Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label முக்கிய பிரமுகர்கள். Show all posts
Showing posts with label முக்கிய பிரமுகர்கள். Show all posts

June 28, 2017

கிளியோபாட்ராவின் விடை கண்டுபிடிக்க முடியாத மரணம்.. நீடிக்கும் மர்மங்கள்!!


பெண்கள் என்றாலே அழகு தான். அவ்வாறு வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா.கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், ஆங்கில படங்களில் காண்பிக்கப்படுவதை போல கிளியோபாட்ரா வெள்ளை நிறத்துடையாள் அல்ல.

ஆம், எகிப்திய அழகியான கிளியோபாட்ரா கருப்பு பேரழகி. அவளின் அழகில் மயங்கி ஷேக்ஸ்பியரின் நாயகன் ஜூலியஸ் சீசர் ஓர் பிரம்மாண்ட அரண்மனையே கட்டினான். அவளது கட்டழகும், கவர்ச்சியும் கண்டு மயங்காத ஆண் விழியே கிடையாது என்று பல வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.

அந்த வகையில் எகிப்திய அழகி கிளியோபாட்ரா பற்றிய தகவல்களை காணலாம்.

பிறப்பு

எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி கள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர்.

ஆனால் 12&ம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். தனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை எடுத்து எகிப்து மொழியை கற்றுக்கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.

அரசாட்சி

14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18&வது வயதில் அரசியானாள். எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்தமுடியாது. இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13&ம் தால மியை திருமணம் செய்துகொண்டாள்.

எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டைநாடுகள் எகிப்து மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.

எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இருந்த ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில் வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.

காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்கு பிடிக்கவில்லை. அதிகார போராட்டத்தில் சீசர் கொல்லப்பட்டார். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்கு தப்பினாள்.

அடுத்த காதல் அத்தியாயம்

மீண்டும் தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தை கைப் பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த காலத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்துகொண்டாள்.

இந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது. கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர் எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாக தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறை பிடிக்கப்பட்டனர்.

கிளியோபாட்ரா மரணம்

சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்லபாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.

மரணத்தில் சந்தேகம்

வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்கமாட்டாள் என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் செபர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை.

சற்று நேர மரண போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோ பாட்ரா அதை விரும்பவில்லை. அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. ஓபி யம் மற்றும் விஷத்தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கஷாயம் அது. கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள்’’ என்கிறார் செபர்.

எகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை.

June 20, 2017

வீர முழக்கம் முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய வரலாற்று தகவல்கள் !!




இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்தில் விடுதலை வித்து விதைக்கப் பட்டுவிட்டது.பூலித்தேவன் மற்றும் கட்ட பொம்மன் இருவரும் சற்றேரக்குறைய ஒரே காலக்கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியரின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியவர்கள். இவர்களின் போராட்டம் தோல்வியில் முடியவும், அதன் முக்கியத்துவம் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றிலும் குறைத்து

June 14, 2017

நமக்கு தெரியாது முக்கியபிரபலங்கள் இன்று வில்லர்டு லிப்பி பற்றி தெரிந்துகொள்ளுங்கள் !!


தொல்லியல் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய அமெரிக்க வேதியியல் விஞ்ஞானி வில்லர்டு பிராங்க் லிப்பி பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

May 31, 2017

பாஸ் இவிங்களோட உண்மை முகம் தெரிஞ்சா வெலவெலத்துப் போயிடுவீங்க.......


இல்லஸ்ட்ரேட்டட் என எடிட்டிங் டூல்கள் பல வந்த பிறகு நம் கற்பனைக்கு எட்டாத படங்களை கூட எட்டிப்பிடித்து டிசைன் செய்து விடலாம் என்ற நிலை வந்துவிட்டது. கற்பதற்கு எளிதான இந்த டூல்களை யார்? எப்படி? பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்த சிறந்த ரிசல்ட் பெற முடியும்.

சிலர் கேளிக்கைக்காக, சிலர் முழு நேர வேலையாக, சிலர் உலகில் பரபரப்பை கொளுத்திப்போட இவற்றை பயன்படுத்துகின்றனர். இதோ! மார்கஸ் பைரன் எனும் கலைஞர் உலக நாடுகளின் அரசியல் தலைவர்களின் முக தோலை நீக்கி படங்களை பகிர்ந்துள்ளார்...










May 28, 2017

எனக்கு தமிழ் கற்றுத்தந்த ஆசான் கருணாநிதி... நடிகர் கமல்ஹாசன் புகழாரம்


தமக்கு தமிழ் கற்றுத்தந்த ஆசான்களில் ஒருவர் கருணாநிதி என அவரது 94-வது பிறந்தாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாளையோட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் வீடியோ பதிவில் தெரிவித்துள்ள வாழ்த்தில் அவர் கூறுகையில் கருணாநிதியின் வசனம் என்பது நாடக, சினிமா துறைக்கு வரும் கலைஞர்களுக்கு அனுமதிச் சீட்டாகும்.

நீச்சல் தெரியுமா என்றால் நீரில் குதிச்சு காட்டுவது போல், நடிக்கத் தெரியுமா என்றால் கருணாநிதி வசனத்தை சிவாஜி போல் பேசினால் போதும் அந்த கலைஞன் நடிக்கத் தெரிந்தவர் என்று அங்கீகரிக்கப்படுவார். சட்டம் என் கையில் படத்தின் 100-ஆவது நாள் விழாவின்போது கருணாநிதியுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

முத்தமிழ் அறிஞர்கள்
மேடையில் ஒரு முறை பேசும்போது கருணாநிதி, சிவாஜி கணேசன், கண்ணதாசன் ஆகிய மூன்று பேரை குறிப்பிட்டு தமக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்கள் என்றேன். அப்போது மறுநாள் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர். 3 பேரை சொன்னதற்கு பாராட்டு தெரிவித்தார்.

நானில்லையா...
அப்போது விளையாட்டாக கேட்டார் நான் ஆசான் இல்லையா என்று, அதற்கு வாத்தியாரே நீங்கதான் என்றேன். கருணாநிதியின் வசனத்தை சிவாஜிகணேசன் குரலில் நடித்து காட்டுவது என்பது ஒரு பரீட்சை. திரைக்கதாசிரியர், வசன கர்த்தா ஆகியவற்றில் கருணாநிதியின் பெயர் சரித்திரத்தில் பொரிக்கப்பட வேண்டிய பெயர்.

அற்புதமான கதாசிரியர்
கருணாநிதி மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல அற்புதமான கதாசிரியர். கருணாநிதியுடனான உறவு அரசியலுக்கு அப்பாற்றட்ட ஒன்று. தசாவதாரம் படத்தை பாராட்டி என் கன்னத்தை கிள்ளியவர் கருணாநிதி. எனது படங்களை நான் அவருக்கு பிரிவீயூ ஷோ போட்டு காட்ட மறந்து விட்டாலும் அவர் நினைவுப்படுத்துவார்.

 மனம் இருந்தால் போதும்
வாழ்த்த வயதில்லை என்று சிலர் கூறுவர். ஆனால் வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை. மனம் இருந்தால் போதும். கருணாநிதியின் வசனத்தை பேசுபவன், நடிப்பதற்கான தகுதியைப் பெற்றவன் நான். அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவர் எவ்வளவு இளமையில் வந்திருக்க வேண்டும். அதற்காக அவர் எத்தனை முதுமைகளை சந்தித்திருப்பார்? என்றார் கமல்ஹாசன்.

May 25, 2017

கேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக முன்னாள் அமைச்சர் என்பதை நம்ப முடிகிறதா ?


முழமையாக படிக்கவும்.
தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.

உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, ‘இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன்’ என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.

கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.
எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் பிறந்தவர்.
     
        பிறப்பு என்பது    தற்செயலாக நடக்கும்  இயற்கை நிகழ்வு. இதில்  பெருமை படவோ அல்லது சிறுமை  கொள்ளவோ   எதுவுமில்லை. சுய (சொந்த) சாதி பெருமை பேசுவதும் சக மனிதனை தன்னை விட தாழ்தவன் என்று கருதுவதும் ஒரு வகையான  😨மன நோய்😬
   
      கக்கன் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர்.ஆனாலும் சாதி அடையாளம் தன்மீது  வராமல் பார்த்துக்கொண்டார். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.
இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது."(நாம் நடிகர் கருணாஸ் போன்ற தியாகிகளை ஜெயிக்க வைப்பவர்கள்)*" அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்:
எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’
தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.
1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார்.
அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு,
அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா! அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார்.

மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.
உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்.,

எதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது.

கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்?
சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார்.

கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார்.
அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன்.

கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க... ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!

எல்லாம் சரி .நயன்தாராவிற்கு   பெயர் வைத்த தமிழக அமைச்சர் யார் என்று கூறவேயில்லை என்று கேட்கிறீர்களா ?
என்ன செய்வது. நல்ல விஷியங்களை கூட நயன்தாரா என்று சொன்னால் தான் முழுமையாக படிக்கிறீர்கள்.

May 6, 2017

இஸ்ரோ மூலமாக இந்தியாவுக்கு கோடி கணக்கில் வருமானம்.. இதற்கு எல்லாம் யார் காரணம்..?


 இந்தியா தனது முதல் ராக்கெட்டினை விண்ணில் ஏவிய பிறகு உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க துவங்கியது. ஆனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் துவங்கப்பட்ட நேரத்தில் ராகேட் உதிரிப் பாகங்களைச் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்வதை வளர்ந்த நாடுகளின் ஊட்டங்கள் கிண்டல் செய்தன.

இது அத்தனையும் பொருட்படுத்தாமல் அமெரிக்காவின் செயற்கைக்கோள்களையும் இந்தியாவில் இருந்து ஏவும் அளவிற்கு இஸ்ரோ வளர்ந்துள்ளது. இஸ்ரோவின் இந்த வளர்ச்சியினால் பிற நாட்டின் செயற்கைகோள்களை விண்ணிற்குக் கொண்டு செல்வதன் மூலமாகப் பல லட்சம் கோடிகளை ஒவ்வொரு ராக்கெட்டினை விண்ணில் செலுத்தும் போது விண்வெளி நிறுவனம் பெற்று வருகின்றது.

2005-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளிக்கு ராக்கெட்டினை செலுத்தும் போது விண்வெளி நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துக்கோண்டே வருகின்றது. உலகளவில் அதிகச் செயற்கை கோள்களை விண்ணுக்குச் செலுத்தும் நாடாகவும் இந்திய வளர்ந்து வருவதால் உலகின் பிற நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இஸ்ரோவை நாடி வந்து பல கோடிகள் செலவழித்துத் தங்களது செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகின்றனர், இதனால் இந்தியா அரசுக்கு வருவாய் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆர்யாபட்டா
1975 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ம் நாள் இந்தியா தனது முதல் செயற்கைக்கோளான ஆர்யாபட்டாவை விண்ணில் ஏவி வரலாறு படைத்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த நிகழ்வைத் தொடர்ந்து சூரிய இயற்பியல், விண்ணியல், எக்ஸ் ரே வானவியல் உள்ளிட்ட துறைகளில் மதிப்பு மிக்க ஆய்வுகளைச் செய்து வந்தது.

ஏறக்குறைய 42 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் படிப்படியாகப் பலம் பெற்று வளர்ந்து இன்று ஒரே நாளில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவி சாதனை இப்போது சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் உருவாகிட காரணகத்தா
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட சில அறிவியல் நிறுவனங்கள் இந்தியாவில் உருவாகிட முக்கியமான காரணகர்த்தாவாக விளங்கியவர் டாக்டர் விக்ரம் அம்பாலால் சாராபாய் ஆவார். அவரது ஓய்வில்லாத உழைப்பு இன்று அவரை இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையாகத் திகழச் செய்கிறது. இந்தியா சுதந்திரத்திற்குப் பிந்தைய போராட்டக் காலங்களிலிருந்து இன்றைய வானவியல் அறிவியலின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருப்பதற்கு முழுமுதற் காரணம் அவரது வாழ்நாள் உழைப்பே என்றால் மிகையாகாது.

திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்கமூட்டியவர்
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் போன்ற திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்கமூட்டி நாட்டின் சிறந்த மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உருவாகிய டாக்டர் சாராபாய் பற்றிய வியப்பூட்டும் சில அரிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

  சுதந்திரப் போராட்ட வீரரின் குடும்பத்திலே பிறந்தவர்
ஜவுளித் தொழிலின் முன்னோடி தொழிலதிபரும், தீவிர காந்திய பற்றாளருமான சேத் அம்பாலால் சாராபாய்க்கு, எட்டாவது குழந்தையாக 1919ல் டாக்டர் சாராபாய்ப் பிறந்தார். மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அம்பாலால், சபர்மதி ஆசிரமம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த போது கணிசமான பொருளுதவி செய்தார். மேலும், அவரது சகோதரியான மிருதுளா சாராபாய் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

மதிப்புமிக்க ஆலோசகர் டாக்டர் சி வி ராமன்
ஒரு அசாதாரண இளைஞனான டாக்டர் சாராபாய் குஜராத்தின் கல்லூரி ஒன்றில் தனது படிப்பை முடித்த பின்னர் மேற்படிப்புக்காகக் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்றார். இருப்பினும், இரண்டாம் உலகப்போர் வெடித்தபோது அவர் நாடு திரும்பினார். அவரது புலமைக்கான ஆலோசகர் யார் தெரியுமா? எல்லாக் காலங்களிலும் கொண்டாடப்படுபவரும், நோபெல் பரிசு வெற்றியாளருமான டாக்டர் சி வி ராமன்தான் அவர். 1947 ல் தனது ஆராய்ச்சிப் படிப்பினை முடித்தார். வெப்பமண்டல பிரதேசங்களில் விண்வெளி கதிர்வீச்சு குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

 இந்திய விண்வெளி திட்டத்திற்கு அச்சாரம்
ஷாஹிபாக் அம்தாவதில் இருந்த ஆவலைத் தூண்டுகிற ஓய்வு இல்லத்தின் ஒரு சிறிய அறை அவரது அலுவலக அறையானது. புத்திசாலி இளைஞனான சாராபாய் அந்த அறையில்தான் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்தை உருவாக்கித் தொடங்கினார்.


இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக் கூடம்
இந்தியா சுதந்திரம் பெற்றபோது தனது ஓய்வற்ற உழைப்பினைக் கொண்டு டாக்டர் சாராபாய் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்தை 1947 ல் அமைத்தார். இன்று விண்வெளி மற்றும் அதனைச் சார்ந்த அறிவியல் கல்வி நிறுவனங்களில் முதலிடத்திலும், மிக முன்னேற்றமான இடத்திலும் அது உள்ளது.
1952 ல் அவரது நண்பரும் ஆலோசகருமான டாக்டர் சி வி ராமன் புதிய இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
இந்திய அரசை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் துவக்க சம்மதிக்க வைத்தபோது அவருக்கு வயது 28. நம்மில் பலர் 20 வயதுகளில் சுயமாக முடிவெடுக்கப் போராடிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் டாக்டர் சாராபாய் தனது 28 வயதில் மிகச் சாதுரியமாக வாதாடி விண்வெளி நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்கினார். ரஷ்யா ஸ்புட்னிக் செயற்கைக்கோளை ஏவியபோது வளரும் நாடான இந்தியாவும் நிலவுக்குச் செல்ல முடியும் என்று கூறி அரசாங்கத்தைச் சம்மதிக்க வைத்தார். இப்படித்தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் ராக்கெட்
இந்தியா டாக்டர் சாராபாய் போன்ற ஆதாரமான விஞ்ஞானியை இது வரை கண்டதில்லை. 1963 ம் ஆண்டு 21 ம் நாள் அவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அவரது விஞ்ஞானிகள் குழுவும் இணைந்து ஒரு சிறிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவினர். திருவனந்தபுரத்தின் ஒரு தேவாலயத்தின் பாதிரியாரைச் சம்மதிக்க வைத்து தும்பா என்ற சிறிய கிராமத்தில் இந்தச் சாதனையைச் செய்தனர். இப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனம் என்று அழைக்கப்படுகிற தும்பா ராக்கெட் ஏவுதளத்தைப் படிப்படியாக மேம்படுத்தினர். இந்த வெற்றிகரமான செயற்கைக்கோள் ஏவியதற்குப் பிறகு வீட்டிற்குச் சாதாரணமான தந்தி ஒன்றை அனுப்பினார். குறிப்பிடத்தக்க ராக்கெட் காட்சி - என அதில் கூறப்பட்டிருந்தது.

 
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமை பணியமர்த்தினார்
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமிற்கு நேர்முகத்தேர்வு செய்தது மட்டுமல்லாமல் டாக்டர் கலாமின் ஆரம்பக் காலச் செயல்பாடுகளின்போது அவருக்கு முக்கிய ஆலோசகராகவும் இருந்து செயல்பட்டார்.

தான் இத்துறைக்குப் புதியவராக இருந்தபோதும் டாக்டர் சாராபாய் தன்மீது சிறப்புக் கவனம் செலுத்தி தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக டாக்டர் கலாம் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை கலாம் இவ்வாறு கூறினார். என்னை விக்ரம் சாராபாய்தான் கண்டுபிடித்தார். அவர் என்னை இளம் விஞ்ஞானியாகக் கண்டெடுத்தபோது நான் அதிகமாக எந்தத் தகுதியையும் பெற்றிருக்கவில்லை, ஆனால் கடினமாக உழைப்பேன், அந்த நேரத்தில் அதற்குரிய அறிவையும் பெற்றிருந்தேன். அவர் எனக்குச் சுயமாக வளரக்கூடிய பொறுப்பினை கொடுத்திருந்தார். அவர் என்னைத் தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் என்னுடைய வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுத்து என்னுடைய வெற்றிகளிலும் தோல்விகளிலும் என்னுடனேயே இருந்தார்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா செலுத்துவதில் முக்கியப் பங்கு
துரதிர்ஷ்டவசமாக அவர் தன்னுடைய 52 வது வயதில் 1971 ல் இறப்பதற்கு முன்பே இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் கட்டமைப்பினைத் தொடங்கியிருந்தார். வான்வெளி கதிர்வீச்சுகள், விண்ணின் மேலடுக்கு சூழ்நிலை குறித்த அவரது பணிகள் அறிவியல் உலகின் மைல் கற்களாகும்.

இந்தியாவிற்குக் கேபிள் டிவி கொண்டு வந்தவர்
நீங்கள் கேபிள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பவராக இருந்தால் நீங்கள் டாக்டர் விக்ரம் சாராபாய்க்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளீர்கள். 1975 ல் நாசாவின் ஒத்துழைப்போடு செயற்கைக்கோள் வழி தொலைக்காட்சி பரிசோதனையை மேற்கொண்டார். இதுவே கேபிள் டிவி யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இந்திய நிர்வாகவியல் கல்வி நிறுவனம் அகமதாபாத்தில் உருவாக்கம்
இந்தியாவின் மிகப்பெரிய அறிவியல் நிறுவனங்களை அமைத்திட காரணமாயிருந்ததைப்போலவே அகமதாபாத்தில் இந்திய நிர்வாகவியல் கல்வி நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார்.இன்று அந்த நிறுவனம் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், புதிய தொழில் முயற்சிகளுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்காக அமைந்துள்ளது.

April 30, 2017

20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளி 'பாவேந்தர்' பாரதிதாசன்


புரட்சி மிகுந்த தனது எழுத்துகள் மூலம் தமிழக மக்களிடம் என்று நிலைத்திருக்கும் ’பாவேந்தர்’ பாரதிதாசன் பிறந்த தினம் இன்று.

மகாகவி பாரதியின் கவிதா மண்டலத்தில் தோன்றிய முதல்கவிஞரான பாரதிதாசன் தனக்கென்று ஒரு கவிஞர் பரம்பரையையே உருவாக்கினார்.

புதுச்சேரியில் (1891) பிறந்த பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். 10 வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்த அவர் பாரதியார் மீது கொண்ட பற்றால், தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றி கொண்டார்.

தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்தபோதினி, சுதேசிமித்திரன், புதுவை முரசு, குயில் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். திரைப்படத் துறையில் 1937-ல் பிரவேசித்த பாரதிதாசன் கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத் தயாரிப்பு என அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்தவர்.

அவர் இயற்றிய 'தமிழுக்கும் அமுதென்று பேர்', 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ போன்ற பல பாடல்கள் காலத்தால் அழியாதவை.

'எங்கெங்கு காணினும் சக்தியடா! ஏழுகடல் அவள் வண்ணமடா!' என்றெல்லாம் ஆரம்பத்தில் ஆன்மிகத்தில் ஈடுபாடுகொண்டு கவிதைகளை உருவாக்கினார். பின்னர் முற்றிலுமாக அதிலிருந்து விலகி முழுக்கமுழுக்கச் சமூகச் சிந்தனை கவிதைகளை இயற்றத் தொடங்கினார். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின்மீது அளப்பரிய ஈடுபாடுகொண்டார். அதன் தாக்கத்தில் ''இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கிறது என்பானும் இருக்கின் றானே!'' என்று பாடத் தொடங்கினார்.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பற்றி பாரதிதாசன் தீட்டிய பாடல் புகழ்மிக்கது. ''தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் யார்? அவர்தாம் பெரியார்'' என்ற பாடல் இன்றுவரை பகுத்தறிவு மேடைகளில் முழங்கப்பட்டு வருகிறது.

பால்ய விவாகமும் அதைத் தொடர்ந்து பெண்கள் விதவையாவதும் இயல்பாக நடைபெற்று வந்த காலம் ஒன்றிருந்தது. அப்போது விதவை மறுமணமே பாவமாகக் கருதப்பட்டது. பெண்கள் காலம்முழுவதும் வெள்ளையுடை அணிந்து விதவை என்ற முத்திரைக் குத்தப்பட்டு வாழ்க்கை பாழாக்கப்படுவதைக் கண்டு மனமிரங்கிய பாரதிதாசன் ''கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா'' என்று எழுதிய கவிதை சமூக எழுச்சியை உருவாக்கத் துணைபுரிந்தது.

பல்வேறு புனைப்பெயர்களில் பாடல், கட்டுரை, நாடகம், கவிதை தொகுப்பு, கதைகளை பாரதிதாசன் எழுதிவந்தார். ‘இலக்கியக் கோலங்கள்’, ‘இளைஞர் இலக்கியம்’, ‘குடும்ப விளக்கு’, ‘பாண்டியன் பரிசு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘குமரகுருபரர்’ போன்றவை இவரது முக்கியப் படைப்புகள் ஆகும்.

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக 1954-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969-ல் இவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தது. 1990-ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது.

புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்று கொண்டாடப்படுபவரும், 20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளிகளில் ஒருவருமாக பாரதிதாசன் அறியப்படுகிறார்.

April 29, 2017

ஓவியர் ராஜா ரவி வர்மா


ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.

ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா- நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.

ராஜா ராஜவர்மா, ரவிவர்மாவுக்குத் தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றை யெல்லாம் கற்றுக்கொடுத்தார். திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன் 1862-ம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார். சுதேசிமுறையில் செய்யப்பட்டன. அவ்வேளையில் அரச குடும்பத்தைச் சேர்ந்ததொரு பெண்ணை மணந்துகொண்டார்.

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார். தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர் 1868-ல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையயும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார். அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது. ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார். 1870 - 1880 ஆண்டுகளில் கிளிமானூரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைத்தார்.

மஹாராஜா மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரவிவர்மா பரோடா சமஸ்தானத்தில் 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பத்து ஆண்டுகள் தங்கினார். அவரது பெரும்பாலான சிறந்த ஓவியங்கள் அங்குதான் படைக்கப்பட்டன. தமது வாழ்வின் பெரும்பகுதியை அவர் மும்பாயில் கழித்தார். அங்குதான் 1894-ல் அவர் தமது அச்சகத்தைத் நிறுவினார். 1896 இல் அவரது அச்சகத்தில் முதல் பிரதி ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம் அச்சிடப்பட்டது. 1899 இல் அச்சகத்தை ஸ்லிஷர் (Slisher) நகரத்துக்கு மாற்றினார். 1906 இல் தமது 58 -வது வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார்.

1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். "நவம்பர் 24 2002 இல் டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது

இந்தியக் கலை விமர்சகர்கள் அவரது ஓவியங்களில் வெறும் கதை சொல்லும் (illustrative) தன்மையும், உணர்ச்சி மேலோங்கிய தன்மையும்தான் காணப்படுகின்றன என்றும் அவர் கற்பனை வரட்சி மிக்க, மேலை நாட்டுப் பாணியை நகல் செய்யும், இந்தியக் கலையியலைப் புறக்கணித்த ஓவியர் என்றும் குறைகூறினார்கள். அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட பிரதி ஓவியங்கள் 'கேலண்டர் ஓவியர்' என்று அவரை கொச்சைப் படுத்தப் பயன்பட்டன. மேலை நாட்டு உத்தியான தைல வண்ணத்தை பயன்படுத்தி இந்திய வண்ண உத்தியை அவர் அவமதித்ததாகக் கூடக் குறிப்பிட்டார்கள்.

April 27, 2017

தந்தி அனுப்புவதற்கான சங்கேத மொழியை உருவாக்கிய சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ்


1844ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் முதல் தந்தியை, சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலிருந்து பால்டிமோருக்கு சோதனை முறையில் அனுப்பினார். இவர்தான் தந்தி அனுப்புவதற்கான சங்கேத மொழியை உருவாக்கியவர். அதனால்தான் அந்த மொழிக்கே மோர்ஸ் கோட் (MORSE CODE) என்று பெயர்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு குறியீடு இருக்கும். அந்தக் குறியீட்டை மோர்ஸ் பலகையில் (morse key) அழுத்தி மறுமுனைக்குப் புரிய வைப்பார்கள். அதனை அங்குள்ளவர் புரிந்துகொண்டு செய்தியை எழுதிக்கொள்வார். அந்தச் செய்தி ஒரு தாளில் எழுதப்பட்டு சம்பந்தப்பட்டவருக்குக் கொடுக்கப்படும். இதற்கெனப் பயிற்சி பெற்றவர்களே தந்தி அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். மோர்ஸ் பலகை இயந்திரத்தில் கட்..கடா..கட்... என்று எழுப்பப்படும் ஓசையிலேயே செய்திகள் புரிந்து கொள்ளப்படும்.

தொலைப்பேசியை கிரஹாம் பெல் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை தந்தி சாதனம்தான் உலகின் தகவல் தொடர்புக் கருவியாக இருந்தது. அதாவது, புறாக்களின் கால்களில் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்த காலத்திற்கு அடுத்தபடியாக, தகவல் அனுப்பும் முதல் அறிவியல் சாதனம் தந்தி அனுப்பும் கருவிதான்.

April 26, 2017

கணித மேதை ராமானுசன்


கணித மேதை ராமானுசன் 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார்.

கணித மேதையான ராமானுசம் சீனிவாசன்-கமலத்தம்மாள் ஆகிய தம்பதியருக்கு 1887-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவருக்கு பிறகு இவரது பெற்றோருக்கு மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்து போயினர்.

இராமானுசனின் தந்தையாரும் தந்தை வழி பாட்டனாரும் துணிக்கடைகளில் எழுத்தராக பணியாற்றி வந்தனர். தாய் வழி பாட்டனாரும் ஈரோட்டு முனிசிப் அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே அவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார்.

இராமானுசன் தாய் வழி தாத்தா வேலை பார்த்த கடை 1891-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்துக்கு மாறியதால் இவரது குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892-ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் ராமானுசன் தொடக்க கல்வியை தொடங்கினார்.

1894-ஆம் ஆண்டு அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்க கல்வியில் சேர்ந்து கல்வி கற்றார்.

1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக் கல்வியை நிறைவு செய்தார். 1897-ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார்.

சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் ‘The Ramanujan Journal’ என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

April 16, 2017

பி.ஆர்.அம்பேத்கர்


தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் போராடியவரும், இந்திய அரசியல் சாசன சிற்பி என்று போற்றப்படுபவருமான பாபா சாஹேப் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar) பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மத்தியப் பிரதேசத்தின் மஹூ பகுதியில் உள்ள அம்பாவாதே கிராமத்தில் (1891) பிறந்தார். தந்தை ராணுவப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணி யாற்றியவர். சத்தாராவில் கல்வி பயின் றார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளியிலும், சமூகத்திலும் பல்வேறு கொடுமை களை அனுபவிக்க நேர்ந்தது.

* பள்ளியில் தன்னை ஊக்குவித்து அன்பு காட்டி உதவிய ஆசிரியர் மகாதேவ் அம்பேத்கர் நினைவாகத் தன் பெயரை பீம்ராவ் அம்பேத்கர் என மாற்றிக்கொண்டார். குடும்பம் 1904-ல் பம்பாய் சென்றது. இவர் ஆர்வத்துடன் கல்வி கற்றதால், வறுமையிலும் குடும்பத்தினர் அனைவரும் அதற்கு ஆதரவாக இருந்தனர்.

* பரோடா மன்னரின் உதவியால் கல்லூரியில் சேர்ந்தார். கருமமே கண்ணாக இருந்து படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் பணியாற்றினார். அங்கும் சாதிக் கொடுமைகள் தொடர்ந்ததால் மனம்நொந்து வீடு திரும்பினார். இதைக் கேள்விப்பட்ட மன்னர் அவரை அழைத்து தவறுக்கு வருந்தினார்.

* தலைசிறந்த மாணவரான இவரை கொலம்பியா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. படிக்க அனுப்பிவைத்தார். உயர்கல்வி பெற அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். அங்கு பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் பயின்றார். ‘பண்டைய இந்தியாவில் வாணிபம்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி முதுகலைப் பட்டம் பெற்றார்.

* ‘இந்தியாவில் சாதிகள்’ என்ற கட்டுரையை எழுதினார். இந்தியப் பொருளாதாரம் குறித்து எழுதிய ஆய்வுக் கட்டுரைக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல் என்ற ஆய்வுக் கட்டுரைக்கு முது அறிவியல் பட்டமும், ரூபாயின் பிரச்சினை என்ற ஆய்வுரைக்கு டி.எஸ்.சி பட்டமும் பெற்றார்.

* நாடு திரும்பியவர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார். பம்பாய் சிடென்ஹாம் கல் லூரியில் பொருளாதாரத் துறை பேராசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் லண்டன் சென்று சட்டம் பயின்றார். பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

* ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் கிடைக்க பல்வேறு போராட்டங்களை நடத்தினார். மகத் என்ற இடத்தில் இவர் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தால், நாடு முழுவதும் பிரபல மானார். தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்குப் போராடுவதற்காக ‘பஹிஷ்கிருத் ஹிதகாரிணி சபா’ என்ற அமைப்பைத் தொடங்கினார். பல நூல்களை எழுதினார்.

* அரசியல் சாசன சபையில் பங்கேற்று, அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் தலைசிறந்த பங்களிப்பை வழங்கினார். நாடு விடுதலை பெற்ற பிறகு உருவாக்கப்பட்ட அரசியல் சாசனக் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். நாட்டின் முதல் சட்ட அமைச்சராகவும் பதவியேற்றார்.

* இந்து மத சாதி அமைப்பை கடுமையாக விமர்சித்தவர், ஆதரவாளர்களுடன் புத்த மதத்துக்கு மாறினார். தாழ்த்தப்பட்டோர், கல்வி மூலமாகவே தங்களை வளர்த்துக்கொள்ள வேண் டும் என்பதை வலியுறுத்தினார். ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார்.

* ஆசிரியர், இதழியலாளர், எழுத்தாளர், சமூகநீதிப் போராளி என பன்முகப் பரிமாணம் கொண்ட பி.ஆர்.அம்பேத்கர் 65-வது வயதில் (1956) மறைந்தார். இவருக்கு 1990-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

March 12, 2017

ஜாலியன் வாலாபாக் நாயகரின் மகள் தமிழ்நாட்டின் மருமகள்!


வரலாற்று ஆசிரியா்களால் ‘ஹீரோ ஆஃப் ஜாலியன் வாலாபாக்’என்று வர்ணிக்கப்படுபவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. பிறப்பால் முஸ்லிம். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகப் போராடியவர். ஆழ்ந்த இஸ்லாமிய மதப்பற்றும் ஜின்னாவுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்த இவர், முஸ்லிம்களுக்காக தனிநாடு உருவாவதை எதிர்த்துக் குரல்கொடுத்தவர்.

இவரது மகள் சஹிதா, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம்பிஎஸ் ஸைக் காதல் மணம் செய்துகொண்டதும், இவர்களின் திருமணத்தை நேருவே முன்னின்று நடத்திவைத்ததும் பலர் அறியாத செய்தியாகும்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை

டாக்டர் கிச்சுலு, டாக்டர் சத்யபால் இருவரை யும் ஆங்கிலேய அரசு பஞ்சாபிலிருந்து வெளியேற்றியது. இதைக் கண்டித்து, அமிர்த சரஸில் ஜாலியன் வாலாபாக்கில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடாயிற்று. அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவதாக இருந்த டாக்டர் கிச்சுலு கைதுசெய்யப்பட்டதால், அவர் இருக்கை காலியாக இருந்தது. ஆனாலும், கூட்டத்தின் தலைவருக்கான இடத்தில் டாக்டர் கிச்சுலுவின் படம் வைக்கப்பட்டுக் கூட்டம் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு நடந்த சம்பவம், இந்திய வரலாற்றின் கருப்பு தினமாக அதை மாற்றியது. ஜாலியன் வாலாபாக் படுகொலை காந்தியைக் கொதித்தெழ வைத்தது.

ஜெனரல் டயரின் கொடுஞ்செயலைப் புகழ்ந்து பாராட்டிய அன்றைய ஆங்கில ஆட்சி, பஞ்சாப் புரட்சிக்குக் காரணமானவர் எனக் குற்றம்சாட்டி, டாக்டர் கிச்சுலுவைச் சிறையில் அடைத்தது.

“குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது?” என்று ஜெயில் கம்பியைப் பற்றியபடி கண்ணீர் மல்கக் கேட்ட தன் உறவினரிடம், ‘‘இந்தியாவில் அநாதை இல்லங்கள் இருக்கின்றன’’ என்று பதிலளித்தார் டாக்டர் கிச்சுலு. கிச்சுலு மிகச் சிறந்த பேச்சாளர். தோற்றத்தில் அழகர். ஷேக் அப்துல்லாவின் நெருங்கிய நண்பர். காஷ்மீர் பிரச்சினைகளில் சைபுதீன் கிச்சுலுவின் கருத்தறிந்துதான் நேருவே செயல்பட்டதாகச் சொல்வதுண்டு. காந்திஜியும் கிச்சுலு வீட்டில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் என்பதால், ஆங்கிலேய அரசு அவரை அடிக்கடி சிறைவைத்தது. தமது வாழ்நாளின் 14 ஆண்டுகளைச் சிறைக் கொட்டடிகளில் கழித்தார் கிச்சுலு. தேசத்துக்காகத் தன் பரம்பரைச் சொத்துகளை, நகைகளை, உடைமைகளை எல்லாம் அப்படியே வாரிக் கொடுத்தவர் கிச்சுலு. அந்திமக் காலத்தில் டெல்லி பொதுமருத்துவமனையில், பரம தரித்திரராகத்தான் காலமானார்.

கம்யூனிஸ்ட் ஆக்கிய கடிதம்

மருத்துவமனையிலிருந்து அவரது மகள் சஹிதாவுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி எழுதினார். ‘ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது பெரிதில்லை. நமது மக்களுக்கு ஏழ்மை யிலிருந்து என்று விடுதலை கிடைக்கிறதோ அப்போதுதான் நிஜமான விடுதலை பெற்றதாக ஆகும். இதற்காகப் பாடுபடு.’ இதன் பிறகுதான் சஹிதாவுக்கு கம்யூனிஸத்தின் மீது ஈடுபாடு உண் டாகக் காரணமாயிற்று. அக்கட்சியின் மாணவர் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார் சஹிதா.

தேசப் பிரிவினைக்குப் பிறகு, கிச்சுலுவின் குடும்பம் லாகூரிலிருந்து டெல்லிக்குக் குடிபெயர்ந்தது. டெல்லி ஆர்ட் தியேட்டரில் பாட்டு, நடனம் என்று பல நிகழ்ச்சிகளில் சஹிதா பங்குகொண்டார். அப்போதுதான் தமிழ்நாட்டிலிருந்து வந்த எம்.பி.சீனிவாசன் என்ற இளைஞரைச் சந்தித்தார். நட்பு காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது.

பாதை தெரியுது பார்...

எம்பிஎஸ் ‘பாதை தெரியுது பார்’ படத்தில் இசையமைத்த ‘தென்னங்கீத்து ஊஞ்சலிலே...’, ‘சிட்டுக்குருவி பாடுது தன் பெட்டைத் துணையை தேடுது...’ போன்ற பாடல்கள் காலத்தில் அழிக்க முடியாதவை.

சென்னை கேகே நகரில் சஹிதா சீனிவாசன் வசிப்பதாகக் கேள்விப்பட்டு, அவரைச் சந்தித்தபோது, அவர் வாழ்க்கை இடர்சூழ்ந்த ஒன்றாக இருந்தது. எம்பிஎஸ் காலமாகியிருந்தார். ஒரே மகன் கபீருக்கு மனநலப் பிரச்சினை. மாமியார் (எம்பி எஸின் தாயார்) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டி ருந்தார். எம்பிஎஸ்ஸுக்கு நிறைவேறாத லட்சியங்கள் ஏதேனும் இருந்ததா என்று கேட்டதற்குச் சொன்னார். “அவருக்கு லட்சியம் என்று ஏதும் கிடையாது; கனவுகளில் வாழ்ந்தவர் அவர். எம்பிஎஸ் ஒரு நேர்த்தியாளர். தன்னுடைய இசைக் குறிப்புகளையும்கூட உரிய முறையில் அவரே ஒழுங்காகத் தொகுத்து வைத்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார். அவரது அரசியல், கலை, இலக்கியம் சம்பந்தமான கட்டுரை களைத் தனி நூலாக வெளியிடும் கடமையும் எனக்கு இருக்கிறது” என்றார் சஹிதா.

இருண்ட அத்தியாயம்

சஹிதாவைச் சந்தித்து 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரைத் தேடிச் சென்றோம். சஹிதாவும் அடுத்து அவரது மகனும் மறைந்துபோனதே எங்களுக்கு கிடைத்த தகவல்கள். எம்பிஎஸ்ஸின் இசைக் குறிப்புகள் என்ன ஆயின? அவரது அரசியல், கலை - இலக்கியக் கட்டுரைகள். நூல் வடிவில் வந்தனவா? தெரியவில்லை. ‘ஜாலியன் வாலாபாக் நாயகர்’என்ற பெயரில் ஒளி வீசிய சைபுதீன் கிச்சுலுவின் வாரிசுகளின் வாழ்க்கையின் இறுதி அத்தியாயம் மேற்கொண்டு வாசிக்க முடியாதபடி இருண்டுகிடக்கிறது!

- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com

March 2, 2017

வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே !


'வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே' உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாமனிதன்.... படியுங்கள் பகிருங்கள்!

முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்.

தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.

அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.

அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.

தனது வாழ்க்கை அனுபத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.

Toyoto நிறுவனத்திற்கு piston(உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.

யாருக்காகவும் அவன்காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.

இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.

முதலாவது கனவுத் திட்டம் படுதோல்விஅடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.

புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய pistonமாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.

எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சீமெந்து தட்டுப்பாடு.

எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சீமெந்துக் கூட கிடைக்கவில்லை. ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர்நண்பன்.

இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சீமெந்து கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.

ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.

அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.

ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால்,தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.

 மொத்தத்தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.

இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........
ஆனால் அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......
 “நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெற்றோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.

எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.

அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.

அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.

அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.

அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று?????

அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.

கையில் பணமில்லை, வங்கிகள் கடன்தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.

அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.

முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.

5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள்முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.

முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.

இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.

 ஹோண்டா கார்களுக்கு மேற்கத்தேய நாடுகளிலும் பெரும் வரவேற்பு இருந்தது. எத்தனையோ வகை வகையான தயாரிப்புக்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் அனைவருக்கும் நினைவுக்குவருவது, அதன் மாமனிதன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்: “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று.....

February 25, 2017

தனக்கென யாரை சம்பாதித்தார் ஜெயலலிதா?


சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால், அவரது இந்த பிறந்தநாளில் அவர் எந்த கட்சிக்காக உழைத்தாரோ அந்தக் கட்சி இரண்டாக பிளவுபட்டு உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 69 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 5ஆம் தேதி, அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 'மாரடைப்பு' ஏற்பட்டு மறைந்துவிட்டார். செப்டம்பர் 6ஆம் தேதி அவரது பூத உடல் மெரினாவில் எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜெயலலிதாவின் உயிர்தோழியாக 33 வருடங்கள் கூடவே இருந்து 33 பிறந்தநாளையும் உற்சாகமாகவும் சந்தோஷத்துடனும் கொண்டாடிய சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். 'இந்த பிறந்தநாளில் என் எண்ணம் முழுவதும் அவரை பற்றிய நினைவுகளில் உள்ளது' என்று சசிகலா தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், சசிகலா ஜெயலலிதா இறந்த 30 நாட்கள் முடிவடைவதற்கு முன்பே ஜெயலலிதாவைப் போல் ஆடை, அலங்காரம் செய்துகொண்டு தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக்கிக் கொண்டார். ஒருவர் இறந்த 30ஆவது நாள் இந்துக் குடும்பங்களில் துக்கம் அனுசரிப்பது வழக்கம். ஆனால், ஜெயலலிதா மறைந்த 30ஆவது நாள் அன்று 33 வருடங்கள் கூடவே இருந்த உயிர்த்தோழி சசிகலா அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக, மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துக்கொண்டிருந்தார்.
ஜெயலலிதாவின் உடன் பிறந்த அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகள் தீபக் மற்றும் தீபா ஆகிய இருவரும்தான். அவர்களில் தீபா, இன்று ஜெ.வின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அவரும் ஜெ.யின் புகழ் வெளிச்சத்தையும் அரசியலையும் தனதாக்கிக்கொள்ளவே முயன்று வருகிறார்.
தீபக், இத்தனை நாள் அமைதியாக இருந்தவர் நேற்று 'போயஸ்கார்டன் உள்பட என் அத்தையின் பெயரில் உள்ள சொத்துக்கள் எனக்கும் என் அக்காவுக்கும்தான் வேண்டும்' என்று திடீரென பேட்டி கொடுத்துள்ளார். ஜெ.வுக்கென இருக்கும் உறவுகள் அவருடைய கட்சியையும், சொத்தையும் கைப்பற்றுவதில்தான் போட்டி போட்டுக்கொண்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த வருடம் கூட 68 கிலோ கேக் வைத்து, முன்னாள் அமைச்சர் வளர்மதி வெட்டி, கோகுல இந்திராவுக்கு ஊட்டிவிட்டார். 67ஆவது பிறந்தநாளில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோயிருந்த சூழ்நிலையிலும் கூட, அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் 67 கிலோ கேக் வெட்டினார் வளர்மதி. லஷ்மண் ஸ்ருதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆனால், இன்று அவர்கள் 'ஜெயலலிதா உயிருடன் இல்லை, அவரது கண்பார்வை தன் மீது படப்போவதில்லை, புதிய பதவிகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை' என்பதால் அடக்கியே வாசிக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் உடன் பிறந்த அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகள் தீபக் மற்றும் தீபா ஆகிய இருவரும்தான். அவர்களில் தீபா, இன்று ஜெ.வின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அவரும் ஜெ.யின் புகழ் வெளிச்சத்தையும் அரசியலையும் தனதாக்கிக்கொள்ளவே முயன்று வருகிறார்.
தீபக், இத்தனை நாள் அமைதியாக இருந்தவர் நேற்று 'போயஸ்கார்டன் உள்பட என் அத்தையின் பெயரில் உள்ள சொத்துக்கள் எனக்கும் என் அக்காவுக்கும்தான் வேண்டும்' என்று திடீரென பேட்டி கொடுத்துள்ளார். ஜெ.வுக்கென இருக்கும் உறவுகள் அவருடைய கட்சியையும், சொத்தையும் கைப்பற்றுவதில்தான் போட்டி போட்டுக்கொண்டுள்ளனர்.
ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் பூத உடல் கிடத்தப்பட்டிருந்த போது, 'ஐயோ அம்மா' என்று உண்மையான அன்புடனும் இழப்பின் வலியுடனும் அழுத தொண்டர்கள் மட்டுமே இன்று ஜெயலலிதாவை அதே பாசத்துடன் நினைத்துப் பார்க்கிறார்கள். தன்னுடைய 68 வருட வாழ்க்கையில் தனக்கென உருகும் ஒரு உறவைக் கூட ஜெயலலிதா சம்பாதிக்கவில்லையா?

January 11, 2017

மீண்டும் கேப்டனாகக் களமிறங்கி ருத்ரதாண்டவமாடிய தோனி


இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தோனி தலைமையிலான இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய பின்னர் அவர் தலைமையில் இந்திய ஏ அணி இன்று களம் கண்டது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியா ஏ அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து இந்தியா ஏ அணியின் இன்னிங்ஸை ஷிகர் தவான் மற்றும் மன்தீப்சிங் ஆகியோர் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 25 ரன்கள் சேர்த்த நிலையில் மன்தீப் 8 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த அம்பாதி ராயுடு சீரான ரன்குவித்தார். தவான் 63 ரன்களில் ஆட்டமிழக்க, சதமடித்த ராயுடு ரிட்டையர்டு ஹர்ட்டாக வெளியேறினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்த யுவராஜ் சிங், 56 ரன்கள் குவித்து தனது தேர்வை நியாபப்படுத்தினார். இதையடுத்து ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் களமிறங்கிய தோனி, தனது ஆரம்பகால பேட்டிங்கை நினைவுபடுத்தும் வகையில் விளையாடினார். போட்டியின் 42ஆவது ஓவரில் களமிறங்கிய தோனி 40 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா ஏ அணி 5 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி மற்றும் ஜேக் பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

January 6, 2017

நான் சென்னைவாசி, ஹிந்தி நஹி மாலும்!- கூகுள் CEO சுந்தர் பிச்சை


கூகுள் CEO சுந்தர் பிச்சை இன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர் படித்த கல்லூரி என்பதால் உற்சாகம் பொங்க உரையாடினார்.

‘என் கல்லூரி காலங்களில் வகுப்பை மட்டம் அடிப்பேன். அதே சமயம் படிப்பில் அதிக கவனம் செலுத்துவேன். எனக்கு இந்தி சரியாக தெரியாது. நான் சென்னையில் இருந்து வந்தவன் என்பதால் கல்லூரியில் படித்த போது பிறர் ஹிந்தியில் பேசிக் கொள்வதை தவறாக புரிந்து கொள்வேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும்  ‘இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி வேகம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.  அனைத்து இந்திய மொழிகளிலும் கூகுள் இயங்க வழிவகை செய்யப்படும். பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு கூகுள் நிறுவனம் பேராதரவளிக்கும்’ என சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்தார். 

பிரதமர் மோடி இத்தனை ஆண்டுகளில் என்னென்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா...?


இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அவர், பதவிக்கு வந்தது முதல் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தவும், மற்ற நாடுகளுடன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படவும்... இந்தப் பயணங்களை மேற்கொண்டதாக அவர் எப்போதும் தெரிவிப்பார். இந்தியாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் சரி... அவர் பேசும்போது, சில மேற்கோள்களைச் சொல்வார். அது, நாட்டைப் பற்றியும்... நாட்டு மக்கள் பற்றியும், அவரைப் பற்றியுமானதாக இருக்கும். அந்த மேற்கோள்களில் சிலவற்றை... நாம், அவர் பேசும்போது கேட்டிருக்கலாம். ஆனால், அவர் மற்ற நாடுகளில் பேசியவற்றை... நாம் அறியும் வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும். அவர் சொன்ன மேற்கோள்களைத் தெரிந்துகொள்ள இங்கே பார்க்கவும்...