம் என்னும் நாட்டை அரசன் ஒருவன் மிகவும் சிறப்பாக ஆண்டு வந்தான். அவனிடம் அமைச்சர்களும், தளபதிகளும், போர் வீரர்களும், மக்களும் மிகவும் மரியாதையுடனும், பணிவுடனும் நடந்து கொண்டனர்.

அரசனும் அனைவரிடத் திலும் அன்போடும், பண்போடும் பழகி வந்தான். அரசனது அமைச்சரவையில், அமைச்சர்களுக்கெல்லாம் தலைமையாக முதல் அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் வயதானவர்; அரசனிடம் மிகுந்த விசுவாசம் உள்ளவர்.

அவர் ஒருநாள் அரசரிடம், ""அரசே! எனக்கு வயதாகி விட்டது. என்னால், இனி பணியாற்ற இயலாது. மனதும், உடலும் தளர்ந்துவிட்டது. எனவே, இனி நான் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்,'' என்றார்.

இதைக் கேட்ட அரசர், ""அப்படியே செய்யுங்கள் அமைச் சரே! தங்களுக்கும் வயதாகி விட்டது. இனி உடம்பு இடம் கொடாது. எனவே, தாங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இருந்தாலும் தாங்கள் எங்கள் அரண்மனைக்கு அடிக்கடி வந்து எங்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்,'' என்றும் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் பதவி விலகியதன் காரணமாக, அந்த தலைமை அமைச்சர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும். யாரை நியமிக்கலாம் என்று அரசர் குழம்பினார்.
அமைச்சரின் மகனும் அமைச்சரவையில் இருந்தான். அவன் தனது தந்தையின் பதவியினைத்தான் ஏற்க விரும்பினான். அவன் தனக்கு தலைமைப் பதவியைத் தருமாறு அரசரை வேண்டினான்.

அரசரோ, ""உன்னை விட வயதில் முதிர்ந்தவர்கள் இருக்கையில், உன்னை நியமித்தால், மற்ற அறிஞர் களின் அறிவையும், வயதை யும், மதிப்பதாகாது. எனவே, நாளை முடிவு செய்வோம்,'' என்று கூறிவிட்டார்.

மறுநாள் அமைச்சரவை கூடியது. மன்னரும், மற்ற அமைச்சர் பெருமக்க ளும் அமர்ந்திருந்தனர். மன்னர் தலைமை அமைச்சரின் மகனை அழைத்தார்.

அவன் பணிவோடும், சந்தோஷத்தோடும் மன்னனை வணங்கி நின்றான்.
அடுத்து அமைச்சர்களில் முதியவர் ஒருவரையும் அழைத்தார்.

""அமைச்சர் பெருமக்களே! இப்போது இவர்கள் இருவருக்கும் ஒரு தேர்வு வைக்கப் போகிறேன். இவர்கள் இருவரில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கே தலைமைப் பதவி,'' என்றார்.

எல்லாரும் முழுமனதுடன் சம்மதித்தனர்.

அரசன் ஒரு பணிப்பெண்ணை அழைத்து, ""அந்த இரு பூந்தொட்டிகளையும் எடுத்து வா!'' என ஆணையிட்டார்.

அந்தப் பணிப்பெண் இரு பூந்தொட்டிகளையும் எடுத்து வந்து வைத்தாள்.
""இருவரும் நன்கு கவனி யுங்கள். இந்த இரண்டு தொட்டிகளும் ஒரே அமைப்பு; ஒரு மாதிரியான மலர்கள்; இரண்டும் ஒரே மாதிரியான தோற்றம் உடையவை. இரண்டில் ஒன்றுதான் உண்மையான மலர். ஒன்று காகிதமலர்.

நீங்கள் இருவரும் அங்கிருந் தபடியே இருந்து கொண்டு, இதில் எது காகித மலர், எது உண்மையான மலர் என்று கண்டுபிடிக்க வேண்டும்,'' என்றார்.
இருவருமே சற்றுநேரம் திகைத்தனர். தலைமை அமைச்சரின் மகன் சிந்தித்து, சிந்தித்து பதில் கூற முடியாமல் தவித்தான்.

வயது முதிர்ந்த அமைச் சரோ சற்று நேரம் சிந்தித்தார். பிறகு, இரண்டு தொட்டிகளை யும் தோட்டத்தின் அருகே கொண்டுபோய் வைக்கும்படி சொன்னார். அதேபோல் இரு தொட்டிகளும் தோட்டத்தில் வைக்கப்பட்டன.
உண்மையான மலரைத் தேடி வண்டுகள் வட்ட மிட்டன. காகிதமலர் அப்படியே இருந்தது. பின்பு வண்டுகள் மொய்ப்பதே உண்மையான மலர் என்று கூறினார்.

அரசர் அந்த அமைச் சரைப் பாராட்டி, அவரையே தலைமை அமைச்சராக நியமித்தார்.

July 27, 2017

படிங்க.. படிங்க....!-சிறுகதை


வியாசர்பாடியில் மளிகைக் கடை வைத்திருந்தார் ராஜா. சிறந்த பக்திமான்.

நாள்தோறும் காலையும், மாலை யும் கோவிலுக்குப் போவார். ராஜா மளிகைக் கடையில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். காரணம், அவர் கடைக்குச் சென்றால் எல்லாப் பொருட்களும் எளிதில் கிடைக்கும். தரமும் நன்றாக இருக்கும்.

ஒரு சமயம் ராஜா கடையிலிருந்து கோவிலுக்குச் சென்ற போது... ஒரு பெரியவர் கோவிலுக்கு அருகில் மயங்கிக் கிடந்தார். அவரைத் தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தார் ராஜா.

""ஐயா... நீங்க எந்த ஊர்... ஏன் இப்படி சோர்வாக மயங்கி கீழே விழுந்து இருக்கிறீர் கள்?'' என்று கேட்டார் ராஜா.

""ஐயா... நான் அருகில் உள்ள நகரத்தைச் சேர்ந்தவன். நான் நகைக்கடை வைத்திருக் கிறேன். எல்லாரையும் எளிதில் நம்பி விடுவேன். அதனால் தான் ஏமாந்தேன். என் பிள்ளைகள் கூட என்னை விட்டுப் பிரிந்து விட்டனர்.

இப்போது எனக்கென்று சொந்தம் யாரு மில்லை...'' என்று அழுதார்.

""ஐயா கவலைப் படாதீர்கள்... எப்போதும் எல்லா வற்றையும், எல்லாரையும் எளிதில் நம்பவும் கூடாது. நம்பாமல் இருக்கவும் கூடாது. அப்படிப்பட்ட உலகம் இது. நாம் தான் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

""ஐயா சரியாச் சொன்னீங்க... உங்களால் மட்டும் எப்படி இப்படி சந்தோஷமாக இருக்க முடிகிறது?'' என்று கேட்டார்.

""அதற்குக் காரணம் என் மகன் சொல்வதைத் தான் நான் கேட்கிறேன்,'' என்று சொன்னார் ராஜா.

""ஐயா... நீங்களோ பெரியவர்... அப்படி இருக்கும் போது சிறியவ னான உங்கள் மகன் சொல்வதைக் கேட்டு நடப்பது எப்படிச் சரியாக இருக்கும்?'' என்று கேட்டார்.

""ஐயா... என் மகன் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான். அவன் பள்ளியில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் மட்டும் அல்ல, மாநிலத்திலேயே என் மகன் தான் முதல் மதிப்பெண் பெற்றான். பள்ளியின் மாணவத் தலைவனும் என் மகன்தான். தினந்தோறும் ஒரு மணி நேரம் நூல் நிலையம் சென்று நாளிதழ்களைப் படிப்பான்.

""வரும்போது நூல் நிலையத்தில் இருந்து எனக்கு நல்ல நூல்களை வாங்கி வருவான். தினந்தோறும் அந்த நூல்களை நானும் படிப் பேன். இன்று நாட்டு நடப்பு அனைத்தும் எனக்குத் தெரியும். மேலும், நல்லவர்கள் யார்? நல்ல வர்கள் அல்லாதவர்கள் யார்? என்பதைக் கூடத் தெரிந்து கொண்டேன். நான் சிறந்த செல்வந்தவன் ஆகக் காரணம் என் மகன் உறுப்பினராக இருக்கும் நூல் நிலையம் தான்,'' என்று கூறினார்.

""ஒருவன் தினந்தோறும் நூல்நிலையம் சென்றால் செல்வந்தன் ஆக முடியுமா?'' என்று கேட்டார் பெரியவர்.

""ஐயா... நிச்சயம் முடியும்... முதலில் நீங்கள் நூல் நிலையம் சென்று நல்ல நூல் களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். நூல்களில் எழுதியுள்ள நல்ல கருத்துக் களைப் படித்து அதன்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
""உதாரணமாக... பருத்திச் செடியில் இருந்து பஞ்சு கிடைக்கிறது. பஞ்சு வெண்மையாக இருக்கும். ஆனால், வெண்மையான பஞ்சைச் சுற்றி சில கறுப்பு நிறத் துகள்கள் இருக்கும். முதலில் எடுத்து நூல் நூற்கலாம். ஆனால், நூல் நூற்கும் போது சின்ன சின்னக் கோணல் வெளியில் தெரியும். வெளியே தெரியும் கோணல்களை நீக்கினால்தான் நல்ல நூல் கிடைக்கும். அது போல மனிதனின் மனதில் ஏற்படும் கோணல்களை, வளைவுகளை நூல் நிலையத்தால் வழங்கும் நூல்களால்தான் சரிப்படுத்த முடியும். ஆகவே, தினந்தோறும் நல்ல நூல்களைத்தான் நாம் படிக்க வேண்டும்.

""ஒவ்வொரு நாளும்... வாழ்க்கைக்குத் தேவையான பயனுள்ள நல்ல நூல்களை நாம் படித்தால் படிப்பாளியும் ஆகலாம், படைப்பாளியும் ஆகலாம். நமது நூல் நிலையங்கள் வழங்காத பயனை வேறு எதுவும் வழங்கிட இயலாது. அடக்கம், எளிமை, சகிப்புத்தன்மை, நற்பண்புகள், வறுமையைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை, பொறுமை முதலிய மனப்பயிற் சிக்கு நமது நூல் நிலையங்களே வழி காட்டும்,'' என்றார் ராஜா.

""ஐயா... என் தவறை நான் உணர்கிறேன். படிக்க வேண்டிய நேரத்தில் சரியாகப் படிக்காததால், நான் நல்ல நூல்களையும் படிக்கவில்லை. எனக்கு வாழ்க்கையில் நல்ல நண்பர்களும் அமையவில்லை. இப்போது என் தவறை நான் உணருகிறேன். தவறை உணர்ந்த நான் இப்போது என்ன செய்ய முடியும்,'' என்று கேட்டார் பெரியவர்.

""ஐயா... கவலைப்படாதீர்கள். நான் உங்களுக்கு வேலை வாய்ப்புத் தருகிறேன். நீங்கள் என் கடையில் வந்து விற்பனைப் பிரிவில் பணி புரியலாம். என்னுடன் தங்கி இருக்கலாம். படிப்பதற்கு வயது வரம்பு இல்லை. எதற்கும் கவலைப்படாதீர்கள். வாருங்கள் உங்களுக்கு நான் உதவி செய்கிறேன்,'' என்றார் ராஜா.

""ஐயா... நூல் நிலையம் எங்கே இருக் கிறது? என்னை முதலில் அந்த நூல் நிலையத்தில் உறுப்பினர் ஆக்க முடியுமா?'' என்று கேட்டார்.
""ஐயா... வாங்க நாம் இருவரும் நூல் நிலையம் போகலாம். இன்று முதல் நீங்கள் நூல் நிலையத்தின் நிரந்தர உறுப்பினர். சரிதானே...'' என்று சொன்னதும்.

பெரியவர் முகத்தில் பிரகாசமான ஒளி தென்பட்டது.
குட்டீஸ்... பள்ளியில் லைப்ரரி வகுப்பில் தரும் புத்தகங்களை படித்து பயன்பெறுங்கள் சரியா!

July 26, 2017

புகழ் பெற்ற ஜோதிடர்!-புதிர் சிறுகதை


முன்னொரு காலத்தில் ஆளவந்தான் என்ற நாட்டை இளஞ்சோழன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவரின் நெருங்கிய நண்பனான சேதுராஜன் அங்கு அமைச்சராக இருந்தார்.

ஒருநாள்-
புகழ்பெற்ற சோதிடர் ஒருவர் அந்நாட்டிற்கு வருகை தந்தார். அரசர் இளஞ்சோழன் அவரைச் சிறப்பாக வரவேற்றார்.
""அரசர் பெருமானே! நான் ஜாதகம் கணித்துச் சொல்வதில் வல்லவன். எதிர்காலத்தில் இன்னது நடக்கும் என்று நான் சொன்னால் அது நடந்தே தீரும். என் வாக்கு என்றும் பொய்யாகாது,'' என்று பெருமையாக கூறினார் அந்தச் சோதிடர்.

"இவர் சொல்வது உண்மையா? சோதித்துப் பார்ப்போமே' என்று நினைத்தார் அரசர்.

""சோதிடரே! அமைச்சர் சேதுராஜனின் ஜாதகம் இது. என் உயிருக்கு உயிரான நண்பர் இவர். இவரது வாழ்நாள் எவ்வளவு என்று கணித்துச் சொல்லுங்கள்,'' என்று கேட்டான்.

அந்த ஜாதகத்தைப் பார்த்த சோதிடர், ஏதேதோ கணக்கு போட்டார்.
""ஆ! இப்படியா நடக்கப் போகிறது. தடுக்க வழி இல்லையே,'' என்று வருத்தத்துடன் முணுமுணுத்தார்.

""சோதிடரே! எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்,'' என்றார் அரசர்.

""அரசே! சோதிடர் எதையும் மறைக்கக் கூடாது. உண்மையைத்தான் சொல்ல வேண்டும். அமைச்சரின் வாழ்நாள் இன்னும் இருபது நாட்கள் தான். அவரைக் காப்பாற்ற வழி ஏதும் இல்லை,'' என்று வருத்தத்துடன் சொன்னார்.

அங்கிருந்த யாருமே அவர் சொன்னதை நம்பவில்லை.

அவர் குறிப்பிட்ட இருபதாம் நாள் வந்தது.

என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. நல்ல உடல் நலத்தோடு இருந்த அமைச்சர் திடீரென்று இறந்து விட்டான்.

"சோதிடர்தான் தன் மந்திரத் திறமையால் அமைச்சரைக் கொன்று இருக்க வேண்டும். உயிர் நண்பனைக் கொன்ற அவரை பதிலுக்கு கொல்ல வேண்டும். அதற்கு என்ன செய்வது' என்று சிந்தித்தார் அரசர்.

நல்ல வழி ஒன்று அவருக்குத் தோன்றியது.

"சோதிடரிடம் அவர் வாழ்நாள் எவ்வளவு என்று கேட்போம். பல ஆண்டுகள் வாழ்வேன் என்றுதான் சொல்வார். உடனே, அவரைக் கொன்று விடுவோம். திகைத்து நிற்கும் அவையினரைப் பார்த்து, தான் சாகப் போவது இவருக்கேத் தெரியவில்லை. பல ஆண்டுகள் வாழப்போவதாகப் பொய் சொன்னார். அதனால்தான் இவரைக் கொன்றேன். இவர் சோதிடம் பொய் என்பேன். எல்லாரும் என் கருத்தை ஏற்றுக் கொள்வர்' என்று நினைத்தான்.

மறுநாள் அரசவை கூடியது. அங்கு வந்த சோதிடரை வரவேற்றான் அரசர்.
""சோதிடரே! எல்லோர் வாழ்நாளையும் கணித்துச் சொல்கிறீர். துல்லியமாக நடக்கிறது. உங்கள் திறமைக்கு என் பாராட்டுக்கள்.

""உங்கள் வாழ்நாளைக் கணித்து உள்ளீரா? எவ்வளவு காலம் வாழ்வீர்கள்?'' என்று இனிமையாகக் கேட்டான்.

அறிவு நிரம்பிய அந்தச் சோதிடர், "எல்லாரும் தங்கள் வாழ்நாளைத்தான் என்னிடம் கேட்பர். ஆனால், இந்த அரசனோ என் வாழ்நாள் எவ்வளவு என்று கேட்கிறான். இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. கவனமாக நடந்து கொள்ள வேண்டும்' என்று நினைத்தார்.

""அரசே! என் வாழ்நாளை நான் கணித்துப் பார்க்கவில்லை. இன்றிரவு கணக்கு போட்டுப் பார்க்கிறேன். என் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று நாளை சொல்கிறேன்,'' என்றார்.

""சரி! அப்படியே செய்யுங்கள்,'' என்றார் அரசர்.

மறுநாள் அரசவைக்கு வந்தார் அவர். ""நான் இவ்வளவு காலம் வாழ்வேன்!'' என்று தெளிவாகச் சொன்னார்.

அரசரால் அவரைக் கொல்ல முடியவில்லை. அது மட்டும் அல்ல. அவரைப் பாதுகாக்கும் பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டியது ஆயிற்று.
அப்படியானால், சோதிடர் தன் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று சொல்லி இருப்பார்?

விடை:

""அரசரே என் வாழ்நாளும், உங்கள் வாழ்நாளும் பின்னிப் பிணைந்து உள்ளது. நான் இறந்த பத்தாம் நாள் நீங்கள் இறந்து விடுவீர்கள்,'' என்றார் சோதிடர்.

சோதிடர் உயிருடன் இருந்தால் தான் தான் உயிருடன் இருக்க முடியும் என்பதை அறிந்தார் அரசர். அவரைப் பாதுகாக்கும் பொறுப்பையும் அவர் ஏற்க வேண்டியதாக ஆயிற்று.

July 25, 2017

தேங்க்யூ சார் ! - சிறுகதை


ஒரு நரி, ஒரு ஓநாயைச் சந்தித்தது. அவை இரண்டும் உரையாடத் தொடங்கின.
ஓநாய், நரியிடம் கேட்டது.

"நரித் தம்பி, நீ எதுவரை படித்திருக்கிறாய்?''
"உண்மையைச் சொன்னால், நான் பாதி படித்திருக்கிறேன்!'' என்றது நரி.

"அப்படியென்றால், உன்னை விட நான் இரண்டு மடங்கு படித்திருக்கிறேன். அதனால் நீ இன்று முதல் என்னை, "சார்' என்று அழைக்க வேண்டும்!'' என்று கட்டளையிட்டது ஓநாய்.
அப்படிப் பேசிக்கொண்டிருந்த போது, பின்னால் இருந்த புதரிலிருந்து தாவி வந்தது ஒரு பெரிய புலி.

ஓநாயிடம், ""இப்போது நாம் என்ன செய்வது சார்?'' என்று கேட்டது நரி.
ஆனால், அந்தப் புலியைப் பார்த்து, பேசக் கூட முடியாமல் பயந்து போயிருந்தது ஓநாய். தாவுதற்கு ஆயத்தமாகியபடியே புலி கேட்டது.
"நீங்கள் எங்கே போகிறீர்கள்?''

உடனடியாகச் சிந்தித்து ஒரு முடிவெடுத்த நரி, ""உங்களிடம் ஒரு ஆலோசனை கேட்க வேண்டும் என்று தான் உங்களைத் தேடி வந்து கொண்டிருந்தோம் ஐயா. ஒரு விஷயம் குறித்து எங்களுக்குள் ஒரு விவாதம் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் அறிவால்தான் எங்கள் பிரச்சனையைத் தீர்க்க முடியும்!''

அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தது புலி.

"என்ன பிரச்னை? முதலில் அதை என்னிடம் சொல்லுங்கள்!'' என்றது.
"நான் வேட்டையாடி இரண்டு பெரிய காட்டுக் கோழிகளைப் பிடித்தேன். ஆனால், இந்த ஓநாய் நண்பர் என்னை விட அதிகம் படித்திருப்பதால் தனக்கும் ஒரு கோழியைத் தர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். நீங்களே சொல்லுங்கள் இது நியாயமா?'' என்றது நரி.

ஓநாயைக் கூர்மையாகப் பார்த்தபடி, "நீ எதுவரை படித்திருக்கிறாய்?'' என்று கேட்டது புலி.

பயத்தால் ஓநாயின் பற்கள் கடகடவென்று அடித்துக் கொண்டன.
புலிக்கு ஒன்றும் புரியவில்லை.

அதைக் கண்ட நரி, அதற்கு விளக்கம் சொன்னது.

"தன் வாயில் எத்தனைப் பற்கள் உள்ளனவோ அத்தனைத் தகுதிகள் தனக்கு உண்டு என்றுதான் இவர் சொல்ல வருகிறார்,'' என்றது.

"அப்படியா? அப்படியென்றால் உன்னை விட எனக்குத்தான் அதிகமான தகுதிகள் உள்ளன! பார்க்கிறாயா?'' புலி, வாயைத் திறந்து தன் பயங்கரமான பற்கள் முழுவதும் வெளியே தெரியும்படிக் காட்டியது.

அந்தக் காட்சியைப் பார்த்து பேரதிர்ச்சி அடைந்த ஓநாய், உடனே மயங்கி விழுந்தது. ஓநாயின் அந்தச் செயலுக்கும் நரி விளக்கம் சொன்னது.

"நீங்கள் பெரிய படிப்பாளி என்று ஏற்றுக்கொண்டு இவர் உங்கள் பற்களை விழுந்து வணங்குகிறார்! எங்கள் பிரச்னையைத் தீர்த்த உங்கள் அறிவுத் திறனுக்கு, நானும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!'' என்று நரியும் புலியின் காலில் விழுந்து வணங்கியது.

"நான் உங்கள் பிரச்சனையைத் தீர்த்து விட்டேனா?'' என்று புலி வியப்புடன் கேட்டது.

"இரண்டு கோழிகளும் இப்போது உங்களுக்கே சொந்தமாகிவிட்டன. அதில் எனக்கோ, ஓநாய் நண்பருக்கோ கருத்து வேறுபாடு ஏதுமில்லை. நீங்கள் என் வீட்டுக்கு வாருங்கள். வந்து இரண்டு கோழிகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்!'' என்று நரி மிகவும் பணிவுடன் சொன்னது.

அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தது புலி, "கோழிக்கறி என்பது அரிதாகக் கிடைக்கும் அபூர்வ உணவு! அது மட்டுமல்ல, முதலில் கோழிகளைத் தின்று, பிறகு நரியையும், ஓநாயையும் தின்றுவிடலாம்' என்று புலி மனதிற்குள் திட்டமிட்டது.

"சரி, நீ முன்னால் நடந்து வழிகாட்டு, நான் பின்னால் வருகிறேன்!'' என்று புறப்பட்டது புலி.

நரி அதை மலையின் ஒரு பக்கத்தில் உள்ள சுரங்கத்திற்கு அழைத்துச் சென்றது.

"முதலில் என் ஓநாய் நண்பர் சுரங்கத்திற்கு உள்ளே சென்று கோழிகளைப் பிடித்து வந்து உங்களிடம் கொடுப்பார்,'' என்றது நரி.

அந்தச் சுரங்கத்தின் நுழைவாயில், ஓநாய் நுழைய முடியாத அளவுக்கு மிகவும் இடுக்கமாக இருந்தது. ஆனால், அதற்குள் நுழைந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற ஆசையால் ஓநாய் கஷ்டப்பட்டு அதன் உள்ளே நுழைந்துவிட்டது.

நீண்ட நேரம் ஆன பின்பும் ஓநாய் வெளியில் வரவில்லை. அது உள்ளே என்ன செய்கிறது என்று பார்த்து வருகிறேன் என்று சொல்லி நரியும் சுரங்கத்திற்குள் சென்றது. பிறகு அதுவும் வரவே இல்லை.

பல மணி நேரத்திற்குப் பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று புலி புரிந்து கொண்டது. தான் பெரிய படிப்பாளி என்பதையும் மறந்து, தன்னால் நுழைய முடியாத சுரங்கத்திற்குள் எட்டிப் பார்த்து நரியைச் சபித்து, திட்டியது.
புலி அங்கிருந்து சென்றவுடன், நரியின் உதவியுடன் சுரங்கத்திலிருந்து மிகவும் சிரமப்பட்டு வெளியே வந்தது ஓநாய்.

பிறகு அது உரத்த குரலில் நரியைப் பாராட்டியது.

"நீ படிக்காதவனாக இருக்கலாம், ஆனால், உன் அறிவும், திறமையும் அபாரம்தான்!'' என்றது ஓநாய்.

"தேங்க்யு சார்!'' என்றது நரி.

July 24, 2017

தொட்டுவிடும் தூரம் தான்!-சிறுகதை


கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைக் காண சகிக்காமல், 'ஓ'வென அலறினாள் சஞ்சனா. பூரிப்பாய் இருந்த இடம், தட்டையாய், பூரான் கால்களாய், ஓடிய தழும்புடன் இருந்ததைப் பார்த்ததும், 'அய்யோ...' என அலறி, கண்களை இறுக மூடினாள்.

உடலில் புதிய மாற்றங்கள் உருவாகி, பல வகை உணர்வுகளை பூக்க வைக்கும் பருவம் அல்லவா இது! மனதில் ரகசியமாக ஏற்பட்ட சின்ன கர்வம், பெருமிதம், தன்னம்பிக்கை, சின்னதாய் ஒரு மமதை!

இவை அனைத்தும் இன்று இல்லாமல் போய், அந்த வெற்றிடம், அவளைத் தூக்கிப் போட்டு மிதித்தது.

'இதை இழந்து எப்படி மூளியாய், வெறுமையாய் வாழ்வது...' என்று மனம் பதறியவளின் வலது கை, மிகுந்திருக்கும் அடுத்த பாகத்தை இறுக பற்றியது. எங்கே இதுவும் தன்னைவிட்டு நழுவி விடுமோ என்ற பயம் எழுந்து, மயக்கம் வருவது போலிருந்தது.

அதையும் மீறி, வெறுப்பின் உச்சத்தில், அடி வயிற்றிலிருந்து அழுகை பீறிட, 'ஓ'வென அழுதாள் சஞ்சனா. சத்தம் கேட்டு ஓடி வந்தனர், அக்கா சரிதாவும், அம்மாவும்!

இரண்டே எட்டில், சஞ்சனாவை, தன்னோடு அணைத்துக் கொண்டாள் சரிதா.
''என்னை ஏன் காப்பாத்துனே... என்னால இப்படி மூளியலங்காரியா வாழ முடியாது; நான் சாகப் போறேன்...'' என்று முகத்தில் அறைந்து கொண்டு அழுதாள் சஞ்சனா.

அவள் வாயைப் பொத்தி, ''சஞ்சும்மா... அழாதே...'' என்று தேற்றினாள் சரிதா.
''என்னால இந்த நிலையில வாழ முடியாதுக்கா,'' திமிறினாள் சஞ்சனா.

''அப்படி சொல்லாத கண்ணம்மா... வாழ்க்கைங்கிறது இது மாத்திரம் இல்ல...''
''புரியாம பேசாதே; இந்த அசிங்கத்தோட என்னால வாழ முடியாது. அய்யோ... எல்லாரும் என்னை கேலியா பாப்பாங்களே... நான் எப்படி அவங்கள எல்லாம் ஏறிட்டு பாப்பேன். என்னை விடுங்க; நான் சாகப் போறேன்...'' என பைத்தியம் பிடித்தவள் போல அரற்றியவளை, ஒருகணம் உற்றுப் பார்த்த சரிதா, அவள் தோளை பிடித்து நிறுத்தி, கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

ஸ்விட்ச்' போட்டாற் போல அழுகையும், கூச்சலும் நின்றது; அம்மா கூட, திடுக்கிட்டு ஏறிட்டுப் பார்த்தாள்.

''சாகப் போறீயா... போடீ போ... அந்த சாவு கூட நீ நெனச்சா வராது. ஜனனம் எப்படி நம்ம கையில இல்லயோ, அதைப் போல தான் மரணமும்! சாகிற நேரம் வந்தா தான் சாக முடியும்; இல்லேன்னா, நீ செய்யுற முயற்சியால, வேற விபரீத விளைவுகளை உண்டாக்கிட்டு, தூர நின்னு சிரிக்கும். ஆஸ்பத்திரிக்கு வந்து பாரு... உயிருக்காக எத்தனை பேரு போராடிக்கிட்டு இருக்காங்க, மரண அவஸ்தையாலே எவ்வளவு பேரு, தினம் தினம் செத்துப் பிழைக்கிறாங்கன்னு!

''உனக்கு அழகு அவ்வளவு முக்கியமாப் போச்சா... உடம்புல ஒரு உறுப்பை, நோய் பரவாம இருக்க வெட்டி எறிஞ்சுட்டா, நீ செத்துப் போவியா... நீ சாகாம இருக்கத் தானடீ இத்தனை பாடும்... இதப் புரிஞ்சுக்காம பேசுறயே... எல்லாத்துக்கும் சாவு தான் தீர்வா...''

அனிச்சையாய் கண்ணீர் வழிய, பரிதாபமாய் சகோதரியைப் பார்த்தவாறு, சுவரோரமாய் மடங்கி உட்கார்ந்தாள் சஞ்சனா.

''சஞ்சு... நிதர்சனத்தை சந்திச்சுத் தான் ஆகணும் புரிஞ்சுக்கோ... கஷ்டந்தான்! கடைசி முயற்சியா, உயிரை காப்பாத்தற ஒரே நோக்கத்துக்காகத் தான், உறுப்பை வெட்டி எடுத்துடறோம். இத புரிஞ்சுக்காம... சாகப் போறாளாம் சாக... சரி சரி அழாதே... அம்மா... இவள பத்திரமா பாத்துக்குங்க. உங்க கண் பார்வையிலேயே வச்சிட்டிருங்க. எனக்கு ஆஸ்பிடலுக்கு நேரமாச்சு, கிளம்புறேன்,'' என்று கூறி கண்களைத் துடைத்தாள், டாக்டர் சரிதா.

'இருபது வயது சின்னப் பெண்ணுக்கு இது பெரிய இடிதான். சிட்டுக்குருவி போல, கவலையில்லாமல் சிறகடித்துப் பறந்தவளை, இப்படி ஓர் நோய் வந்தா, சிறகைப் பிய்த்துப் போடும்!

'நெகுநெகுவென்ற உயரமும், தகதகத்த பருவமும், அப்பருவம் தந்த எழிலும், அதில் மதர்த்து, செறிந்த முன்னழகும், சின்ன இடையும், வாய்கொள்ளாச் சிரிப்பும், அவளை, கர்வ பங்கம் செய்தாற்போல இப்படி அழகைச் சிதைத்து விட்டதே... உயிரை விட அழகு முக்கியம் என நினைக்கும் இந்த வயதில், எந்த இளம் பெண்ணால் இதை தாங்க முடியும்... இதிலிருந்து இவள் மீண்டு வர வேண்டுமே... தெய்வமே... அவளுக்கு மனோபலத்தைக் கொடு...' என மனதில் வேண்டியபடி வெளியேறினாள் சரிதா.

இச்சம்பவம் நடந்து மாதங்கள் ஐந்தைக் கடந்து விட்டன. ஆனாலும், சஞ்சனாவிடம் பெரிதாய் மாற்றமில்லை. அழுகையோ, பேச்சுக்களோ இல்லை. எப்போதும் மவுனமாக, தன் அறைக்குள் அடைந்தே கிடந்தாள்.

வீட்டில் இருக்கும் நேரங்களில் அவளை இழுத்து வைத்து பேசுவாள் சரிதா.
'வாழ்க்கையில... இழப்புன்னு ஒண்ணு வந்தப்பறம் சாதிச்சவங்க தாண்டீ அதிகம். நடிகை சுதா சந்திரனைப் பாரு... காலையே பாதி வெட்டி எடுத்த பின்பும், அவங்க வாழ்க்கைய ஜெயிக்கலயா... யுவராஜ் சிங் மன உறுதியோட மீண்டு வரலயா... வெளியே வா சஞ்சு... இப்போ இருக்கிற நவீன வசதிகளை வெச்சு, இதை வெளிப்பார்வைக்கு, வித்தியாசம் தெரியாதபடி சரி செய்ய முடியும். இதையே நினச்சு குமையாதே... நீ சாதிக்கப் பிறந்தவ... எப்பவும் மூடிக் கிடக்கிற கதவையே வெறிச்சு, ஏக்கமா பாத்துட்டு இருந்தா, திறந்திருக்கிற கதவு கண்ணுல படாமலே போயிடும்...' என்று பலவாறு நம்பிக்கை ஊட்டுவாள் சரிதா.

ஆனால், காது அவற்றைக் கேட்டாலும், அவள் மனம், சுயபச்சாதாபத்தில், எரிமலையாய் வெடித்துச் சிதறுவதற்கு நேரம் பார்த்தது.
நிராசையும், விரக்தியும் போட்டி போட்டு அவளைப் படுத்தி எடுத்தன. 'மற்றவர்களுக்கு கேலி பொருளாகி விட்டோமே...' என்ற உளைச்சலில், தவித்தது மனம். 'வாழத் தகுதியற்றவளாகி விட்டோமே...' என்ற எண்ணமே பிரதானமாக உழன்றது. 'குரூபியாகிவிட்ட நாம் வாழவே கூடாது; செத்துப் போயிடணும்...' என்ற எண்ணமே, அவளை ஒரு விஷவாயு போல சுற்றிச் சுற்றி வந்து, சரியான நேரத்துக்கு வேட்டை நாய் போலக் காத்து கிடந்தது.
பிரதோஷம் என்பதால், கோவிலுக்குப் சென்றிருந்தாள் அம்மா. 'வர லேட்டாகும்...' என்று தகவல் தெரிவித்திருந்தாள் சரிதா. இதுதான் சரியான நேரம் என முடிவெடுத்து, சமையல் அறையில் நுழைந்து, கத்தியை தேடி எடுத்தாள் சஞ்சனா. சோபாவில் அமர்ந்து, இடது கையை வாகாக நீட்டி, வலது கையை உயர்த்தி, கண்களை மூடி, வெறியுடன் இறக்க...

காலிங்பெல் கர்ணகடூரமாய் ஒலித்தது.

'ச்சே...' என்று கத்தியை தூர எறிந்து, கதவைத் திறந்தாள் சலிப்புடன்!
அம்மா இல்லை... யாரோ வயதான பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.
''யாரு நீங்க... என்ன வேணும்?''

''டாக்டர் சரிதா வீடு இது தானுங்களே...''

''ஆமா... அவங்க ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க; அங்க போங்க,'' என்று கூறி கதவை சாத்த முனைந்தாள் சஞ்சனா.

''அம்மாடி... டாக்டரம்மாவோட தங்கச்சிய பாக்கணும்...'' என்றாள் முதியவள்.
''நான் தான்... நீங்க யாரு?''

''நீதானாம்மா அது... தாயி... நீ தான், என் பேத்திய காப்பாத்தணும்...''
''பாட்டி... எங்கக்கா தான் டாக்டர்; நானில்ல...''

சாகப் போற வேளையில் இது என்ன தொல்லை என நினைத்து, எரிச்சலில் சுள் என்று பேசினாள். வந்தவள் அதைக் கண்டு கொள்ளாமல், ''என் பேத்திக்கும், உன் வயசு தான்; பாவி மகளுக்கு, மாருல புத்துகட்டி. அதுக்காக ஒரு பக்கத்தை எடுத்துடணும்ன்னு டாக்டர் சொன்னதும், விஷத்தைக் குடிச்சிட்டா என் பேத்தி. எப்படியோ காப்பாத்திட்டோம். நீ வந்து கொஞ்சம் எடுத்துச் சொல்லும்மா.''
''நானா... நான் வந்து...''

''உசிரை விட, உறுப்பு முக்கியமில்லன்னு அந்த வெத்து ஜென்மத்துக்கு, புரிய வை தாயீ... கல்யாணமாகாத சின்னப் பொண்ணான நீயே, மன உறுதியோட இதை ஏத்துகிட்டு நிக்கலயா... அந்த மனோ தைரியத்தை குடுத்து, அவளுக்கு பேசி புரிய வை. பொம்பளைக்கு எடுப்பான மார்பகம் அழகு, பெருமை தான். குழந்தைக்கு உசிர் ஊட்டுற அன்னப்பால் இருக்கிற இடம். ஆனா, அதுவே விஷமாப் போயிட்டா, என்ன செய்ய முடியும்... அதுக்காக உசிரையா விட நினைப்பாங்க... இந்த சின்ன வயசுலே இதுல இருந்து நீ மீண்டு வரலே... நீ தாம்மா எடுத்துச் சொல்லி புரிய வைக்கோணும்,'' என்றாள்.

''நானா...'' நிமிர்ந்து நின்றாள் சஞ்சனா. அதுவரை பேயாட்டம் ஆடிய அவள் மனம், 'சட்'டென நின்றது.

''ஆட்டோவுல தாம்மா வந்தேன். ஓரெட்டு வந்து பாத்துட்டு வந்திடு. நீ வந்து பேசுனா, என் பேத்தி தெளிஞ்சுடுவா. காய்ஞ்சு போன சருகான நானே போராடிட்டு இருக்கேன். என் பொண்ணு வயித்துப் பேத்திம்மா அவ. ஆத்தாளையும், அப்பனையும் விபத்துல வாரிக் குடுத்துட்டா. பச்சை மண்ண வளத்து, ஒருத்தன் கையிலே புடிச்சு குடுத்தேன். அந்த படுபாவி... இவ வயித்துல ஒரு புள்ளைய குடுத்துட்டு, எவளையோ இழுத்துட்டு ஓடிட்டான்.

''இந்த வயசுக்கு மேல, இவளுக்காகவும், இவ பெத்ததுக்காகவும் உசிர புடிச்சுகிட்டு நிக்கறேன். இவ என்னடான்னா சாகப் போறாளாம்... கையளவு மாமிசம் போனாத் தான் என்ன... உதறிட்டு, நிமிர்ந்து நிக்க வேணாமா, பெத்த புள்ளை மூஞ்சை பாக்க வேணாமா... இன்னா நியாயம்மா இது... நம்மை படைச்சவனுக்குத் தெரியாது... ஒவ்வொரு உசிரையும், ஒரு காரணத்துக்காகத் தானே படைச்சிருக்கான்!

''காரணமில்லாம காரியமில்ல; காரியமில்லாம காரணமில்லன்னு சொல்வாங்க. நமக்கு விதிச்சு வச்சுருக்கிற காலம் மட்டும் வாழ வேணாமா... பொசுக்குன்னு உசிர விட பாக்குறாளேம்மா...'' என்றவள், சட்டென உடைந்து அழுதாள்.

'ஓ... இதுதான் அக்கா சொன்னதா...' சஞ்சனாவுக்குள் ஏதோ, ஒன்று, 'மளுக்' கென்று உடைந்தது. திடீரென்று யாரோ திரியைத் தூண்டி விட்டாற் போல மனதில் வெளிச்சம் பரவியது.

''இதோ வந்திடறேன் பாட்டி... ஒரு நிமிஷம்!''

அவள் குரல், அவளுக்கே புதுமையாய் கேட்டது. நம்பிக்கைப் பூவொன்று, ஆயிரம் இதழ்களை விரித்தாற் போல, நடையில் சின்னதாக துள்ளல் பிறந்தது
'என் வாழ்வுக்கும் அர்த்தம் உண்டு... என் அங்கஹீனம் ஏகடியமோ, எகத்தாளமோ அல்ல, அது ஒரு உன்னதம். என்னாலும் கம்பீரமாக மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும்.

'கிழவி சொன்னது போல கையளவு மாமிசம் போனால் தான் என்ன... மனசு ஆரோக்கியமாய், வலிமையாய் இருந்தால் போதும்.

'இழப்பு இல்லை என்று எண்ணினால், எல்லாமே துச்சம். தொடுவதற்குத் தான் வானம் வரை, எல்லை இருக்கிறது. எல்லாமே, தொட்டு விடும் தூரம் தான்...' என நினைத்தவளுக்கு தன்னையறியாமல், அவள் இதழ்கள் ஒரு பாடலை, 'ஹம்' செய்தது.

ஆட்டோ வேகமெடுக்க, பார்க்கிற எல்லா காட்சிகளும், புத்தம் புதிதாய் தெரிந்தது.

July 22, 2017

இளவரசிக்கும் எனக்கும் டும் டும் ! - சிறுகதை


முன்னொரு காலத்தில் ஆரவல்லி மலைக்காட்டில் நிறைய பூதங்கள் இருந்தன. அந்தப் பூதங்களின் அரசனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் மீது உயிரையே வைத்திருந்தான் அரசன்.
அந்தக் காட்டில் யானை ஒன்று இருந்தது. அது மற்ற விலங்குகளுடனும், பறவைகளுடனும் இனிமையாகப் பழகியது.
ஒருமுறை அது உணவு தேடிச் சென்று கொண்டிருந்தது. வழியில் ஒரு மரத்தில் ஆந்தை ஒன்று அழுது புலம்புவதைக் கேட்டது.
""ஆந்தையே! உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல். என்னாலான உதவி செய்கிறேன்,'' என்று அன்பாகக் கேட்டது யானை.
""யானையே! எனக்குத் தட்டை முகமாம். முட்டை போன்று பெரிய கண்களாம். கர்ண கொடூரமான குரலாம். பார்ப்பதற்கு அவலட்சணமாக இருக்கிறேனாம். இப்படி எல்லாரும் என்னைக் கேலி செய்கின்றனர். அழகு இல்லாமல் பிறந்ததற்கு நானா காரணம்? எல்லாரும் என்னை வெறுக்கின்றனர். எனக்கு நண்பர்களே இல்லை. வாழவே பிடிக்கவில்லை,'' என்று குலுங்கிக் குலுங்கி அழுதது ஆந்தை.
""ஆந்தையே! உன்னைப் பற்றி யார் அப்படிச் சொன்னார்கள்? அவர்களுக்குப் பித்துத்தான் பிடித்து இருக்க வேண்டும். நீயும் மற்ற பறவைகளைப் போல அழகாகவே இருக்கிறாய்.
""உன்னைப் போன்று இரவில் இயங்கும் ஆற்றல் எந்தப் பறவைக்கு உள்ளது? நீ கண்ணை உருட்டிப் பார்க்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாமே... அற்பர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காதே... உன்னைப் பற்றி உயர்வாக நினை. நண்பர்கள் இல்லையே... என்று வருந்த வேண்டாம். நான் உன் நண்பனான இருக்கிறேன்,'' என்றது யானை.
அதன் இனிமையான பேச்சைக் கேட்டு, ஆறுதல் அடைந்தது ஆந்தை.
""யானையே! இப்படி யாரும் என்னிடம் அன்பாகப் பேசியது இல்லை. உண்மையான நண்பனான இருப்பேன். உனக்காக உயிரையும் கொடுப்பேன்,'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னது ஆந்தை.
அதன் பிறகு அவை இரண்டும், அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன.
வழக்கம் போல அன்றும் அவை இரண்டும் பேசிக் கொண்டிருந்தன.
அந்த வழியாக பூத அரசனும், இளவரசியும் வந்தனர்.
அங்கே யானையைப் பார்த்த இளவரசி, ""அப்பா! நேற்றிரவு என் கனவில் யானை ஒன்று வந்தது. நான் அதைக் கொன்று தின்றேன். அந்த கனவு உண்மையாகுமா? என்ற குழப்பத்தில் இருந்தேன்.
""நான் கனவில் கண்ட அதே யானை இங்கே நிற்கிறது. கனவு உண்மைதான் என்று தெளிவாகத் தெரிகிறது. நான் இந்த யானையைக் கொன்று தின்னலாமா? சொல்லுங்கள்,'' என்று கேட்டாள்.
""மகளே! பூதங்களாகிய நாம் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் துன்பம் தருவது இல்லை; எதிர்காலத்தைச் சொல்வதுதான் கனவு. கனவில் நீ இந்த யானையைக் கொன்று தின்று இருக்கிறாய். அதனால் இப்போது நீ இதைக் கொன்று தின்னலாம்.'' என்றான் பூத அரசன்.
அவர்களின் பேச்சைக் கேட்ட யானை, ""ஐயோ! என்ன செய்வேன்? உயிர் பிழைக்க வழி இல்லையே,'' என்று புலம்பியது.
நண்பனுக்கு வந்த ஆபத்தைப் பார்த்தது ஆந்தை. "எப்படியாவது அதைக் காப்பாற்ற வேண்டும். என்ன செய்வது? என்று சிந்தித்தது.
நல்ல வழி ஒன்று அதற்குத் தோன்றியது.
""ஆ! என் மனைவி எனக்குக் கிடைத்து விட்டாள். எவ்வளவு காலமாக அவளைத் தேடிக் கொண்டிருந்தேன். நான் பாடுபட்டது வீணாகவில்லை. பூத இவளரசி என் மனைவியாகப் போகிறாள். எனக்கும், அவளுக்கும் விரைவில் திருமணம் நிகழப் போகிறது,'' என்று அந்தக் காடு முழுவதும் கேட்குமாறு அலறியது.
அதன் அலறைக் கேட்டாள் பூத இளவரசி. தன் கணவனாகப் போகிறவன் யார் என்று குரல் வந்த திசையைப் பார்த்தாள்.
ஆந்தைதான் அப்படிப் பேசியது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தாள்.
""அப்பா! இந்த அவலட்சணமான ஆந்தை எனக்கும் அதற்கும் திருமணம் என்கிறதே... அது உண்மையா? நான் இந்த ஆந்தையைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்,'' என்று அழுதாள் அவள்.
""மகளே! அழாதே... எத்தனை அரசர்கள் உன்னைத் திருமணம் செய்யக் காத்திருக்கின்றனர்? இந்த ஆந்தைக்கு உன்னைத் திருமணம் செய்து வைப்பேனா? அது ஏதோ உளறுகிறது. அழுவதை நிறுத்து,'' என்றான்.
""அது எப்படி என்னைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லலாம். அதை விசாரியுங்கள்,'' என்று அழுதபடியே சொன்னாள்.
""நான் விசாரிக்கிறேன்!''
ஆந்தையிடம் சென்று, ""உனக்கும் என் மகளுக்கும் திருமணமா? ஏன் இப்படி உளறுகிறாய்? உனக்குப் பைத்தியமா?'' என்று கோபத்துடன் கேட்டான் பூத அரசன்.
""அரசே! நான் உளறவும் இல்லை. எனக்குப் பைத்தியமும் இல்லை. என்ன நடந்தது என்பதை உங்களிடம் சொல்கிறேன். நான் நாள்தோறும் தொடர்ந்து ஒரே கனவு கண்டேன்.
""அதில், எனக்கும் அழகிய இளவரசி ஒருத்திக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. கனவு உண்மையாகாது என்று அதைப் பொருட்படுத்தாமல் இருந்தேன். கனவில் பார்த்த அதே அழகியை நேரில் பார்த்தேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அவளிடம் என் கனவைச் சொல்லலாமா? வேண்டாமா? என்று குழம்பி நின்றேன். அவள் உங்களிடம் பேசியதைக் கேட்டேன்.
அவளும் கனவு ஒன்று கண்டிருக்கிறாள். அதை உங்களிடம் சொன்னாள்.
அதற்கு நீங்கள், "எதிர்காலத்தில் நடப்பதை முன் கூட்டியே சொல்வதுதான் கனவு. கனவில் கண்டது கண்டிப்பாக நடக்கும்' என்றீர்கள். இதைக் கேட்ட நான் என் கனவும் நனவாகப் போகிறது என்று பூரித்தேன். அழகான இளவரசி எனக்கு மனைவியாகப் போகிறாள் என்று குரல் கொடுத்தேன். எனக்கும், இளவரசிக்கும் எப்போது திருமணம் செய்து வைக்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டது ஆந்தை.
""எனக்கும், இந்த ஆந்தைக்கும் திருமணமா? அப்படித் திருமணம் நடந்தால், நான் உயிருடன் இருக்க மாட்டேன்,'' என் அழுது அடம் பிடித்தாள் அவள்.
""மகளே! கனவு கனவுதான். அது உண்மை என்று நம்புவது பைத்தியக்காரத்தனம். இந்த ஆந்தை கனவில் உன்னைத் திருமணம் செய்து கொண்டால் உண்மையில் நடக்குமா? கனவு பொய் என்பதை இதற்குப் புரிய வைப்போம். உன்னைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை அதுவே விட்டு விடும்.
""நீ இந்த யானையைக் கொன்று தின்பது போலக் கனவு கண்டாய். அதை உயிருடன் விட்டுவிடு. அதை இந்த ஆந்தை பார்த்துக் கனவு பொய் என்று அறியட்டும். பிறகும் உன்னைத் திருமணம் செய்து கொள்வதாக உளறட்டும். நாம் யார் என்பதை அதற்குக் காட்டுவோம்,'' என்றான் பூத அரசன்.
""அப்பா! கனவு பொய்தான். இந்த யானையைக் கொன்று, தின்பது போலக் கனவு கண்டேன். நான் அதைத் தின்னப் போவது இல்லை,'' என்றாள்.
""ஆந்தையே! கனவு பொய் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பாய். இளவரசியைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை விட்டுவிடு. மீண்டும் இப்படி உளறினால், உன் உடலில் உயிர் இருக்காது,'' என்றான் பூத அரசன்.
""அரசே! உங்களால் உண்மையைத் தெரிந்து கொண்டேன். இனி இப்படி உளறி திரிய மாட்டேன்,'' என்றது ஆந்தை.
அரசனும், இளவரசியும் அங்கிருந்து சென்றனர்.
தான் உயிர் பிழைத்ததை யானையால் நம்பவே முடியவில்லை.
ஆந்தையை நன்றியுடன் பார்த்த அது, ""இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்,'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னது.
""உயிர் காப்பான் தோழன். நண்பர்களுக்குள் நன்றி எதற்கு?'' என்று ஆந்தை அங்கிருந்து பறந்தது.
***

July 21, 2017

புத்திசாலி அணில் ! - சிறுகதை


உளுந்தூர் பேட்டை தோப்பில் ஏராளமான கொய்யா மரங்கள் இருந்தன. அந்த கொய்யா மரம் ஒன்றில் அணில் வசித்து வந்தது.

ஒருநாள், கொய்யா மரத்தில் அமர்ந்தபடி நன்கு கனிந்த கொய்யாப்பழம் ஒன்றினை சாப்பிட்டுக் கொண்டிருந்தது அணில்.
அந்த நேரத்தில் தோப்பினுள் குரங்கு ஒன்று நுழைந்தது. கொய்யாமரத்தில் இருந்த கொய்யாப்பழங்களை எல்லாம் பார்த்ததும் மிகவும் ஆச்சர்யமடைந்தது.

உடனே அது தன் கண்ணில் கண்ட கொய்யாப் பழங்களை எல்லாம் தாவி, தாவிப் பறித்தபடி தோப்பில் சுற்றித் திரிந்தது. குரங்கானது கொய்யாப்பழங்களை எல்லாம் நாசம் செய்வதைப் பார்த்ததும் அணில் மிகவும் கவலையடைந்தது.

""குரங்கே! கொய்யாப் பழங்களை எல்லாம் இப்படி நாசப்படுத்துகிறாயே! உனக்குத் தேவைப்படுகிற கொய்யாப் பழத்தை மட்டும் சாப்பிட்டுச் செல்லலாமே!'' என்றது.

""அணிலே! இந்தத் தோப்பு உனக்கே சொந்தமானது என்று நினைத்துக் கொண்டாயா? நான் என்னுடைய விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வேன். என் நண்பர்களை எல்லாம் அழைத்து வந்து இந்த கொய்யாப் பழங்களை எல்லாம் சேதப்படுத்துவேன். நீ அந்தக் காட்சியைப் பார்!'' என்று கூறியபடி கோபத்துடன் அந்தத் தோப்பை விட்டு வெளி யேறியது.
"குரங்கிடம் நாம் நியாயத்தை தானே எடுத்துரைத்தோம்! ஆனால், அதோ நம்மீது தேவையில்லாமல் ஆத்திரப்பட்டு நண்பர்களையும் அழைத்து வந்து கொய்யாப்பழங்களை எல்லாம் சேதப்படுத்துவேன் என கூறிச் செல்கிறதே! ஒருவேளை அது தன்னுடைய நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வந்து கொய்யாப்பழங்களை சேதப்படுத்தி விடுமோ... இதனை நாம் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்' என்று மனதிற்குள் நினைத்தது அணில்.

உடனே தோப்பை விட்டு வேகமாக புறப்பட்ட அணில், ஓர் மலைப் பகுதியை வந்தடைந்தது. அந்த மலைப்பகுதியில் ஓர் பாறையின் மீது கழுகு ஒன்று அமைதியுடன் அமர்ந்திருந்தது.

அணில் அமைதியுடன் அந்தக் கழுகின் முன்னே போய் நின்றது.
""கழுகாரே வணக்கம்!'' என்றது அணில்.

""அணிலே! வா! வா! நலமாக இருக்கிறாயா? நானும் உன்னைப் பார்க்க வேண்டுமென்று நெடுநாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உன் இருப்பிடம் எனக்கு எதுவென்று தெரியவில்லை. அதனால்தான் நான் உன்னை சந்திக்க வரவில்லை!'' என்றது கழுகு.

""கழுகே! எனக்கு ஒரு உதவி தேவை... செய்வாயா?'' என்றது அணில்.
""அணிலே! நாம் எத்தனை நாட்களாக பழகி வருகிறோம். நீ என்ன உதவி வேண்டுமானாலும் கேள்! நான் அந்த உதவியை உனக்காக இனிதாக செய்து முடிக்கின்றேன்,'' என்றது கழுகு.

உடனே நடந்த விஷயத்தை கூறியது அணில்.

""ஒருவேளை அது நாளைக்காலையில் தனது நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு கொய்யாத்தோப்பினை சேதப்படுத்த வரலாம். அந்த நேரத்தில் நீ உன்னுடைய நண்பர்களோடு வந்து குரங்குகளை தடுத்திடு,'' என்றது அணில்

""அணிலே! மரங்களை எல்லாம் பாதுகாப்பதும் நம் போன்ற உயிரினங்களின் கடமை தானே! நாளைக் காலையில் குரங்குகள் வருவதற்கு முன்னரே நான் எனது நண்பர்களுடன் அந்த கொய்யாதோப்பிற்கு வந்துவிடுவேன். ஆனால், அந்தக் கொய்யாத்தோப்பு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை மட்டும் நீ எனக்குத் தெரியப்படுத்திடு,'' என்றது கழுகு.

""கழுகே! இந்த மலையடிவாரத்தில் இருந்து நீ மேற்கு பக்கமாக வந்தால் ஓர் ஒற்றைத் தென்னைமரம் நின்று கொண்டிருக்கும். அந்த தென்னை மரத்தின் வடக்கு பக்கமாக சிறிது தூரம் பறந்து வந்தால், நீ கொய்யாத் தோப்பினை வந்தடையலாம்,'' என்றது அணில்.

""இது போதும் அணிலே! நான் இந்த அடையாளங்களின்படியே என் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு மிகவும் எளிதாக அந்த கொய்யாத்தோப்பினை வந்தடைவேன். கொய்யா மரங்களை அழிக்க துடித்துக் கொண்டிருக்கும் அந்த குரங்கிற்கும், அதன் கூட்டத்திற்கும் நாம் சரியான பாடம் புகட்டலாம்,'' என்றது கழுகு.

மறுநாள் கழுகானது தனது நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு அணில் கூறிய அடையாளத்தின் படியே கொய்யா மரத் தோப்பினை வந்தடைந்தது.

அந்த கொய்யாமரங்களின் பின்னே அணிலும், மற்ற கழுகுகளும், அணிலின் நண்பனான கழுகும் மறைந்திருந்தன. சிறிது நேரத்தில் குரங்குகள் எல்லாம் மிகவும் உற்சாகத்துடன் தோப்பிற்குள் நுழைந்தன.

அணிலுடன் போட்டியிட குரங்கானது முதலில் வந்து நின்றது.

""அணிலே! நீ என்னை ஏளனம் செய்தபடி அறிவுரை கூறினாயே! நீ எங்கே இருக்கிறாய்? இதோ நானும் என் நண்பர்களும் வந்து இந்தத் தோப்பினை அழிக்கப்போகிறோம்,'' என்றது குரங்கு.

உடனே அணில் மறைவிடத்தில் இருந்த தனது கழுகு நண்பனை நோக்கியது.
""நண்பா! இதுதான் சரியான சமயம்! நாம் தாமதிக்காமல் தாக்குதலைத் தொடங்கிவிட வேண்டியது தான்,'' என்றது அணில்.

உடனே மறைவிடத்தில் இருந்த கழுகுகள் எல்லாம் பறந்து வந்து, குரங்குகளை தாக்கத் தொடங்கின.

குரங்குகளோ அந்தத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஓட்டமெடுத்தன.
அதன் பின்னர் அவைகள் அந்த கொய்யாத் தோப்பு பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை!

கழுகுகள் எல்லாம் ஒன்று சேர்ந்தபடி அணிலைப் பாராட்டின.

""அணிலே! நல்லறிவோடு செயல்பட்டு அழகான சாகசம் ஒன்றினை நிகழ்த்தி விட்டாய்! எங்களை எல்லாம் அழைத்து வந்து நீ இந்த சாகசச் செயலினை செய்து இங்கே இருக்கும் மரங்களை எல்லாம் காப்பாற்றி விட்டாய்! இந்தப் புண்ணியமானது உன்னைச் சேர்ந்துவிடும்'' என்று கூறியபடி தங்கள் இருப்பிடத்திற்குப் புறப்பட்டுச் சென்றன கழுகுகள்.

குட்டீஸ்... அணில் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் புத்தியை பயன்படுத்தி எத்தனை பெரிய சாகசம் செய்துவிட்டது பார்த்தீர்களா.... நீங்களும் அப்படித்தான் இருக்கணும் சரியா?

July 20, 2017

இதோ ஒரு உண்மைச் சம்பவம்: கணவனிடம் இதைப் பெற ஏங்கும் பெண்களுக்கு ?


ராணி அன்று தன் கணவனுக்கு பிடித்த மீன் குழம்பு சமைத்தாள்...!!

இன்று எப்படியும் கணவனிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்... தெரு முழுவதும் மீன் குழப்பு வாசனை.. கணவன் குமார் வந்ததும்..ராணி வேகமாக வந்து...குடிக்க தண்ணீர் தந்து, சாப்பிட அமர சொன்னாள்..!!

ராணி சாப்பாடு பரிமாரினாள்.. குமார் சாப்பிட தொடங்கினான்.

ராணி கேட்டாள்.. "என்னங்க குழம்பு எப்படி இருக்கு"..? என்று

குமார்.. "நல்லா இருக்கு, ஆனாலும் எங்க அம்மா கைப்பக்குவம் உனக்கு இல்ல..

எங்கம்மா வைப்பாங்க பாரு மீன் குழம்பு.. தெருவே மணக்கும்... ருசி அப்பப்பா.. சூப்பரா இருக்கும் என்றான்..!!

அம்மா குழம்பின் ருசியை பாராட்டி...சாப்பிட்டு முடித்து எழுந்தான்..!!

ராணிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..கணவன் தன் குழம்பின் ருசியை பாரட்டாததை நினைத்து..

'எப்ப பாரு அம்மா..அம்மா'னு.. அவரு அம்மா'வ தான் தூக்கி வச்சி பேருவாரு..!!' என்று முணு,,முணுத்தாள்.!!

அப்போது ராணியின் 15 வயது மகன் சாப்பிட வந்தான்...ராணி சாதம் எடுத்து வைத்தாள்... மகன் ஒரு வாய் சாதம்.. சப்பிட்டு விட்டு தன் அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான்..!!

அம்மா சூப்பர் மா.. எப்படிம்மா இப்படி சமைக்குறீங்க..? தெருவே மணக்குதும்மா..!! உங்க அளவுக்கு யார்னாலையும் மீன் குழம்பு வைக்க முடியாதும்மா... என்று பாராட்டினான்..!

ராணிக்கு புரிந்தது... ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும், எவ்வளவு ருசியாய் சாப்பிட்டாலும், தன் தாயின் குழம்பை மட்டும் தான் அதிகம் பாராட்டுவான் என்று..

நம் மகனும் அம்மா.. அம்மா என்று தானே உயர்த்தி பேசுகிறான்.. மகன் பேசுவது தவறு இல்லையென்றால்.. கணவன் பேசியதும் தவறில்லை தான்.. என்று புரிந்து கொண்டாள்..!!

இப்படி புரிந்து கொள்ளும் ஒரு அன்பான மனைவி அமைந்தால் அவளும் ஒரு அம்மா தான் கணவனுக்கு...

டூ இன் ஒன் - உண்மை நிகழ்ச்சி


கதை ஒன்று

ஒரு சிறு பையன். அவனுக்கு வயது பதின்மூன்றுதான் இருக்கும். அவன் நன்றாக வளர்ந்திருக்கவும் இல்லை; திடகாத்திரமாகவும் இல்லை; குள்ளமாக, மெலிதாக இருந்தான்.

அந்த வயதில் அவன் எட்டாவது அல்லது ஒன்பதாவது வகுப்பில் படிப்பதாகவே எல்லாரும் எண்ணுவர். ஆனால், அவன் எட்டாவது ஒன்பதாவது வகுப்புகளை எப்போதோ கடந்து விட்டான். அப்படியானால், அவன் எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கிறானோ? இல்லை. அதையும் கடந்து,

"இன்டர்மீடியட்' வகுப்பையும் கடந்து பி.ஏ., வகுப்புக்கு வந்து விட்டான். ஆம், அவன் சென்னை மாநிலக் கல்லூரியில் (பிரஸிடென்ஸி காலேஜ்) பி.ஏ., வகுப்பில் சேர்ந்து விட்டான்.

அன்று அக்கல்லூரி யின் ஆங்கிலப் பேராசிரியராயிருந்த எலியட் என்பவர் பி.ஏ., வகுப்பிற்குள் வந்தார். தன் இடத்தில் போய் <உட்கார்ந்ததும், வகுப்பை ஒரு பார்வை பார்த்தார். அப்போது அவருடைய கண்களில் அந்தப் பதின்மூன்று வயதுப் பையன் தென்பட்டான். உடனே அவர், ""யாரது இந்தப் பொடியன்? தவறுதலாக இங்கே வந்து விட்டானோ!'' என்று சந்தேகப்பட்டார்.

பிறகு அந்தப் பையனைப் பார்த்து, ""ஏனப்பா, நீ யார்? இங்கே எதற்காக வந்தாய்?'' என்று கேட்டார்.

""நான் இந்த வகுப்பில்தான் சார் படிக்கிறேன்,'' என்றான் அந்தப் பையன்.

""என்ன, இந்த வகுப்பில் படிக்கிறாயா! உனக்கு என்ன வயது?''

""பதின்மூன்று சார்''

""பதின்மூன்றா! சரி, நீ "இன்டர்' எங்கே படித்தாய்?'"

""வால்டயரில் சார்!''

""உன் பெயர் என்ன?''

""ராமன்''

இவற்றைக் கேட்டதும், அந்தப் பேராசிரியர் மிகவும் ஆச்சரியப்பட்டார். அவர் மட்டும்தானா ஆச்சரியப்பட்டார்? எல்லாருமே ஆச்சரியப்பட்டனர். அன்று முதல் ஆசிரியர்கள் யாவரும் அவனிடத்தில் அதிகமாக அன்பு காட்டினர். அவன் விஷயத்தில் மிகவும் அக்கறை செலுத்தினர்.

இப்படி, தனது பதின்மூன்றாவது வயதிலேயே எல்லாருடைய உள்ளத்தையும் கவர்ந்த அந்த ராமன் யார்? வேறு யாருமல்ல; நோபல் பரிசு பெற்ற நம் தமிழ் நாட்டு விஞ்ஞானி சர்.சி.வி.ராமனேதான்.

கதை இரண்டு

அந்தப் பள்ளிக்கூடத்தில் அடிக்கடி விழாக்கள் நடைபெறும். ஒவ்வொரு விழாவிலும் மாணவர்கள் ஏதேனும் ஒரு நாடகம் நடத்துவர். அந்த நாடகங்கள் ஒவ்வொன்றிலும் சிறு பையன் தவறாமல் நடித்து வருவான். ஒரு நாடகத்தில் அவன் இளவரசர் வேடத்தில் வருவான். இன்னொரு நாடகத்தில், ஆங்கிலச் சிப்பாய் வேடத்தில் வருவான். மற்றொரு நாடகத்தில், அவன் ஜமீன்தாராக வருவான். எந்த வேடம் போட்டாலும் அவனுக்கு அழகாயிருக்கும்; மிகவும் பொருத்தமாயிருக்கும்.

ஒருவனுக்கு அழகும் வேஷப் பொருத்தமும் இருந்து விட்டால் போதுமா? படிப்பு வேண்டாமா? ஒழுக்கம் வேண்டாமா?

கட்டாயம் வேண்டும் அல்லவா? அந்த சிறுவனுக்கு அவையெல்லாம் இருந்தன. வகுப்பிலே அவன்தான் முதல்வனாக இருந்தான். நல்ல ஒழுக்கம் உள்ளவனாகவும் இருந்தான்.

அவன் மாலைப் பொழுதில் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவது வழக்கம். அந்த மாணவர்களில் சிலர் அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பேசுவர். இது அந்தச் சிறுவனுக்குப் பிடிக்காது.

""ஏன் இந்த மாதிரியெல்லாம் பேசுகிறீர்கள்? இதனால், <உங்களுக்கு என்ன லாபம்?'' என்று அவர்களைச் சிறிது கோபத்தோடு கேட்பான்.

ஒருநாள் விளையாடும்போது அந்தச் சிறுவனே ஒரு கெட்ட வார்த்தையைக் கூறி விட்டான். வேண்டுமென்று அவன் கூறவில்லை. தவறுதலாக அந்த வார்த்தை அவனது வாயிலிருந்து வெளிவந்து விட்டது. விளையாட்டு மும்முரத்தில் யாரும் அவன் பேசியதைக் கவனிக்க வில்லை. ஆனாலும் அவன் தன் தவறை நினைத்து வருந்தாமலில்லை. விளையாட்டு முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஓரிடத்தில் அவன் நின்றான்.

"கெட்ட வார்த்தை பேசக் கூடாது என்று நான் மற்றவர்களுக்குக் கூறி வருகிறேன். ஆனால். நானே இன்று கெட்ட வார்த்தை பேசி விட்டேன்! இது பெரும் தவறல்லவா? இனி, இந்த மாதிரி ஒரு நாளும் பேச மாட்டேன், இது சத்தியம்!' என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான்! அதன் பிறகு அவன் கெட்ட வார்த்தை பேசியதே இல்லை!

சிறுவயதிலேயே ஒழுக்கத்திற்கு அவ்வளவு தூரம் மதிப்புக் கொடுத்ததால் தான், பிற்காலத்தில் அவன் மிகப் பெரிய அறிஞனாக விளங்கினான். ஒரு சிறந்த தேச பக்தனாகத் திகழ்ந்தான்; அந்தச் சிறுவனின் பெயர்தான் தாதாபாய் நவுரோஜி.

நவுரோஜி வகுப்பில் மட்டும்தானா முதல்வராயிருந்தார்? பொதுவாழ்விலும் முதல்வராகவே விளங்கினார். லண்டன் காமன்ஸ் சபையில் அங்கத்தினராகயிருந்த முதல் இந்தியர் நவுரோஜிதான்! பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் பேராசிரியராயிருந்த முதல் இந்தியர் நவுரோஜிதான்! பம்பாய் நகரில் பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்றை முதல்முதலில் ஏற்படுத்தியவரும் நவுரோஜிதான். இவை மட்டும் தானா? காங்கிரஸ் மகாசபையை ஏற்படுத்திய முதல் தலைவர்களுள் நவுரோஜியும் ஒருவராக இருந்தார். "சுயராஜ்யம்' என்ற வார்த்தையை முதலில் உபயோகப்படுத்தியவரே நவுரோஜிதான்!

July 19, 2017

கழுகு, பருந்து, குயில் ! - சிறுகதை


மகேந்திரவர்மன் ஒரு பெரிய நாட்டின் அரசன். அவன் ஆட்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் இருந்தன. அவற்றை எல்லாம் அவன் தன் வீரத்தால் சேர்த்தான். அவனுக்கு மூன்று ஆண்மக்கள் இருந்தனர். மூவரும் மூன்று விதமானவர்கள். அவர்கள் நோக்கையும், போக்கையும் பார்த்து மகேந்திரவர்மன் மிகுந்த கவலை கொண்டான்.

"தான் அரும்பாடுபட்டு விஸ்தரித்து வைத்திருக்கும் இந்த நாடு, தனக்குப்பின் என்னவாகும்? இவர்கள் அதைத் திறமையாக நிர்வாகம் செய்வார்களா அல்லது பகைவர் கொண்டு போக விட்டு விடுவார்களா?'

மகேந்திரவர்மன் மிகுந்த கவலையோடு, இதைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தான். அப்போது அவனது நண்பர் ஒருவர் அங்கு அவனைக் காணவந்தார். அவருக்கு அரசனை அந்த நிலையில் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.
""மகேந்திரவர்மனே! என்ன நடந்தது. ஏன் இப்படி இடி விழுந்தது போல் அமர்ந்திருக்கிறீர். எதுவானாலும் என்னிடம் சொல்லுங்கள். நாம் யோசித்து ஒரு தீர்வு கண்டுபிடிப்போம்,'' என்று ஆறுதலாகக் கூறினார்.

""என் யோசனை எல்லாம் எனக்குப் பிறகு இந்தப் பிள்ளைகள் எப்படி இந்த அரசைக் கட்டி ஆளப்போகின்றனர் என்பதே! இவர்கள் வலிமையாகவும், புத்திசாலிகளாகவும் இல்லாவிட்டால், இந்த நாட்டைப் பகையரசர்கள் படையெடுத்து அழித்துவிடுவார்களே! இவர்களில் யார் இந்த நாட்டின் அரசனாக வந்தால் இந்த அரசு காப்பாற்றப்படும்?'' என்று யோசனையோடு கூறினான்.

அரசனின் நண்பனும் புத்திசாலியுமான அவர், ""அரசே, கவலைப்பட வேண்டாம். உங்கள் பிள்ளைகளை ஒவ்வொருவராக அழையுங்கள். அவர்களிடம் சாமர்த்தியமாகச் சில கேள்விகளைக் கேட்கிறேன். அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களில் யாரை அரசனாக்கினால் நாடு முன்னேறும் என்பதைத் தீர்மானிக்கிறேன். அதற்கு எனக்குத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்,'' என்று கேட்டார்.

அரசரும் அவருக்கு அனுமதி வழங்கினார். அவர் உடனே அரசனின் மூத்த மகனை அழைத்தார். அவன் மிக உயரமானவனாகவும், திடமானவனாகவும் விளங்கினான். ஆனால், அவன் நடையிலும், பார்வையிலும் ஒரு தேவையில்லாத அலட்சியம் தெரிந்தது. அவனிடம் மன்னனின் நண்பர்,""இளவரசே, உங்களைப் பார்த்தால் பெரும்வீரர் என்று தோன்றுகிறது. இருப்பினும் நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் இறைவனின் ஆணைப்படி உங்களை ஒரு பறவையாக மாற்ற விரும்பினால், என்ன பறவையாக மாற விரும்புவீர்கள்?'' என்று கேட்டான்.

மூத்த இளவரசன் ஒரு நிமிடம் யோசித்தான். அடுத்த வினாடி, ""நான் ஒரு கழுகாகப் மாற விரும்புவேன். ஏனென்றால், அதைப் பார்த்துதான் மற்றப் பறவைகள் பயப்படும். அருகில் நெருங்கியே வராது,'' என்றான்.

""அறிவாளி!'' என்று அவனை அனுப்பி விட்டு, இரண்டாவது இளவரசனை அழைத்தார். அவனும் நல்ல உயரமானவன். அவன் பார்வையிலேயே பராக்கிராமம் தெரிந்தது. அவன் கைகளை வீசி வேகமாக வந்து அவர்கள் எதிரே நின்றான். அவனிடமும், ""அறிவாளி இளவரசே, இறைவன் உங்களை இப்போது பறவையாக மாற்ற விரும்பினால் நீங்கள் என்ன பறவையாக மாற விரும்புவீர்கள்?'' என்று கேட்டான்.

அதற்கு அவன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு, ""நான் பருந்தாகத்தான் பிறப்பேன். ஏனென்றால், அதுதான் பறவைகளின் அரசனாக இருக்கிறது. அதனால் அதற்கு நல்ல மரியாதை கிடைக்கிறது,'' என்றான்.

""அறிவாளி!'' என்று அவனையும் அனுப்பிவிட்டு, அடுத்து மூன்றாவது மகனை அழைத்து வரச் செய்தார். அவன் பெயர் ஜனார்தன். அவன் வரும்போதே உற்சாகத்துடனும், சிரித்த முகத்துடனும் வந்தான். வந்ததும் நண்பரின் குடும்பத்தினரின் நலனை விசாரித்தான். அவனிடமும், ""அறிவாளி இளவரசே, இப்போது இறைவன் உங்களை ஒரு பறவையாக மாற்ற விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் எந்த பறவையாக மாற விரும்புவீர்கள்?'' என்று கேட்டார்.

ஜனார்தன் சிறிது நேரம் யோசித்தான்.

""ஐயா, இறைவன் என் விருப்பப்படி என்னை மாற்றுவதாக இருந்தால், நான் ஒரு குயிலாகப் பிறக்க ஆசைப்படுகிறேன். அது தன்னை எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளாது. ஆனால், தன் இசையால் அது எல்லாரையும் மகிழ்விக்கும். அதே சமயத்தில், அது சாதுவான பறவை. யார் வம்பு, தும்புக்கும் போகாது. ஆகையால் அதற்கு தீமைகளும் வராது,'' என்று பொறுமையாகக் கூறினான்.

மன்னனும், நண்பரும் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த பார்வையால் பார்த்துக் கொண்டனர். பின்பு ஜனார்தனை அனுப்பி விட்டு, அவர்கள் பேசத் தொடங்கினர்.

""உங்கள் மூத்தமகன் மிகவும் வீரம் உள்ளவன். துணிச்சலாக சில காரியம் செய்து தனக்கென்று ஒரு பெயரை ஏற்படுத்திக் கொள்வார். இறுதியில் தங்கள் நண்பர்களாலேயே வெறுக்கப்பட்டு அவர்களாலேயே பழிவாங்கப்படுவார். அவர் தனது கடைசி நாட்களை சிறையில் அனுபவிக்க வேண்டி வரலாம்!''

""உங்கள் இரண்டாவது மகன் மிகவும் சாமர்த்தியசாலி. குடும்பப் பெருமையை, பாரம்பரிய நற்பெயரைக் காப்பாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். இருப்பினும், அவரது ராஜதந்திரமான செயல்களால் இறுதியில் அவர் பல விரோதிகளைச் சம்பாதித்துக் கொள்வார். நேர்மைக்கு அவரிடம் பஞ்சம் இருக்கும். அவர் செய்யும் மறைமுகமான செயல்களே அவர்களுக்கு விரோதிகளைத் தேடித் தந்துவிடும். அவரது இறுதி நாட்களும் கூடப் பரிதாபத்துக்கு உரிய நாட்களாகவே இருக்கும்!''

""உங்கள் மூன்றாவது மகன் தன்னலம் கருதாது எல்லாரையும் நேசிப்பவர். அவர் எல்லாராலும் நேசிக்கப்படுவார். அவர் யாரிடமும் சண்டைக்குப் போகமாட்டார். அவரை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அனைவரும் நேசிப்பர். ஒரு காலத்தில் தங்களைக் காட்டிலும் அவர் அதிக நாடுகளுக்கு அதிபதியாக இருப்பார். அவர் மறைவு மிக அமைதியாகவும், எல்லாராலும் துக்கப்படக்கூடியதாகவும் இருக்கும்,'' என்றார்.

அந்த விஷயம் அன்று அத்தோடு முடிந்து போனது.

மூன்று இளவரசர்களும் வாலிபர்களாக வளர்ந்து யாராலும் ஜெயிக்க முடியாத பராக்கிரமசாலிகளாக மாறினர்.

நாட்கள் உருண்டோடி மாதங்களாகி, அவையும் வருடங்களாக ஓடி மறைந்தன. மன்னன் மகேந்திரவர்மன் இப்போது மிக வயோதிகனாகி விட்டான். அவரை வியாதிகள் மொய்த்துக் கொண்டன. கடைசியாக அவர் படுத்த படுக்கையானார். அவர் இறுதிகாலம் வந்தபோது மீண்டும் தன் ராஜ்ஜியத்தை யாரிடம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற குழப்பம் உண்டானது. உடனே தனது புத்திசாலி நண்பன் பல ஆண்டுகளுக்கு முன் தன் பிள்ளைகளைப் பற்றி அறிந்து சொன்னது நினைவுக்கு வந்தது.

தன் மூன்று பிள்ளைகளையும் அழைத்து அவர்களிடம் தனது கருத்தைச் சொன்னார். மூத்த புதல்வனை அருகில் அழைத்து, ""அப்பா, உனக்கு நம் நாட்டிலிருந்து மிக தூரத்தில் நான் வென்று இதுவரை என் ஆளுகையின் கீழ் வைத்திருக்கும் மிகப் பெரிய மாளவநாட்டை அளிக்கிறேன். அந்த நாட்டை ஆட்சி செய்து, நீ மேலும், மேலும் பேரும் புகழும் பெற வேண்டும்,'' என்றார்.

இரண்டாவது மைந்தனை அழைத்து, ""அப்பா, உனக்கு இப்போது நாம் ஆட்சி செய்துவரும் இந்த கூர்ஜர நாட்டை அளிக்கிறேன்; நீ மன்னனாக முடி சூட்டிக்கொண்டு, மக்களை நல்ல முறையில் ஆட்சி செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும்,'' என்று வாழ்த்தினார்.

மூன்றாம் மகனும், கடைசிப் பிள்ளையுமான ஜனார்தனை இறுதியாக அழைத்தார்.

""அப்பனே, உனக்குக் கொடுக்க என்னிடம் நாடு எதுவும் இல்லை. ஆனால், என்னிடம் இருக்கும் சேமிப்பிலிருந்து ஒரு பெரிய பெட்டி நிறைய தங்கத்தைக் கொடுக்கிறேன். நீ அதை வைத்து சமர்த்தாகப் பிழைத்துக் கொள்!'' என்றார்.
ஜனார்தனும், ""அப்படியே ஆகட்டும் தந்தையே,'' என்று அவரை புன்சிரிப்போடு வணங்கினான்.

சில நாட்களில் மகேந்திரவர்மன் இறந்தார்.

மகேந்திரவர்மனின் அறிவாளி நண்பர் சொன்னது போலவே, நடந்தது.
முதல் மகன் ஆரம்பத்தில் அவனது எல்லையற்ற பராக்கிரமத்தால் எல்லாரையும் கவர்ந்தான். நாளாக, நாளாக அவன் பராக்கிரமத்தைக் கண்டு அஞ்சியவர்கள் சதி செய்து அவனைச் சிறையில் அடைத்தனர். அவன் அங்கேயே தன் இறுதி நாட்கள் வரை இருந்து ஒருவரும் அறியாமல் மாண்டு போனான்.

இரண்டாமவன் மிக சாமர்த்தியமாக நடந்து கொள்வதாக நினைத்து எல்லாரையும் ஏமாற்றிக்கொண்டு இருந்தான். தனது மந்திரிகளையும், தளபதிகளையும் சிறிதும் யோசனை இல்லாமல் ஒருவரிடம் ஒருவர் பகை கொள்ளும்படியாக ஏவிவிட்டான். உண்மை வெளிவந்ததும் அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்த்து ஆத்திரமடைந்து அவனைச் சித்திரவதை செய்து நாட்டை விட்டே விரட்டி விட்டனர். அவன் தங்க நாடில்லாமல் நாடோடியாகத் திரிந்து ஏதோ ஒரு வெளிநாட்டில் இறந்துபோனான்.

ஜனார்தன் தன் பொறுமையைக் கைவிடாமல் மெதுமெதுவாக தனது அண்ணனின் ஆதிக்கத்தில் இருந்த கூர்ஜர நாட்டைப் பிடித்தான். அடுத்து சிறிது சிறிதாக மாளவ நாடும் அவன் கைக்கு வந்தது. மற்ற நாட்டு மக்களும் அவன் ஆளுகைக்குக் கீழ் இருப்பதைப் பெரிதும் விரும்பினர். நாளடைவில் அவன் பெருமை வெகுவாகப் பரவியது. சிறிது காலத்தில் பல நாடுகளையும் கைப்பற்றி, நல்ல முறையில் ஆட்சி செய்தான்.

July 18, 2017

பஞ்சு மெத்தை ! - சிறுகதை


கனகராஜ் தன் வயதான தாய், தந்தையுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தான். அவன் பக்கத்து ஊரில் இருந்த ஒரு இரும்பு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தான்.

அவன் வீட்டில் சகல வசதிகள் இருந்தும், அவன் படுக்கும் போது இரவில் அவனுக்கு தூக்கம் வருவ தில்லை. இதனால் அவன் கண்களெல்லாம் சிவந்து போயிருந்தன. இரும்பாலையில் வேலை பார்க்கும்போது அவனுக்கு தூக்கம் வரும். வேலை செய்யுமிடத்தில் தூங்கமுடியாதல்லவா? அதனால் தூக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு வேலை செய்தான்.

தூக்கம் இல்லாததால், அவன் சக தொழிலாளர்களிடம் எரிந்து விழுந் தான். அவனுடன் பேசுவதையும், பழகுவதையும் தொழிலாளர்கள் நிறுத்திக் கொண்டனர்.

இதனால் கனகராஜ் வீட்டிற்கு சோகத்துடன் வந்தான். அவனுடைய தந்தை அவனிடம் காரணம் கேட்டார்.

""இரவில் தனக்குக் கட்டிலில் படுத்தும் தூக்கம் வரவில்லை என்றும், அதனால்தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்ப தையும், இதனால் தன்னுடன் பணிபுரியும் தொழிலாளர்களுடன் கூட மகிழ்ச்சியாகப் பழக முடிய வில்லை என்றும், வேலை நேரத்தில் தூக்கம் வருகிறது,'' என்றும் தந்தையிடம் கூறினான்.

உடனே அவனுடைய தந்தை அவனை வீட்டிலிருக்கும்படிச் சொல்லிவிட்டு, நேராக பஜாருக்குச் சென்று ஒரு கட்டில் மெத்தையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.

""கனகராஜ் இன்று இரவு இதில் படு!'' என்று தன் மகனிடம் கூறினார்.

கனகராஜும் அன்று இரவு தன் தந்தை வாங்கி வந்த புதிய கட்டில் மெத்தையில் தூங்கினான். ஆனந்தமான தூக்கம் அவனுக்கு வந்தது. இப்படி தன்னை மெய்மறந்து அவன் ஒரு நாளும் தூங்கியதே இல்லை. அப்படி ஒரு தூக்கம் அன்று இரவு அவன் தூங்கினான்.

மறுநாள் காலையில் அவன் எழுந்த போது அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். உடல் நல்ல வலிமையோடு இருப்பதை உணர்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அவன் தந்தையைப் பார்த்து, ""அப்பா நம் வீட்டில் ஏற்கெனவே ஒரு கட்டில் மெத்தை இருந்தது. அதில் நான் தூங்கியும் வராத தூக்கம், நீங்கள் புதிதாக வாங்கி வந்த கட்டில்மெத்தை யில் படுத்தபோது என்னை மறந்து தூங்கி விட்டேன். இதன் ரகசியம் என்ன?'' என்று கேட்டான்.

""இந்த மெத்தையானது "இலவு' என்ற ஒரு மரத்தின் காய்களிலிருந்து கிடைத்த இலவம் பஞ்சு அடைத்த மெத்தையாகும். இந்த இலவம் பஞ்சு மிருதுவானது. உடலுக்கு இதமானது. இதில் தூங்கும்போது ஆழ்ந்த தூக்கம் வரும். நோயும் அணுகாது; நீ அவ்வையார் எழுதிய இலவம் பஞ்சில் துயில் என்னும் ஆத்திசூடிப் பாடலை இளமையில் படித்திருக்கிறாய் அல்லவா? இனிமேல் இந்த மெத்தையிலேயே நீ உறங்கு,'' என்றார்.

அன்று கனகராஜ் வழக்கம்போல வேலைக்குச் சென்றான். இரவில் நன்றாக தூங்கியதால் அன்று முழுவதும் அவன் உற்சாகமாக வேலை செய்தான். தன் சக தொழிலாளர்களுடன் இனிமையாகப் பேசினான். அனைவரையும் இலவம் பஞ்சு அடைக்கப்பட்ட கட்டில் மெத்தையில் தூங்குமாறு கூறினான். அவனுடைய பேச்சை அனைவரும் கேட்டனர்.

July 17, 2017

டாக்டர் முயல் - சிறுகதை


ஒரு கிழ ஆமை தன் குடும்பத்தோடு மரப்பொந்து ஒன்றில் வசித்து வந்தது. ஒரு சமயம், அந்த ஆமைக்குக் கடுமையான வியாதி. படுத்த படுக்கையாகக் கிடந்தது.

அந்தப் பக்கம் வந்த டாக்டர் முயல், உனக்குப் பாரிச வாயு வந்திருக்கிறது. ''நீ படுக்கையிலே பல மாதங்கள் இருந்து விடாமல் இருக்க மருந்து சாப்பிட வேண்டும் என் வீட்டிற்கு யாரையாவது அனுப்பு மருந்து கொடுத்து விடுகிறேன்,'' என்று ஆமையிடம் கூறியது.
ஆமையும் தன் வேலைக்காரன் நத்தையை, உடனே அனுப்பி வைத்தது.

மருந்து வாங்கச் சென்ற நத்தை, ஒரு மாதமாகியும் திரும்பி வரவில்லை.

டாக்டர் முயலும் அந்தப் பக்கம் வரவில்லை. டாக்டருக்கு என்ன கோபமோ என்னவோ என்று இருந்து விட்டது ஆமை.

டாக்டர் முயலும், ஆமைக்கு நம்மிடம் வைத்தியம் செய்து கொள்ள இஷ்டமில்லை போலிருக்கிறது என்று பேசாமலே இருந்தது.

நாளாக ஆக ஆமையின் உடம்பு மோசமாகியது. தலையை நீட்ட முடியாமல் தவித்தது. இந்தச் சமயத்தில் தான் ஆமையைப் பார்க்க வந்தது அதன் சிநேகிதன் நரி, நரியிடம் தன் குறையெல்லாம் சொல்லி அழுதது ஆமை.
''மருந்து வாங்கச் சென்ற நத்தை ஒரு மாதம் ஆகிறது. இன்னும் திரும்பியபாடில்லை,'' என்றது.

''போயும் போயும் நத்தைதானா உமக்கு அகப்பட்டது. அது போய்த் திரும்பி வரப் பத்து வருஷம் ஆகுமே... வேறு நல்ல ஆளா அகப்படவில்லை? நத்தையைப் போய் நீர் நம்பி, இப்படி உடம்பைக் கெடுத்துக் கொண்டீரே!'' என்று நரி இடி இடியென்று சிரித்தது.

''என்ன செய்வது, நத்தையை நம்பியது முட்டாள்தனம்!'' என்று வருத்தப்பட்டது ஆமை.

''போதும்! இது மாதிரியெல்லாம் என்னைப் பற்றிக் கேவலமாகப் பேசித் திட்டினால் நான் டாக்டரிடம் போகவே மாட்டேன்!'' என்ற குரல் கேட்டது.
ஆமையும், நரியும் திரும்பிப் பார்த்தன. கதவிடுக்கில் இருந்த நத்தை தலையை வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

''அடபாவி! நீ இன்னும் இந்த இடத்தை விட்டே நகரவில்லையா?'' என்று கேட்டு விட்டு, மூர்ச்சித்துப் படுக்கையில் சாய்ந்த ஆமை அதன்பிறகு எழுந்திருக்கவே இல்லை.

July 16, 2017

யார் மாப்ள?-புதிர் சிறுகதை


சாவூரில் வருண் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு தேவிகா என்ற மனைவியும், மாணிக்கம் என்ற மகனும், அவந்திகா என்ற மகளும் இருந்தனர்.
அவந்திகாவின் பேரழகைப் பற்றி மூன்று இளைஞர்கள் கேள்விப்பட்டனர்.

அவளைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் அவர்கள் மூவரும் சாவூர் வந்தனர்.
அவர்களில் முதலாமவனான கபிலன் அவந்திகாவின் தந்தையைச் சந்தித்தான்.

''எங்கு நடப்பதையும், அறியும் ஆற்றல் எனக்கு உள்ளது. உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள்,'' என்றான்.

மகிழ்ந்த வருண், ''இவ்வளவு திறமை வாய்ந்த உனக்குத்தான் என் மகள்,'' என்றார்.

இன்னொரு இளைஞனோ மந்திரவாதியாக இருந்தான். எங்கும் பறந்து செல்லும் தேர் ஒன்று அவனிடம் இருந்தது.

அவந்திகாவின் தாய் தேவிகாவை சந்தித்தான்.

''அம்மா! நான் ஒரு மந்திரவாதி. என்னிடம் பறக்கும் தேர் ஒன்று உள்ளது. உங்கள் மகளைத் திருமணம் செய்ய வந்துள்ளேன்,''என்றான்.

''என் மகளுக்குப் பொருத்தமானவன் நீதான். உங்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்கிறேன்,'' என்றாள் அவந்திகாவின் தாயார்.

மூன்றாமானவனோ மாவீரனாக இருந்தான். அவன் பெயர் அமரேஷ். அவன் அவந்திகாவின் அண்ணனை சந்தித்தான்.

''நான் அஞ்சா நெஞ்சன். எந்த வீரச் செயலையும் துணிவுடன் செய்வேன். உன் தங்கையைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்,' என்றான்.

''வீரத்தை மதிக்கத் தெரிந்த மாணிக்கம், என் தங்கையை உனக்கே திருமணம் செய்து வைக்கிறேன். என் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் மீற மாட்டார்கள்,'' என்றான் அண்ணன்.

மகிழ்ச்சியான செய்தியைச் சொல்வதற்காக அவந்திகாவின் தந்தையும், அண்ணனும் வீட்டிற்கு வந்தனர். அவந்திகாவின் தாயாரும் வந்து சேர்ந்தாள்.

மூவருமே அவந்திகாவிற்கு தாங்கள் தேர்ந்தெடுத்த மணமகனைப் பற்றி தெரிவித்தனர்.

அவர்களில் யாரை மணப்பது என்று அறியாமல் குழம்பினாள் அவந்திகா.
மூவருமே தாங்கள் தேர்ந்தெடுத்த மணமகனைத்தான் நீ மணக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். யாரும் மற்றவர்களுக்காக விட்டுத் தரத் தயாராக இல்லை.

அப்போது, பயங்கரமான அரக்கன் ஒருவன் அங்கே தோன்றி, அவந்திகாவை தூக்கியவாறு வானத்தில் பறந்து மறைந்தான்.

எதிர்பாராதது நடந்ததைக் கண்டு மூவரும் திகைத்தனர்.

திருமணம் பேச வந்த மூன்று இளைஞர்களையும் அழைத்தார் வருண்.

அவர்களிடம் நடந்தை கூறி ''உங்களில் யார் என் மகளை மீட்டு வருகிறீரோ அவரே மணமகன்,'' என்றார்.

உடனே கபிலன், தன் ஞானப் பார்வையால் பார்த்தான். அரக்கன் இருக்கும் இடம் அவனுக்குத் தெரிந்தது.

அதைப் பற்றி மற்ற இருவரிடமும் சொன்னான்.

''அந்த இடம் வெகு தொலைவில் உள்ளது. என் மந்திரத் தேரில்தான் அங்கு செல்ல முடியும்,'' என்றான் மந்திரவாதி.

அந்தத் தேரில் அமர்ந்து அரக்கன் இருக்கும் இடத்தை அடைந்தான் வீரன் அமரேஷ்.

அவனுக்கும், அரக்கனுக்கும் கடுமையாக போர் நடந்தது. அரக்கனைக் கொன்று வீழ்த்தினான் அமரேஷ்.

அவந்திகாவை தேரில் ஏற்றிக் கொண்டு சாவூருக்கு வந்து சேர்ந்தான். மகளைக் கண்ட வருண் மகிழ்ச்சி அடைந்தார்.

''என்னால்தான் அவந்திகா மீட்கப்பட்டாள். எனக்கே அவளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும்,'' என்று ஞானி, மந்திரவாதி, வீரன் மூவருமே வற்புறுத்தினர்.

அவர்களில் யாருக்கு அவந்திகாவை திருமணம் செய்து வைக்க வேண்டும்? ஏன்?

விடை: அரக்கன் இருந்த இடத்தைத் தெரிவித்தும், அங்கு செல்வதற்காகத் தேர் வந்ததும், அவந்திகாவை மீட்கத் துணை செய்தன. அரக்கனைக் கொன்ற வீரனே உண்மையில் அவளை மீட்டவன் ஆவான். ஆகவே, வீரனே,

அவந்திகாவை மணக்க வேண்டும். மற்றவர்கள் சகோதரர்கள் ஆவர்


July 15, 2017

கடவுள் யாருக்கு வரம் கொடுப்பார்?


"தினம் மூணு வேளை குளிச்சு, ஆறு வேளை பூஜை பண்றேன்... எனக்கே எதுவும் கிடைக்கலை!" என பாபா டெல்லி கணேஷ் மாதிரி புலம்பிக் கொண்டிருப்பவரா நீங்கள்..?

ஏன் உங்களுக்கு கடவுள் வரம் கொடுக்கவில்லை என எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா..?

கடவுளின் பார்வை யாருக்குக் கிடைக்கும்..? உங்களுக்காக ஒரு குட்டிக் கதை...


ராமசாமியும், முனுசாமியும் 'முஸ்தபா... முஸ்தபா' பாட்டின் அப்பாஸ் - வினீத் மாதிரி திக் ஃப்ரண்ட்ஸ். இரண்டு பேருக்குமே வயது 32 தாண்டியும் கல்யாணம் ஆகவில்லை. போகாத ஊரில்லை; தேடாத வலைத்தளம் இல்லை. பெண் அமையவில்லை. உள்ளூர் ஜோசியர் உறுதியாகச் சொன்னார்... பங்குனி உத்திரத்துக்கு பழனி போய் முருகனை உருகி வேண்டினால் ஆவணிக்குள் அழகு தேவதை மனைவியாக வந்து சேருவார் என்று.

புறப்பட்டுப் போனார்கள். பழனியில் பஸ்ஸை விட்டு இறங்கியதும் மொட்டை போட்டுக்கொண்டு, சண்முக நதியில் குளிப்பதற்காக இறங்கினார்கள். சூப்பரான மீன்கள் துள்ளிக் குதிப்பதைப் பார்த்ததும் முனுசாமிக்கு மீன் சாப்பிடும் ஆசை வந்தது. "டே ராமு இன்னைக்கு மிலிட்டரி ஹோட்டல்ல மீன் வறுவல் சாப்பிட்டுட்டு நாளைக்கு மலை ஏறுவோம்" என்றான் முனுசாமி.

"வந்த காரியத்தை விட்டுவிட்டு நாக்கு ருசிக்கு ஆசைப்பட்டா சரியா வராது. நீ வராட்டியும் பரவாயில்லை; நான் போகிறேன்" என சொல்லிவிட்டு மலையேற புறப்பட்டான் ராமசாமி.

"இந்த நேரம் முனுசாமி மிலிட்டரி ஹோட்டலுக்குள் போயிருப்பான்... இப்ப மீன் வறுவல் ஆர்டர் பண்ணிருப்பான்... வறுவலை நல்லா ருசிச்சு சாப்பிட்டுக்கிட்டிருப்பான்...'' என்ற சிந்தனை ஓட்டம்தான் மலையேற தொடங்கியதிலிருந்து மூலவரை வணங்கிவிட்டு கீழே இறங்கும் வரை ராமசாமியின் மனதில் படமாய் ஓடியது.


"இப்ப ராமு மலையேறிருப்பான்... பிரகாரத்தை சுற்றியிருப்பான்... மூலவர் தரிசனம் முடித்திருப்பான்... மலை இறங்கியிருப்பான்..." என்ற எண்ணங்களே மீன் சாப்பிட்டுக்கொண்டிருந்த முனுசாமியின் மனதில் ஓடியது.

ஆவணி முடிவதற்குள் முனுசாமிக்கு திருமணம் முடிந்துவிட்டது. ராமசாமி மறுபடியும் பங்குனி உத்திரத்துக்கு பழனி போக திட்டமிட்டமிட்டான்.

மனம் லயித்து செய்யாத செயல் வெற்றிபெறாது என்பதுதானே பிராக்டிக்கலான உண்மை.
இப்போது முடிவுசெய்துகொள்ளுங்கள்... நீங்கள் ராமசாமியா? முனுசாமியா?

July 14, 2017

இரண்டாயிரம் தங்கக்காசு ! - சிறுகதை


சேலையூர் என்னும் ஊரில் கலிவரதன் என்றொரு மிராசுதார் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலங்கள் இருந்தன. நிலத்தில் பயிரிட்டு ஏராளமான பொருள்கள் சம்பாதித்து வந்தார். அவரிடம் நிறையப் பொருள் இருந்தாலும் ஒருவருக்கும் ஒரு பைசாகூட கொடுக்க மனம் வராது. தம்முடைய வீட்டில் நல்ல உணவு சமைக்கக் கூட அவர் விரும்ப மாட்டார். கருமிகளிலேயே கடைந்தெடுத்த கருமி அவர்.

அவருடைய நிலத்தின் ஒரு பகுதியில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. பழங்காலத்து ஆலமரம். அதில் பறவைகள் எந்நேரமும் இருக்கும். அதன் கீழே வழிப் போக்கர்களும், ஆடு மாடுகளும் நிழலுக் காகத் தங்கி இளைப் பாறுவதுண்டு.

பயிர்த் தொழிலில் நல்ல வருமானம் வரவே பழைய ஆலமரத்தை வெட்டி எறிந்துவிட்டு, அந்த நிலத்திலும் பயிரிட கலிவரதன் விரும்பினார். தன்னுடைய வேலைக்காரர்களில் ஒருவனை அனுப்பி அதனை வெட்டிவிடுமாறு கூறினார்.

""நான் அந்த வேலையைச் செய்ய மாட்டேன். அந்த ஆலமரம் பழங்காலத்து மரம். அதில், தேவதை குடியிருப்பதாகக் கூறு கின்றனர். நான் அதனை வெட்டினால், எனக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டுவிடும்!'' என்றான் வேலைக்காரன்.

கலிவரதன் மற்ற வேலைக்காரர்களிடம் கூற, அவர்களும் மரத்தை வெட்ட மறுத்து விட்டனர். கடைசியில் தாமே அதனை வெட்டி எறிந்து விட வேண்டுமென்ற நோக்கத்துடன் கோடாரியை எடுத்துக்கொண்டு ஆலமரத்தை அடைந்தார்.

ஆலமரத்தின் கீழே ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருந்தான். கலிவரதனைப் பார்த்த பிச்சைக்காரன், ""ஐயா, சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆயிற்று; ஏதாவது காசு கொடுங்கள், பசியைப் போக்கிக் கொள்கிறேன்,'' என்றான்.

இதைக் கேட்டதும், கலிவரதனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

""காசு வேணுமா, சோம்பேறிப் பயலே! எங்காவது போய் வேலை செய்து சம்பாதிப்பதுதானே! போ! போ,'' என்று அவனை விரட்டினார்.

பிச்சைக்காரன் போனதும் கலிவரதன் தம் கையிலிருந்த கோடாரியினால் மரத்தின் அடிப் பாகத்தில் ஓங்கி வெட்டினான்.

அடுத்தகணம் மரத்தின் மையத்தில் ஒரு கதவு திறந்தது. உள்ளேயிருந்து ஒரு தேவதை வெளியே வந்தது.

""கதவைத் தட்டினீர்களா? வாருங்கள் உள்ளே! இன்று எங்கள் அரசருக்குப் பிறந்த நாள். உள்ளே வந்து எங்களுடன் விருந்து சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்,'' என்று கலிவரதனைப் பார்த்துக் கூறியது தேவதை.

""உங்கள் அரசரின் பிறந்த நாள் என்கிறாய். விருந்து என்கிறாய். நான் ஏதாவது பரிசுகள் தர வேண்டுமா?'' என்று தேவதையைப் பார்த்துக் கேட்டார் கலிவரதன்.
""அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்கள் வந்தாலே எங்களுக்கு மகிழ்ச்சி,'' என்றது தேவதை.

கலிவரதன் தேவதையின் பின்னால் சென்றார். உள்ளே நீளமான கூடம் ஒன்று இருந்தது. அதில் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. மேஜை நாற்காலிக ளெல்லாம் போடப்பட்டிருந்தன. மேஜையின் நடுவில் தேவதைகளின் அரசர் அமர்ந்திருந் தார். அவன் தலையில் வைரம் பதித்த தங்க கிரீடம் ஜொலித்துக் கொண்டிருந்தது. கையில் தங்கச் செங்கோல் இருந்தது.

தேவதைகளின் அரசர் கலிவரதனை அன்புடன் வரவழைத்து தம் பக்கத்திலிருந்த ஆசனத்தில் அமரச்செய்தார். மேஜைமேல் உயர்த்தரக் தின்பண்டங்கள் தட்டுகளில் பரிமாறப்பட்டு இருந்தன.
""நீங்கள் எங்கள் விருந்தாளியாக வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. சாப்பிடுங்கள்,'' என்று கலிவரதனைப் பார்த்துக் கூறினான் தேவதை களின் அரசர்.

கலிவரதன் தம் ஆயுளில் அம்மாதிரியான உணவு பொருள்களைக் கண்டதில்லை. மேஜை மேலிருந்த தின்பண்டங்களை விரும்பிச் சாப்பிட்டார்.
கலிவரதன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ""இந்த ஆலமரத்திற்கும் இது இருக்கும் நிலத்திற்கும் எவ்வளவு ரூபாய் கேட்கிறீர்கள்?'' என்று கலிவரதனிடம் கேட்டார் தேவதைகளின் அரசர்.

இதைக் கேட்ட கலிவரதன், ""என்னுடைய நிலத்தை நான் யாருக்கும் விற்பதாக இல்லை,'' என்றார்.

""ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன்!'' என்ற தேவதைகளின் அரசர் பக்கத்திலிருந்த ஒரு தேவதையைப் பார்த்தார்.

மறுகணம் அந்தத் தேவதை ஒரு பையைக் கொண்டு வந்து அரசரிடம் கொடுத்தது.

தேவதைகளின் அரசர் அந்தப் பையைத் கலிவரதனிடம் கொடுத்து, ""இதற்குள் ஆயிரம் தங்க நாணயங்கள் உள்ளன. இந்த விலைக்கு உம் நிலத்தையும் இந்த ஆலமரத்தையும் விற்கச் சம்மதமா?'' என்றார்.

""மரத்தை வெட்டி விற்றால் நிறையப் பணம் கிடைக்கும். நிலம் வேறு இருக்கிறது. இரண்டாயிரம் தங்க நாணயங்கள் கொடுத்தால் கொடுத்து விடுகிறேன்!'' என்றார் கலிவரதன்.

""சரி!'' என்று கூறிய தேவதைகளின் அரசர் மீண்டும், அந்தத் தேவதையைப் பார்த்தார். தேவதை மீண்டும் ஒரு பணமுடிப்பைக் கொண்டு வந்து கொடுத்தது.
""இப்போது மகிழ்ச்சிதானே! தாங்கள் இரண்டாயிரம் தங்க நாணயங்கள் பெற்றுக் கொண்டு இந்த ஆலமரத்தையும், நிலத்தையும் எனக்கு விற்றுவிட்டதாக ஒரு கடிதம் எழுதித் தாருங்கள்!'' என்றார் தேவதைகளின் அரசர்.

கலிவரதனும் தேவதைகளின் அரசர் சொன்னவாறே ஒரு கடிதம் எழுதித் கொடுத்து விட்டுப் பண முடிப்புகளை சட்டையின் உட்புறம் இருந்த பையில் பத்திரப்படுத்திக் கொண்டார். அப்போது தேவதைகளின் அரசர் பக்கத்திலிருந்த தேவதையிடம் ஏதோ கூறவே, அது ஒரு கூடை நிறையத் தின்பண்டங்களைக் கொண்டுவந்து கலிவரதனின் முன்னால் வைத்தது.

""ஐயா, வீட்டில் உள்ள உங்கள் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் இந்தத் தின்பண்டங்களைத் தாருங்கள்,'' என்று தின்பண்டக் கூடையைத் கலிவரதனிடம் கொடுத்தார் தேவதைகளின் அரசர்.

கலிவரசன் தின்பண்டக் கூடையுடன் வெளியே வந்தார். மரத்தடியில் உட்கார்ந்தார்.

இந்தத் தின்பண்டங்களை எடுத்துப்போய் நமது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்தால் அவர்கள் நாக்கு கெட்டுப்போய் விடும். இதைப் போல் உணவு வகைகளை அடிக்கடி கேட்பார்கள். அதனால் செலவுதான் மிகுதியாகும் என்று நினைத்தவராகக் கூடையி லிருந்த தின்பண்டங்கள் அனைத்தையும் அவரே சாப்பிட்டார். பின்னர் சட்டைப் பைக் குள்ளிருந்து பண முடிப்பு களை எடுத்து எண்ணிப் பார்த்தார். அவற்றில் இரண்டாயிரம் தங்க நாணயங்கள் இருந்தன.

"இந்த மரம் என்னுடையது. இந்த மரத்தில் உள்ள சொத்து முழுவதும் என்னுடையது. அப்படியிருக்க இந்தத் தேவதைகளின் அரசன் வெறும் இரண்டாயிரம் தங்க நாணயங்கள் மட்டுமே எனக்குக் கொடுத்து விட்டு என்னை ஏமாற்றிவிட்டான். முதலாவதாக என் அனுமதி யின்றி என் மரத்தில் அவனும், அவனைச் சேர்ந்தவர்களும் குடியேறியதே குற்றம்' என்று கூறிகதவைத் திறந்தார்.

கதவு திறந்து கொண்டது.

கலிவரதன் உள்ளே நுழைந்தார். உள்ளே மேஜை நாற்காலி முதலியவை அப்படியே இருந்தன. ஆனால், தேவதைகள் எதையும் காணவில்லை. தேவதைகளின் அரசர் மட்டும் நாற்காலியில் உட்கார்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தார். அவருடைய தங்கக் கிரீடமும், தங்கச் செங்கோலும் மேஜை மேல் கிடந்தன.

""ஏமாற்றுக்காரனே, இரண்டாயிரம் தங்க நாணயங்கள் மட்டும் கொடுத்து என்னை ஏமாற்றி விடலாம் என்று பார்த்தாயா? அதுதான் நடை பெறாது,'' என்று தேவதைகளின் அரசரைப் பார்த்துக் கூவினார் கலிவரதன்.

தேவதைகளின் அரசர் எழுந்திருக்க வில்லை. நல்ல தூக்கத்திலிருந்தார்.
சரி, இவனிடம் கத்திப் பிரயோசனம் இல்லை என்று நினைத்த கலிவரதன் அங்கு மூலையில் இருந்த தங்க நாணயங்கள் அனைத்தையும் வாரி ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டார். பின்னர் மேஜைமேல் இருந்த தங்கக் கிரீடத்தை எடுத்துத் தன் தலையில் சூட்டிக் கொண்டு, தங்கச் செங்கோலையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

மரத்துக்குள்ளிருந்து வெளியே வந்ததும் கலிவரதனுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்துவிட்டது. தான் கொண்டு வந்த மூட்டையைத் தலையில் வைத்துக் கொண்டு மரத்தடியில் ஒரு புறம் படுத்துக் கொண்டார்.

மீண்டும் அவர் கண் விழித்துப் பார்த்த போது அவரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான பேர் நடமாடிக் கொண்டிருந்தனர்.

கண்ணுக்குத் தென்பட்ட இடமெல்லாம் பசும்புல் தரையாக இருந்தது. குழந்தைகள் புல் தரையில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே கணவன், மனைவியர் மரத்தடியில் உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு காவலாளி அந்தப் பக்கமாக வந்தான். அவனைப் பார்த்ததும் கலிவரதன், ""முதலில் இவர்களையெல்லாம் விரட்டி அடி. இது என்னுடைய நிலம். இந்த நிலத்தில் என் அனுமதி இல்லாமல் இவர்கள் எப்படி வந்தனர்?'' என்று கத்தினார்.

""தாத்தா, இது பொதுப் பூங்கா. இந்த இடம் கலிவரதன் என்ற ஒரு கருமிக்குச் சொந்த மான இடம். அவர் இந்த ஊரை விட்டுப் போய் நூறு வருடங் களுக்கு மேல் ஆகிறது. மறு படியும் திரும்பி வரவேயில்லை. அவருடைய குடும்பத்தார் இந்த நிலத்தை அரசாங்கத்திற்குக் கொடுத்துவிட்டனர்.

அரசாங்கம் இங்கே ஒரு பொதுப் பூங்காவை அமைத்திருக்கிறது,'' என்றான் காவலாளி.

"அட கடவுளே, நூறு வருடங்களாகவா நான் தூங்கிக் கொண்டிருந்தேன்?' என்று கூறியவாறே மூட்டையை பிரித்துக் தங்க நாணயங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தார் கலிவரதன்.

மூட்டைக்குள் கற்களும், ஓட்டுத் துண்டுகளும் இருந்தன. தலையில் போட்டிருந்த தங்கக் கிரீடத்தை எடுத்துப் பார்த்தான் கலிவரதன்.

பிச்சைக்காரர்கள் அணியும் ஒரு தகர போணியைப் போல் இருந்தது. தங்கச் செங்கோலுக்குப் பதில் மரத்தினால், ஆன தடி இருந்தது.

இனி என்ன செய்வதென்று புரியாமல் தலையில் அணிந்திருந்த தகர போணியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, "ணங்' என்று சத்தம் கேட்டது.

யாரோ ஒருவன் கலிவரதனின் கையிலிருந்த தகர போணியில் ஒரு பைசா நாணயங்களைப் போட்டு விட்டுச் சென்றான்.

தன் கருமித்தனத்தாலும், அதிகம் பேராசைப் பட்டதாலும், ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருந்தினார் கலிவரதன்.

***

July 13, 2017

புத்திசாலி குரங்கு ! - சிறுகதை


தென்னந்தோப்பு ஒன்றில் ஏராளமான இளநீர்கள் காணப்பட்டன.

ஒருநாள்-
தோப்பின் பக்கமாக வந்த குரங்கு ஒன்று, அந்த இளநீர் காய்களைப் பார்த்தது. அன்று முதல், தினம் தினம் மரத்தில் ஏறி இளநீர்களைச் சாப்பிடத் துவங்கியது. தென்னந் தோப்பில் வசித்து வந்த ஒரு குருவி இச்செயலைக் கண்டது.

""குரங்கே! குரங்கே! நீ தினமும் இளநீர் காய்களைச் சாப்பிடுகிறாய்! தோப்பின் சொந்தக்காரர் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார். இந்தத் தோப்புக் காரர் மிகவும் பொல்லாதவர். நீ அவரிடம் அகப்பட்டு விட்டால், அவர் உன்னை கடுமையாக தண்டிப்பார். எனவே, நீ இளநீரை பறித்துச் சாப்பிடும் பழக்கத்தை விட்டு விடு,'' என்றது குருவி.

""குருவியே! இளநீர் குடிப்பது எனது திறமை. எனது திறமையை மாற்றிட எவராலும் முடியாது. ஒருவேளை நான் இளநீர் குடிக்கும் நேரத்தில் தோப்புக்காரர் வந்தால் அவரை எவ்வாறு சமாளிக்க வேண்டுமோ அவ்வாறு சமாளித்துக் கொள்வேன். அதைப் பற்றி எல்லாம் நீ கவலைப்படத் தேவையில்லை,'' என்றது குரங்கு.

""சரி குரங்கே! ஏதோ எச்சரிக்கை செய்திட வேண்டும்போல் எனக்குத் தோன்றியது. அதனால் எச்சரித்தேன். இனி உனது விருப்பத்தை தடுக்க நான் யார்? நீ உன்னுடைய விருப்பம் போல் நடந்து கொள்ளலாம்,'' என்று கூறிவிட்டு சென்றது குருவி.

ஒருநாள்-
வழக்கம் போல் குருவி தென்னந்தோப்பு வேலியோரத்தில் அமர்ந்திருந்தது. அந்த நேரத்தில் அங்கே குரங்கும் வந்தது.

"குரங்கே! இன்றும் வழக்கம் போல் இளநீர் குடிக்க வந்துவிட்டாயா?'' என்று கேட்டது குருவி.

குருவியின் விசாரிப்பை கண்டு கொள்ள வில்லை குரங்கு. அது அமைதியாக தோட்டத்தின் உள்ளே சென்றது.

அதே நேரத்தில் வேகமாக தோப்பினுள் நுழையும் அந்தத் தோப்புக்காரரை பார்த்து விட்டது குரங்கு.

"இந்த குருவி கூறியதைப் போன்று நாம் தோப்புக்காரரிடம் மாட்டிக் கொண்டோம். இனிமேல் நம் அறிவைப் பயன்படுத்தி எப்படியாவது சாமர்த்தியமாக தப்பித்திட வேண்டும்' என்று மனதில் எண்ணிக் கொண்டது குரங்கு.

தோப்புக்காரரும் குரங்கைப் பார்த்து விட்டார். உடனே குரங்கு தென்னை மரத்தை சுற்றி, சுற்றி வந்து வணங்கியது.

தோப்புக்காரரோ அந்தக் குரங்கை வியப்புடன் பார்த்து, மெல்ல குரங்கின் அருகில் சென்றார்.

""குரங்கே! என் தோப்புக்குள் நுழைந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய்? தென்னை மரத்தைச் சுற்றி சுற்றி வருகிறாயே? எதனால் இப்படி சுற்றி வணங்குகிறாய்?'' என்று கேட்டார்.

குரங்கோ தோப்புக்காரரை வணங்கி நின்றது.

""ஐயா! நான் இந்தத் தோப்பில் நிற்கிற அனைத்து தென்னை மரங்களையும் தெய்வமாகக் கருதுகிறேன். நான் ஒருமுறை தோப்பின் ஓரமாக வந்தேன். அப்போது பசி மயக்கத்தில் இருந்தேன். அந்நேரம் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று வேலியோரமாக விழுந்தது. நான் அந்த தேங்காயை எடுத்து சாப்பிட்டு என்னுடைய பசியைப் போக்கிக் கொண்டேன். அன்று முதல் இந்தத் தோப்பினுள் நுழைந்து ஏதாவது ஓர் தென்னை மரத்தைச் சுற்றி வணங்கி விட்டுத்தான் செல்வேன். இன்று வணங்கும் நேரம் உங்களைப் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றது குரங்கு.

குரங்கின் பேச்சைக் கேட்ட தோப்புக்காரர் மகிழ்ச்சியடைந்தார். குரங்கை தண்டிக்காமல் விட்டுவிட்டார்.

தோப்பை விட்டு வெளியே வந்த குரங்கை, அழைத்தது குருவி.
"குரங்கே நீ சாமர்த்தியமாகப் பேசுகிறாய்! தோப்புக்காரரும் உன்னுடைய பேச்சை உண்மையென்று நம்பி விட்டார். இது உன் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. இத்தோடு நீ இளநீர் பறித்துக் குடிப்பதை விட்டு விடு,'' என்றது குருவி.

"குருவியே! நீ மீண்டும், மீண்டும் எனக்கு அறிவுரைக் கூறுவதை விட்டுவிடு! இப்போது எப்படி நான் சாமர்த்தியமாகத் தப்பித்தேன்! அதைப் போன்றே இனிமேலும் சாமர்த்தியமாகப் பேசி தோப்புக்காரரிடமிருந்து தப்பித்துக் கொள்வேன். அதற்காக இளநீர் சாப்பிடுவதை மட்டும் நான் என்றுமே விட்டுவிட மாட்டேன்,'' என்றது குரங்கு.

"இந்தக் குரங்குக்கு சரியான தண்டனை கிடைத்தால்தான் திருந்தும்' என மனதில் எண்ணியது குருவி.

மறுநாள் குரங்கு இன்று எப்படியாவது இளநீர் பருகிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு தோப்பினுள் நுழைந்தது.

குரங்கு உள்ளே நுழைவதை வேலியை சரி செய்து கொண்டிருந்த தோப்புக்காரர் பார்த்து விட்டார். உடனே அவர் மறைவிடத்தில் நின்றபடி குரங்கின் செயலைக் கவனித்தார்.

சுற்றும், முற்றும் பார்த்தபடி யாரும் இல்லை என்று நினைத்து, மரத்தில் ஏற முயற்சித்தது குரங்கு.

அந்நேரம் தோப்புக்காரர் வேலியோரத்தில் இருந்து கனமான தடி ஒன்றை கையில் எடுத்து, குரங்கைப் பார்த்து வீசியெறிந்தார். அந்தத் தடியானது குறி தவறாமல் குரங்கின் மீது விழுந்தது. தரையில் விழுந்தது குரங்கு.
உடலில் பட்ட காயத்துடன் மெல்ல எழுந்து ஓட்டமெடுத்தது.

இக்காட்சியைப் பார்த்த குருவி, மறுநாள் குரங்கை சந்தித்தது.

குரங்கோ காலை நொண்டியபடி வந்து கொண்டிருந்தது.

"குரங்கே! உனக்கு என்னாயிற்று? ஏன் இப்படி வருகிறாய்?'' என்று ஒன்றும் தெரியாதது போன்று கேட்டது குருவி.

"குருவியே! என்னதான் சாமர்த்தியமாகப் பேசினாலும், தவறு செய்கிறவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைத்திடும் என்பதை, நான் உணர்ந்து கொண்டேன்,'' என்றது குரங்கு.

குரங்குக்கு புத்தி வந்ததை நினைத்து மகிழ்ந்தது குருவி.

July 12, 2017

திருடன் தம்புடு ! - சிறுகதை


ஏழுகிணறு என்ற ஊரில் கிராமத்து திருவிழா களை கட்டியிருந்தது.

ஒன்பதுநாளும் கூத்து, பாட்டு, நாடகம் இருந்ததால் மக்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.
அன்று மிகவும் புகழ்பெற்ற கரகாட்டக்காரிகள் வந்து நடனம் ஆடி இளசுகளை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தனர்.

கரகாட்டம், மயிலாட்டம் முடிந்ததும், அவர்கள், "டயலாக்' பேசிக் கொண்டே ஆடிய ஆட்டம் இளைஞர்களை விசிலடிக்க வைத்தது.

சவுந்தரம் பாட்டிக்கு இதையெல்லாம் பார்க்க... மனம் கூசியது. நல்லவேளை... என் மகன் தண்டச்சோறு ஊருக்கு போயிருக்கு, இல்லைன்னா... அவனும் இங்க வந்து உட்கார்ந்து ரசித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.

""ஏற்கனவே... செலவுக்கு காசு கொடுக்க மாட்டேன்னு என்னை போட்டு அடிக்கிறான். என்னைக்கு இவன் திருந்தப் போறானோ?'' என்று புலம்பியபடியே வீட்டுக்குப் படுக்க வந்தாள்.

ஊரே தெருக்கூத்தை ரசிக்கும்போது இதுதான் சரியான சமயம் என்பதால், கிழவியின் வீட்டுக்குள் நுழைந்தான் திருடன் தம்புடு.

கிழவி நிறைய காசு பணம் வச்சிருக்கா. அவ புருஷன் நிறைய சொத்து சேர்த்து வச்சிருந்தான். தண்டச்சோறு பிள்ளையை நம்பி சொத்தை ஒப்படைக்காமல், மனைவியிடம் கொடுத்து விட்டுப் போய்விட்டார்.

இது ஊருக்குள் எல்லாரும் அறிந்த விஷயம் என்பதால் கிழவியின் வீட்டுக்குள் நுழைந்தான்.

எல்லாப் பொருட்களையும் மூட்டையில் கட்டிக் கொண்டு திரும்பியவன் கண்களில் சமையலறை பட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது. உள்ளே நுழைந்தான். அங்கே கிழவியின் கைவண்ணத்தில் வடை, பாயாசம் என்று அறுசுவை உணவு இருந்தது.

இப்படி ஒரு ருசியான உணவை எங்கே சாப்பிட்டிருக்கிறான் தம்புடு. மூக்கு முட்ட ஒரு பிடி பிடித்தான் தம்புடு. அடுத்த நிமிடம் தூக்கம் கண்களைச் சுழற்றியது.

சற்று நேரம் உறங்கி விட்டுச் செல்வோம் என்று நினைத்தபடியே படுத்தான். அப்படியே நன்றாக தூங்கிவிட்டான்.

கூத்து பார்க்க பிடிக்காமல் பாதியிலேயே எழுந்து வந்த கிழவி, குறட்டை சப்தம் கேட்டதும் தன் மகன்தான் வந்து விட்டான் என்று நினைத்தபடியே வீட்டை திறந்து உள்ளே வந்தவள், தன் வீட்டுக் கட்டிலில் திருடன் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். தன்னுடைய பணம், நகை எல்லாம் மூட்டையாக கட்டப்பட்டு பக்கத்தில் இருப்பதைக் கண்டதும், "பக்' என்றது கிழவிக்கு.

அவன் அருகில் சென்று மெல்ல மூட்டையை எடுத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு ஆட்களைக் கூட்டி வர வெளியே போனாள்.

கதவு திறந்து மூடும் ஓசையில் கண் விழித்த திருடன், சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு, தான் கட்டி வைத்திருந்த மூட்டையைப் பார்த்தான். அது அங்கே இல்லை. மறுநிமிடம் கூரையைப் பிய்த்துக் கொண்டு தப்பி ஓடினான் திருடன்.

அதே சமயம் ஊருக்கு சென்ற... கிழவியின் மகன், வீட்டு கதவை திறந்து, ""அப்பாடா'' என்று கட்டிலில் படுத்தான்.

""கிழவிக்கு கூத்து ஒண்ணுதான் குறைச்சல்!'' என்று முணுமுணுத்த படியே போர்வையை எடுத்து நன்கு போர்த்திக் கொண்டாள்.

கட்டிலில் திருடன் படுத்து தூங்குவதாக கிழவி சொன்னதைக் கேட்டு கம்பு, தடியுடன் வந்தவர்கள் கிழவியின் மகனை, திருடன் என்று நினைத்து சரமாரியாக அடித்தனர்.

வலி தங்காமல் போர்வையை எடுத்தான் கிழவியின் மகன்.
அனைவரும் திடுக்கிட்டனர்.

""அய்யய்யோ... என் மகன்!'' என்று சொல்லி கூப்பாடு போட்டாள் கிழவி.

""நீ உன் வயதான தாயை எப்படி அடித்து கொடுமைப்படுத்தினாய்... அதனால் கடவுள் உனக்கு கொடுத்த தண்டனை இது. இனிமேலாவது நல்ல மகனாக நடந்துக் கொள்,'' என்று சொல்லி விட்டுச் சென்றனர்.

தாயின் காலில் விழுந்தான் கிழவியின் மகன்.

July 11, 2017

கனவுகள் பலிக்கும் ! - சிறுகதை


சாளுவ நாட்டை சங்கசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவர் காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலித்து விடும் என்ற மூடநம்பிக்கை கொண்டிருந்தான்.
அவனது மந்திரியும், "அப்படி நினைப்பது சரியல்ல என எவ்வளவு கூறியும்' அவர் அதனை ஏற்கவில்லை.

மன்னன்தான் காணும் கனவுகளின் படியே பின்னர் நடக்கும் என நம்பியதற்கு ஏற்ப ஓரிரண்டு கனவுகள் பலித்தும் விட்டன.

""பார்த்தீர்களா, நான் பார்த்த கனவுகள் பலித்து விட்டன,'' என்பார்.
அப்போதைக்கு அவர்கள் எதுவும் கூறவில்லை.

ஓரிரவில் மன்னன் தான் படுத்துத் தூங்கும் அறையில் ஒரு பாம்பு வந்தது போலவும், அதனை அந்த அறையைக் காவல் காத்த வீரன் கண்டு கொன்று விட்டது போலவும் கனவுக் கண்டான். மறுநாள் காலை தான் கண்ட கனவை அவன் மந்திரியிடமும் சேனாதிபதியிடமும் கூறி அந்தக் கனவு பலிக்குமே என்று கவலைப்பட்டார்.

மன்னன் தன் கனவைக் கூறிக் கொண்டிருந்தபோது மல்லப்பன் என்ற காவலாளி கேட்டுக் கொண்டிருந்தான். அவன் மனதில் மன்னரின் தயவைப் பெற அக்கனவை உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்தான்.

அவன் இதற்காக ஒரு பாம்பையும் பிடித்து வைத்திருந்தான். அவன் மன்னனின் படுக்கை அறையைக் காவல் புரியச் சென்றபோது நள்ளிரவில் தான் பிடித்து வந்த அந்தப் பாம்பைப் படுக்கை அறைக்குள் விட்டான். பிறகு அந்த அறையின் கதவை தடதடவென்று தட்டினான்.

மன்னனும் கதவைத் திறந்து என்ன என்று கேட்க, மல்லப்பனும், ""ஒரு பாம்பு தங்கள் படுக்கை அறைக்குள் புகுந்ததைப் பார்த்தேன்,'' எனக் கூறி சுற்றிலும் பார்த்தான். ஓரிடத்தில் தான் விட்ட பாம்பு இருப்பதைக் கண்டு அதை அவன் அடித்துக் கொன்றான். மன்னனும் அவனைப் பாராட்டித் தன் முத்து மாலையைப் பரிசாக அளித்தான். மறுநாள் காலை மன்னன் தான் கண்ட கனவு பலித்ததை மந்திரிக்கும், சேனாதிபதிக்கும் விவரமாகக் கூறினான்.

அவர்கள் இருவருக்கும் மல்லப்பன் செய்த ஏமாற்று வேலை அது என்பது தெரிந்து விட்டது. அதனால் அவர்கள் மன்னனிடம் எதுவும் பேசவில்லை. அவர்கள் சேனாதிபதியின் அறைக்குப் போய் மல்லப்பனை அங்கு வர வழைத்தனர்.

மந்திரி நயமாக மல்லப்பனைக் கேட்டும், அவன் உண்மையைச் சொல்லவில்லை. ஆனால், சேனாதிபதி அவனை மிரட்டி, அடிஅடி என அடித்த பிறகே மல்லப்பன் உண்மையைக் கக்கினான்.

மந்திரியும், ""இந்த முறை உன்னை விட்டுவிடுகிறேன். மறுபடியும் இந்த மாதிரி ஏதாவது தில்லு முல்லு செய்தால் கடுமையாக தண்டிப்பேன்,'' எனக் கூறி எச்சரித்து அனுப்பினான்.

மல்லப்பன் மந்திரியை பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் தன்னை அடித்த சேனாதிபதியைப் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்துக் கொண்டான். அதற்கான சந்தர்ப்பத்தை அவன் எதிர்பார்க்கலானான்.

ஒரு வாரத்திற்குப் பின் மன்னன் மந்திரியிடமும், சேனாதிபதியிடமும், ""நான் நேற்று ஒரு கனவு கண்டேன். அதில் யாரோ ஒரு வீரன் என்னைக் குத்தியது போல இருந்தது. அந்த வீரனின் முகம் சரியாகத் தெரியவில்லை. அந்த வீரன் யார் எனத் தெரிந்தால் பிடித்து, தண்டித்து விடலாம். ஆனால், அதற்குள் என் கனவுப்படி நடந்து விட்டால் என்ன செய்வது?'' என்றான்.

அப்போது சற்று தூரத்தில் நின்ற மல்லப்பன் மன்னன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தான். சேனாதிபதியை ஒழிக்க அவன் உடனே திட்டம் போட்டான். அன்றிரவு ஒரு மந்திரவாதியை ஊர் மயானத்தில் காளி உபாசனை செய்யச் சொன்னான். மந்திரவாதியும் மண்டை ஓடு, எலும்புத் துண்டுகள், எலுமிச்சம் பழங்கள் எல்லாம் ஒரு கோலம் போட்டு வைத்து மந்திரத்தை ஜெபிக்கலானான்.

மல்லப்பன் மன்னனிடம் போய், ""அரசே! தங்களைக் கொல்ல முயல்பவர் யாரென்று தெரிந்து விட்டது. நம் சேனாதிபதிதான் நீங்கள் கனவில் கண்ட வீரன், நான் என் ஆடு ஒன்று காணாமல் போனதால் அதைத் தேடிக் கொண்டு மயானம் பக்கம் போனேன். அப்போது நம் சேனாதிபதியும், ஒரு மந்திரவாதியும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்.

சேனாதிபதி மந்திரவாதியிடம், தங்களை ஒழிக்க காளி பூஜை செய்யச் சொன்னான். இப்போது அந்த மந்திரவாதி தங்கள் பெயரைச் சொல்லியவாறே மயானத்தில் பூஜை செய்து கொண்டிருக்கிறான். நீங்களே வந்து பாருங்கள்,'' என்றான்.

மன்னன் முதலில் அதை நம்பவில்லை. ஆனால், மல்லப்பன் வற்புறுத்தியதன் பேரில் அவனோடு சென்றான். அங்கு மந்திரவாதி காளி பூஜை செய்வதையும், மந்திரங்களிடையே தன்னுடைய பெயரைப் பல தடவைகள் கூறுவதையும் கேட்டான். உடனே அவன் அரண்மனைக்கு வந்து சேனாதிபதியைக் கைது செய்து சிறையில் அடைக்குபடிச் கட்டளை இட்டான். சேனாதிபதியும் சிறையில் அடைக்கப்பட்டான்.

மன்னன் மந்திரியிடம், ""நான் பார்த்த இந்தக் கனவும் பலிக்குமோ என்ற பயம் இருந்தது. நல்லவேளையாக இந்த மல்லப்பன்தான் சேனாபதியைக் கண்டுப்பிடித்துச் சொன்னான். தக்க சமயத்தில் போய் அவனைக் கையும் மெய்யுமாகப் பிடித்தேன்,'' என்றான்.

மந்திரி அப்போதும் எதுவும் பேசவில்லை. என்ன சொன்னாலும் மன்னன் கேட்கமாட்டான் என்பது அவனுக்குத் தெரிந்ததே.

இது மல்லப்பன் சூழ்ச்சி என உணர்ந்த மந்திரி அவனை அழைத்து, ""மல்லப்பா! ஆரம்பித்து விட்டாயா உன் வேலையை. உன்னை முதல் தடவை எச்சரித்தேன். அதை நீ லட்சியம் செய்யவில்லையா?'' என்று கேட்டான்.
மல்லப்பனும் கர்வமாக, ""உங்கள் எச்சரிக்கையை குப்பையில் போடுங்கள். என்னால் உங்களைக் கூட சிறையில் அடைக்க முடியும். மன்னர் நான் சொல்வதை நம்பி விடுவார்,'' என்றான்.

இதற்குச் சில நாட்களுக்குப் பின் மன்னன் ஒரு கனவு கண்டான். அதில் மல்லப்பன் தன் எதிரியான ஒரு மன்னனோடு சேர்ந்து சதி செய்து தன்னைக் கொல்வது போல அவர் கண்டான். உடனே அவர் கண்விழித்துக் கொண்டு மல்லப்பனைக் பிடித்து சிறையில் அடைக்குமாறு கட்டளை இட்டான்.
இதை அறிந்த மல்லப்பன் பயந்து ஓடி விட்டான்.

மறுநாள் அவன் யாரும் காணாதபோது மந்திரியைக் கண்டு, ""உங்கள் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாததால் இப்போது எனக்கே ஆபத்து வந்து விட்டது. என்னைக் காப்பாற்றுங்கள்,'' என்றான்.

மந்திரியும், ""காப்பாற்றுகிறேன். ஆனால் நீ இரண்டு தடவைகளில் செய்த ஏமாற்று வேலைகளை மன்னனிடம் கூறி ஒப்புக் கொள்ள வேண்டும். அது எப்போது என நான் சொல்லும்வரை நீ என் வீட்டு அறையில் ஒளிந்து கிட,'' என்றான்.

மல்லப்பனும் அதற்குச் சம்மதித்தான்.

சில நாட்கள் சென்றன.

மன்னன் தினமும் மல்லப்பன் தன்னைக் கொல்ல வருவானோ என்று பயந்து கொண்டிருந்தான்.

ஒருநாள் மந்திரி, ""அரசே! மல்லப்பன் தன் ஊரில் பாம்புக் கடியால் இறந்து விட்டான்,'' என்றான்.

மன்னனும், ""அப்பாடா! இனி மல்லப்பன் வருவான் என்ற பயம் இல்லை. நிம்மதியாக இருக்கலாம்,'' என்றான் மகிழ்ச்சியுடன்.

ஒருவாரம் சென்ற பின் மந்திரி மன்னனிடம், ""மல்லப்பன் இப்போது உங்கள் கனவில் வருகிறானா?'' எனக் கேட்டான். மன்னனும் சிரித்தவாறே, ""இறந்தவன் எப்படி வருவான்?'' எனக் கேட்டான்.

மந்திரியும், ""மல்லப்பன் இறக்கவில்லை. உயிருடன்தான் இருக்கிறான். அவனை நான் பிடித்து அடைத்து வைத்திருக்கிறேன். நீங்கள் கனவுப்படி நடக்கும் என நினைத்தது தவறு,'' என்றான்.

மன்னனும், ""அப்படியானால் முன் இரண்டு கனவுகளின்படி நடந்ததற்கு என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டான்.

மந்திரியும், ""அது மல்லப்பன் செய்த ஏமாற்று வேலை,'' எனக் கூறி மல்லப்பனை அழைத்து வரச் சொன்னான்.

மல்லப்பன் மன்னனின் கால்களில் விழுந்து தான் செய்த ஏமாற்று வேலைகளுக்காகத் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.
மன்னன் அவனை மன்னித்து, சேனாதிபதியை விடுதலை செய்ய உத்தரவிட்டான். அதன் பின் கனவுகள் அப்படியே பலிக்கும் என்ற மூடநம்பிக்கையை மன்னர் விட்டு விட்டார்.