Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

July 24, 2017

இந்திய கிரிக்கெட் மகளிர் அணிக்கு விரைவில் பாராட்டு விழா!


மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவினாலும், கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதித்த இந்திய மகளிர் அணி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

இந்த வரலாற்று நிகழ்வை சாத்தியப்படுத்திய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணிக்கு சிறப்பான வரவேற்பு மற்றும் பாராட்டு விழாவை நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. இங்கிலாந்தில் இருந்து வரும் புதன்கிழமை தாயகம் திரும்பும் மகளிர் அணி வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 லட்சம் மற்றும் நிர்வாகிகளுக்கு ரூ.25 லட்சம் பரிசளிக்கப்பட இருக்கிறது.

இந்திய வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கும் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பாராட்டு விழாவுக்கான தேதி மற்றும் இடம் ஆகியவை விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற உடை அணிவதில் தோனிக்கு மகிழ்ச்சி


மஞ்சள் நிற உடையை அணிவதில் மகிழ்ச்சி அடைவதாக டிஎன்பிஎல் தொடக்க விழாவில் தோனி தெரிவித்தார்.

டிஎன்பிஎல் 2-வது சீசன் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோதியது. முன்னதாக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிக்ஸர் விளாசும் போட்டி நடைபெற்றது. இதில் மகேந்திர சிங் தோனி, மேத்யூ ஹைடன், பத்ரி நாத், மோகித் சர்மா, எல்.பாலாஜி, அனிருத்தா ஸ்ரீகாந்த், கணபதி, பவன் நெகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தோனி உள்ளிட்ட அனைவரும் மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்திருந்தனர். சிக்ஸர் விளாசும் போட்டிக்கு முன்னதாக மைதானத்தை வலம் வந்த தோனியும், ஹைடனும் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு மஞ்சள் நிற டி-சர்ட்களை வழங்கினர்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை முடிவுக்கு வந்துள்ளதை குறிக்கும் விதமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற சிக்ஸர் விளாசும் போட்டியில் முதலில் ஹைடன் பேட் செய்தார். 3 பந்துகளில் அவர் 2 சிக்ஸர்கள் அடித்தார். தொடர்ந்து பவுலிங் மெஷின் மூலம் தோனி பந்துகள் வீசினார். இதில் அனிருத்தா 2, பத்ரிநாத் 2, பாலாஜி ஒரு சிக்ஸர் பறக்கவிட்டனர். பவன் நெகி, மோகித் சர்மா ஆகியோர் அடித்த பந்துகள் எல்லை கோட்டை தாண்டி விழவில்லை. கடைசியாக தோனி பேட் செய்தார். அவருக்கு மெஷின் மூலம் மோகித் சர்மா பந்து வீசினார். அவர் வீசிய 3 பந்துகளையும் தோனி, ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரிக்கு பறக்கவிட மைதானமே கரகோஷத்தில் சற்று அதிர்ந்தது. இதைத் தொடர்ந்து தோனி கூறியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சேப்பாக்கத்தில் பேட் செய்தேன். அதன் பின்னர் ஒருநாள் போட்டி உட்பட எந்த வடிவிலான போட்டிகளிலும் நான் இங்கு விளையாடவில்லை. மீண்டும் இங்கு பேட் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. கடைசியாக இங்கு இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஆனால் அதில் நான் இடம்பெறவில்லை. சென்னை ரசிகர்கள் எப்போதுமே நிபந்தனையற்ற ஆதரவு வழங்கக்கூடியவர்கள்.

இங்குதான் நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன். 8 வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளேன். சென்னை எனக்கு 2-வது தாய் வீடு என்பதை எப்போதுமே பெருமையாக கூறுவேன். மீண்டும் மஞ்சள் நிற உடையை அணிவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணிக்கான நீலநிற உடை போன்று மஞ்சள் நிறமும் கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

டிஎன்பிஎல் போட்டிகளை முழுவதுமாக நான் பார்த்தது இல்லை. ஆனால் அதன் சிறப்பம்சங்கள் அடங்கிய தொகுதியை பார்த்துள்ளேன். தமிழக அளவில் நடத்தப்படும் இந்த தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது.

இந்த தொடரின் மூலம் சிறந்த வீரர்களை தமிழகம் உருவாக்குகிறது. அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடும் போது வீரர்கள் அதிகம் கற்றுக்கொள்கின்றனர். முதல்தர போட்டிகளில் அவர்கள் தங்களது திறனை அதிகரித்துக் கொள்ளவும் உதவியாக உள்ளது. சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு தேர்வு செய்யப்படுவது கூடுதல் சிறப்பு.

July 20, 2017

இளம் வீரர்களின் எழுச்சி.. பாஸ்கரனின் பயிற்சி.. கலக்க ரெடியாகும் "தமிழ் தலைவாஸ்"


இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற கபடி தொடர் இவ்வாண்டு புது எதிர்பார்ப்புகளோடு ஐந்தாவது ஆண்டாக தொடங்க உள்ளது.

ஏற்கனவே 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில் இப்போது மேலும் 4 அணிகள் இணைந்துள்ளன. இதனால் அணி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கபடி லீக்கிற்கு கிடைத்து வரும் ஆதரவுதான் இதற்கு காரணம்.

புதிதாக இணைந்த அணிகளில் 'தமிழ் தலைவாஸ்' தமிழ் ரசிகர்களை அதிகம் ஈர்க்க கூடியது. பல்வேறு டிவி சேனல்களில் இந்த அணிக்கான விளம்பரம் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த அணியின் தூதராக நடிகர் கமல் நியமிக்கப்பட்டுள்ளது, இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தொழிலதிபர் பிரசாத் ஆகியோருடையது என்பது மற்றொரு சிறப்பு.

டெல்லியில் மே மாதம் நடைபெற்ற ஏலத்தில் முழு கோட்டாவான 25 வீரர்களையும் வாங்கியது இந்த அணிதான். அணியில் 15 வீரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். பிற அணிகளை ஒப்பிட்டால் அதிக இளம் வீரர்களை கொண்டது இந்த அணி. அனுபவ வீரர் அஜய் தாக்கூர் பலம். ரூ.63 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அமித் ஹூடா, இளம் வீரர்கள் பிரபஞ்சன், தங்கதுரை போன்றோர் தங்கள் திறமையை காண்பிக்க துடித்துக்கொண்டுள்ளனர்.

அணியின் பயிற்சியாளர் காசிநாதன் பாஸ்கரன். முதல் லீக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர்தான். பூர்வீகம் தமிழகம்தான். பாஸ்கரன் ஆசிய அளவிலான கபடி ஆட்டத்தில் தங்க பதக்கம் வென்ற ஜாம்பவான். இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டனுமாவார். இவரது ஆலோசனைகள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என நம்பலாம்.

July 17, 2017

செனகல் நாட்டில் கால்பந்து போட்டியின்போது மோதல்: 8 பேர் பலி


செனகல் நாட்டில் கால்பந்து போட்டியின்போது, ரசிகர்களின் கலவரத்தால் மைதானத்தின் சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டின் டாக்கர் நகரில் கால்பந்து மைதானம் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரண்டு உள்ளூர் அணிகள் விளையாடிக் கொண்டிருந்தன. இந்த போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு அணியை சேர்ந்த ரசிகர்கள், மற்றொரு அணியை சேர்ந்த ரசிகர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து அவர்களும் பதிலுக்கு தாக்கத் தொடங்கினர். இதனால் மைதானத்தில் திடீரென கலவரம் ஏற்பட்டது.

தகவலறிந்து, மைதானத்துக்கு விரைந்து வந்த போலீசார், ரசிகர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் ரசிகர்கள் அலறியடித்து ஓடினர். இதற்கிடையே, மைதானத்தின் காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கி 8 ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

July 14, 2017

மீண்டும் சிஎஸ்கே: வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு !


சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்புர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகள் தடை நேற்றுடன் முடிந்ததையடுத்து அந்த அணி மீண்டும் ஐபிஎல்-இல் களம் இறங்க உள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கௌரவ உறுப்பினர் என கூறப்படும் குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து இந்த இரண்டு அணிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

குறிப்பாக சென்னை அணி இல்லாததால் கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களும் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்னை அணிக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகள் தடை நேற்றுடன் முடிந்தது. இதனால் சென்னை அணி மீண்டும் களம் இறங்க உள்ளது.

இந்த சந்தோஷத்தை அந்த அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளது. வந்துட்டோம்னு சொல்லு, திரும்ப வந்துட்டோம்னு சொல்லு... விசில் போடு என தெரிவித்துள்ளனர்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மேலும் கலந்துகொண்ட அனைத்து ஐபிஎல் தொடரிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

July 11, 2017

இந்திய அணியின் புதிய பயிற்சியாளரானார் ரவி சாஸ்திரி !


இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அனில் கும்ளேவின் பதவி காலம் சாம்பியன் டிராபி தொடரோடு முடிவடைந்த நிலையில், பிசிசிஐ அவரது பதவியை நீட்டித்தது. ஆனால் கோலிக்கும் கும்ளேவிற்கு இடையே ஏற்பட்ட மனகசப்பு காரணமாக கும்ப்ளே பதவி விலகினார்.

இதனையடுத்து அடுத்த பயிற்சியாளரை நியமிக்கும் இக்கட்டில் இருந்தது பிசிசிஐ. பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி உள்பட 6 பேர் விண்ணப்பித்தனர். இந்த முறையும் பயிற்சியாளரை கங்குலி, லட்சுமணன் மற்றும் சச்சின் ஆகிய மூவர் அடங்கிய குழுதான் தேர்வு செய்துள்ளது. தேர்வு குழுவின் விருப்பம் சேவாக் ஆக இருந்தபோது கேப்டன் கோலியுடன் கலந்துரையாடி முடிக்க எடுக்கப்படும் என்று கங்குலி தெரிவித்தார். அதன்படி தற்போது ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரவி சாஸ்திரி இந்தியா - இலங்கை இடையே நடைப்பெறும் தொடரில் இருந்து தனது பணியை தொடங்குவார் என தெரிகிறது. மேலும் இவரது பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு உலக கோப்பை வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

July 10, 2017

பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு ; ஆசிய தடகளப் போட்டி !


ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பரிசுத்தொகையை அறிவித்தார்.

22 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒரிசா மாநிலத்தில் நடைபெற்றது . இதில் 45 நாடுகளை சேர்ந்த 655 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் மட்டும் 95 வீரர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். இந்த போட்டியில் இந்தியா 12 தங்கம் , 5 வெள்ளி , 12 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்தது. இதில் 5000 மற்றும் 10000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். மற்றொரு தமிழக வீரரான ஆரோக்கிய ராஜீவ் வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்நிலையில் இன்று நடந்த தமிழக சட்டப்பேரவையில், ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தங்கம் வென்ற புதுக்கோட்டையை சேர்ந்த லட்சுமணனுக்கு ரூ.20 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ்வுக்கு ரூ.15 லட்சமும் பரிசுத்தொகையையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

71 பந்தில் இரட்டை சதமா ? வாழ்த்துக்கள் !


ஆப்கானிஸ்தானில் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.இதில் நேற்றைய போட்டியில் கடீஜ் அணியும், சபாகின் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த கடீஜ் அணி 20 ஓவர்கள் முடிவில் 351 ஓட்டங்களை குவித்தது.கடீஜ் அணியை சேர்ந்த சபிகுல்லா 71 பந்துகளில் 214 (21 சிக்ஸர் மற்றும் 16 பவுண்டரிகள்) ரன்கள் விளாசி பட்டையைக் கிளப்பினர்.

மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய சபாகின் அணி கடீஜ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 107 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.244 ரன்கள் வித்தியாசத்தில் சபாகின் அணி தோல்வியடைந்தது.

முந்தைய சாதனை;                                                                                                                                                                                    டெல்லியில் நடந்த உள்ளூர் டி20 போட்டியில் 300 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது சாதனையாக இருந்த நிலையில், கடீஜ்அணி அந்த சாதனையை தற்போது எளிதாக முறியடித்துள்ளது.

June 20, 2017

இந்திய கிரிக்கெட் அணியின் “கட்டப்பா” ஆனார் ஜடேஜா..,


மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் ICC சாம்பியன்ஸ் கோப்பை(2017) போட்டியை இந்த முறை இங்கிலாந்து நடத்தியது. அதன் இறுதிப்போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய – பாகிஸ்தான் இடையே நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இருந்தது.
நேற்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித், கோலி, யுவராஜ், டோனி என அனைவரும் அடுத்தடுத்து நடையை கட்டி ஏமாற்றம் அளித்தனர். ஆனால் 22 வயதே ஆன இளம் ஆட்டக்காரர் பாண்டியா மட்டும் அதிரடி காட்டி பொறுப்புடன் விளையாடினர்.
ஒரு கட்டத்தில் பாண்டியா தனி மனிதனாக நின்று பாகுபலியை போல ஆட்டத்தின் போக்கை மற்ற முயற்சித்தார். அவர் 76 ரன்னுடன், ஜடேஜா உடன் ஆடிக்கொண்டிருந்த போது பாண்டியா ரன் அவுட் ஆனார்.
இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. அந்த கோபத்தில் ஜடேஜாவை “பாகுபலியை(பாண்டியா) கொன்ற கட்டப்பா” என விமர்சனங்களால் வறுத்து தள்ளினர்.
பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரம் முதுகில் குத்துவது போன்று இயக்குனர் வடிவமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த காட்சியை வைத்து குறும்புக்கார நெட்டிசன்கள் தங்கள் பாணியில் விமர்சித்து இருந்தனர். இது கிரிக்கெட் ரசிகர்களை கொஞ்சம் சிரித்து ஆறுதல் அடைய செய்துள்ளது.
வெற்றியோ! தோல்வியோ! கிரிக்கெட் ரசிகர்கள் பொழுது போக்குக்கு மட்டும் குறைவே இல்லை.

இந்தியாவின் தோல்வியைத் தாங்க முடியாமல் கிரிக்கெட் ரசிகர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை


பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி தோல்வி அடைந்ததைத் தாங்க முடியாமல், வங்கதேசத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பெற்றியது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.
பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், ஹசன் அலி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா தோற்றதைத் தாங்க முடியாமல், வங்கதேசத்தின் ஜமல்பூரில் உள்ள 25 வயது இந்திய கிரிக்கெட் ரசிகரான பித்யுத், நேற்றிரவு இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தகவலை வங்கதேச காவல்துறையும் உறுதி செய்து அறிவித்துள்ளது.

June 19, 2017

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த போட்டியை மறக்க முடியாது! காரித்துப்பும் புள்ளி விவரம்


லண்டன்: 180 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தானிடம் இன்று விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தோற்றுள்ளது. இது பல வகைகளிலும் இந்தியாவுக்கு மறக்க முடியாத போட்டியாகும்.
ஐசிசி போன்ற முக்கிய 50 ஓவர் தொடர்களில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதில்லை என்ற சகாப்தம் மாறிவிட்டது. இதுவரை நடந்த எந்த ஒரு உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே கிடையாது.
ஆனால், இன்று இப்படி ஒரு முக்கியமான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதாவது மினி உலக கோப்பையில், பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. அதுவும் 180 ரன்கள் வித்தியாசத்தில்.
ஐசிசி தொடர் ஒன்றின் பைனலில் இதுவரை எந்த அணியும் இவ்வளவு அதிகமான ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிடையாது என்ற சாதனையை பாகிஸ்தான் இன்று படைத்துள்ளது.
அதேபோல இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் பாகிஸ்தான் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். ஆறுதலளிக்கும் ஒரே விஷயம், இன்று நடைபெற்ற உலக கோப்பை லீக் ஹாக்கியில், பாகிஸ்தானை இந்தியா 7-1 என்ற கணக்கில் தோற்கடித்துள்ளது. ஹாக்கியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் பெற்ற பெரிய தோல்வி அதுவாகும்.

June 18, 2017

இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு!


சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அரையிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் களமிறங்குகின்றன. பரபரப்பான இந்த ஆட்டத்தில் வெல்லப்போவது யார் என்று உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதனிடையே, இன்று உத்தரப்பிரதேசத்தில் இந்திய அணி இறுதிப்போட்டியில் வெல்வதற்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இஸ்லாமியர்கள் நடத்திய இந்த வழிபாட்டில் கிரிக்கெட் மட்டைகள், விராட் கோலியின் படம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு தொழுகை செய்யப்பட்டது. பெண்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். நாளை பிற்பகல் 3 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

June 16, 2017

இந்தியாவை பைனலில் சந்திக்கும் பாக்.! எத்தனை டிவி உடையப் போகுதோ ?


கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் ஐசிசி இறுதிப் போட்டி ஒன்றில் சந்திக்கவிருப்பதால் இரு நாடுகளிலும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதை விட முக்கியமாக இரு நாடுகளின் இந்த இறுதிப் போட்டியில் ஏகப்பட்ட சுவாரஸ்ய சமாச்சாரங்கள் பொதிந்து கிடக்கின்றன.

இரு நாட்டு ரசிகர்களுக்கும் பெரும விருந்தாக அமையப் போவது இந்தப் போட்டி மட்டுமல்லாமல், இவர்கள் இதுவரை மோதிய இறுதிப் போட்டிகளின் பின்னோட்டமும் தனி விருந்தாக அமைந்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ள 2வது ஐசிசி இறுதிப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இரு அணிகளும் 2007ம் ஆண்டு நடந்த ஐசிசி டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதின.

2007ல் நடந்த ஐசிசி டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிதான் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய கடைசி இறுதிப் போட்டியாகும். அதில் டோணி தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது.

இரு அணிகளும் 1985ம் ஆண்டு முதல் இறுதிப் போட்டியில் சந்தித்தன. 1985 உலக சாம்பியன்ஷிப் போட்டிதான் இவர்களின் முதல் பைனல் சந்திப்பு. மெல்போர்னில் நடந்த அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இரு தரப்பும் மோதிய இறுதிப் போட்டிகளில் அதிக முறை வென்றது பாகிஸ்தான்தான். அதாவது 7 முறை பாகிஸ்தான் வென்றுள்ளது. 4 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்த நூற்றாண்டு பிறந்த பிறகு இரு அணிகளும் இதுவரை 2 முறை மட்டுமே (2007, 2008) இறுதிப் போட்டியில் சந்தித்துள்ளன. தற்போது 3வது முறையாக மோதவுள்ளன. காரணம், அதிக அளவிலான போட்டிகளில் முன்பு போல விளையாடாமல் இருப்பதால்!

இப்படி இரு அணிகளின் இறுதி மோதல் கதையில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் இருப்பதால் இந்த இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை இரு தரப்பிலும் ஏற்படுத்தியுள்ளது.

June 7, 2017

டி-வி.,க்குபதில் ரோடியோவை உடைங்க காசு மிச்சமாகும் : அக்தரை அசிங்கப்படுத்திய சேவக்!


பர்மிங்ஹாம்: இந்தியாவுடனான தோல்விக்கு டி-வியை உடைப்பதற்கு பதிலாக, ரேடியோ வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்,’ என முன்னாள் பாகிஸ்தான் பவுலரை சேவக் நேரடி நிகழ்ச்சியின் போது கலாய்த்துள்ளார்.

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் பர்மிங்ஹாமில் நடந்த ‘பி’ பிரிவு நான்காவது லீக் போட்டியில், இந்தியா அணி, தனது பரமஎதிரியான பாகிஸ்தான் அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் மரண அடி அடித்து மெகா வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முன்பாக நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேரலையில் முன்னாள் வீரர்களான சேவக், அக்தர் கலந்து கொண்டனர்.

அப்போது இந்த போட்டி குறித்து பேசிய சேவக்,’ பாகிஸ்தான் மக்கள், டிவிக்கு பதிலாக, ரேடியோ வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. அதனால் அவர்களின் பணம் மிஞ்சமாகும். போட்டிக்கு பின் டிவியை உடைப்பதற்கு பதிலாக, ரேடியோவை உடைப்பதால். என்றார்.

இதற்கு பதில் அளித்த அக்தர்,’ எங்களிடம் வேலை செய்யாத நிறைய சீனா டிவிக்கள் உள்ளது. அதை உடைத்துக்கொள்கிறோம் என்றார்.

இதற்கு பதில் அளித்த சேவக்,’ இந்திய அணி, பாகிஸ்தான் அணியை கத்தரிக்காயை நசுக்குவது போல நசுக்கி வெற்றி பெறும் ,’ என நேரடி நிகழ்ச்சியிலேயே அக்தரின் மூக்கை உடைத்தார்.

June 5, 2017

'கிச்' என்று ஜெயித்த இந்தியா.. டென்ஷனில் டிவி பெட்டிகளை அடித்து நொறுக்கிய பாகிஸ்தானியர்!


இஸ்லாமாபாத்: கிரிக்கெட்டை வைத்துத்தான் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் தேசபக்தியை ஓவராக வெளிப்படுத்துகிறார்கள். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அந்த நாட்டில் பெரும் பிரளயமே வெடித்துள்ளது.
கிரிக்கெட்டில் இரு நாடுகளும் மோதும் போது யார் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி தேசபக்தியோடு இணைத்து ஓவராக ரியாக்ட் செய்கின்றனர்.
மினி உலகக் கோப்பையான ஐசிசி டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. பாகிஸ்தானும் இந்தியாவும் நேற்று மோதின. பாகிஸ்தானை இந்திய அணி 124 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி வீரர்கள் முதல் 2 ஓவரில் சுமாராக விளையாடினாலும் பின்னர் சுதாரித்தனர். அடுத்தடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்டியா, பலே பாண்டியாவாக மாறி ஹாட்ரிக் சிக்ஸ்களை பறக்கவிட்டு கடைசி நேரத்தை ஸ்கோரை கிச் என்று உயர்த்தினார். 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே மந்தமாக விளையாடி வந்தனர். மழையும் இந்தியாவிற்கு சாதகமாகவே இருந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் சீரான இடைவெளியில் பறிகொடுத்தது பாகிஸ்தான்.

164 ரன்களே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான். இதையடுத்து டக்-ஒர்த் லெவிஸ் முறைப்படி இந்திய அணி 124 ரன்களில் வென்றது.

இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நள்ளிரவு நேரத்திலும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெடிச்சத்தம் விண்ணை பிளந்தது.

பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் பல இடங்களில் கும்பலாக கூடி போட்டியை ரசித்துப் பார்த்த ரசிகர்கள் பாகிஸ்தான் தோற்றுப் போனதால் கோபமடைந்து டிவி பெட்டிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கேயும் பல பகுதிகளில் டிவிகள் உடைபடும் சத்தம் கேட்டது.
ஒரு வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தவர்கள், பாகிஸ்தானை இந்தியா வென்ற உடன் கோபத்தில் பித்தளை சொம்பை வைத்து ஓங்கி அடித்து டிவியை உடைத்தார். ஆத்திரம் தீராமல் சில்லு சில்லாக நொறுக்கினார். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக அந்த நாட்டு ரசிகர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

May 30, 2017

சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 240 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய வெற்றி


ஓவல்: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி, 240 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதையொட்டி நடைபெற்ற யிற்சி ஆட்டத்தில் இந்தியா, வங்காள தேசத்தை இன்று எதிர்கொண்டது.

டாஸ் வென்ற வங்காள தேசம் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தவான் (60), தினேஷ் கார்த்திக் (94), ஹர்திக் பாண்டியா (80) மற்றும் ஜடேஜா (32) ரன்கள் சேர்த்தனர். விராட் கோஹ்லி மற்றும் டோணி ஆகியோர் பேட்டிங் செய்யவில்லை.

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணி, துவக்கம் முதலே இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க தடுமாறியது. அந்த அணியின் முஷ்பிகுர் (13), ஷாகிப் அல் ஹசன் (7), மெஹ்முதுல்லா (0), மொசாடெக் ஹொசைன் (0), மெஹெதி ஹசன் மிராஸ் (24), சன்சாமுல் இஸ்லாம் (18), ருபெல் ஹொசனை் (0) ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் 23.5 ஓவரிலேயே 84 ரன்னில் ஆல்அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது. எனவே இந்தியா 240 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

May 22, 2017

கோப்பையை வென்று சாம்பியனானது இந்திய மகளிர் அணி!


 தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 4 நாடுகள் பங்கேற்ற ஒரு நாள் போட்டித் தொடரில் இந்திய மகளிர் அணி கோப்பையை கைப்பற்றியது.

போச்ப்ஸ்ட்ரூம்: தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 4 நாடுகள் பங்கேற்ற ஒரு நாள் போட்டித் தொடரில் இந்திய மகளிர் அணி கோப்பையை கைப்பற்றியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிரணி சாம்பியனானது.

இந்தியா, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய ஒருநாள் போட்டித் தொடர், தென் ஆப்ரிக்காவில் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு அணியும் மற்ற 3 அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதின.

லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் தலா 24 புள்ளிகள் பெற்று முதல் 2 இடங்களை பிடித்து பைனலுக்கு முன்னேறின. இந்த நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது.

156 ரன்களில் சுருண்டது
இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய தென் ஆப்ரிக்கா 40.2 ஓவரில் 156 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சில் ஜுலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 3 விக்கேட்டுகளையும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும், ஏக்தா பிஷ்ட், தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

33வது ஓவரிலேயே வெற்றி
அடுத்து களமிறங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 33வது ஓவரிலேயே இலக்கை எட்டி கோப்பையை கைப்பற்றியது. இந்தியா 33 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், பூனம் ராவுத் - கேப்டன் மித்தாலி ராஜ் ஜோடி பொறுப்புடன் விளையாடி வெற்றியை வசப்படுத்தியது.

 8 விக்கெட் வித்தியாசத்தில்
பூனம் ராவுத் 70 ரன்களும் கேப்டன் மித்தாலி ராஜ் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றியது.

100 வது போட்டி
இறுதிப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக பூனம் ராவுத், தொடரின் சிறந்த வீராங்கனையாக தீப்தி ஷர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கேப்டனாக மித்தாலி ராஜ் களமிறங்கிய 100வது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

May 16, 2017

இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது யார்? மும்பை-புணே இன்று பலப்பரீட்சை


மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச் சுற்றில் மும்பை இண்டியன்ஸýம், ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸýம் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, முதல் அணியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தோற்கும் அணிக்கு இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது 2-ஆவது தகுதிச்சுற்றில் விளையாடும். அதில் வெல்லும்பட்சத்தில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறலாம்.

எனினும் இரு அணிகளும் இந்த ஆட்டத்திலேயே வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேற முயற்சிக்கும். இந்த சீசனில் மும்பை அணி வலுவான அணியாக இருந்தாலும், புணேவுடன் மோதிய இரு லீக் ஆட்டங்களிலும் தோற்றுள்ளது.

எனவே இந்த ஆட்டத்தில் புணேவுக்குப் பதிலடி கொடுக்கும் முனைப்பில் மும்பை அணி களமிறங்கும். ஆனால் புணே அணியோ, லீக் சுற்று ஆட்டங்களில் மும்பையை வீழ்த்தியிருப்பதால் இந்த ஆட்டத்தில் மிகுந்த நம்பிக்கையோடு அந்த அணியை சந்திக்கும்.

புணேவுக்கு மும்பை பதிலடி கொடுக்குமா? அல்லது புணேவின் ஆதிக்கம் தொடருமா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
மும்பை அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாகும். மும்பை அணி பேட்டிங், பெளலிங் என இரு துறைகளிலும் பலம் வாய்ந்த வீரர்களைக் கொண்டுள்ளது.

மும்பையின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பார்த்திவ் படேல்-சிம்மன்ஸ் ஜோடி நல்ல ஃபார்மில் உள்ளது. அவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தரும்பட்சத்தில் மும்பை அணி பெரிய அளவில் ரன் குவிக்க முடியும். மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் ரோஹித் சர்மா, கிருனால் பாண்டியா, கிரண் போலார்ட், ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். நிதிஷ் ராணாவுக்குப் பதிலாக கடந்த ஆட்டத்தில் 63 ரன்கள் குவித்த அம்பட்டி ராயுடு சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, மெக்கிளெனகன், லசித் மலிங்கா, ஹார்திக் பாண்டியா கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் சிங்கையும் நம்பியுள்ளது மும்பை.

மிரட்டும் பந்துவீச்சு: புணே அணியைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர் ராகுல் திரிபாதி உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். இந்த சீசனில் 388 ரன்கள் குவித்துள்ள திரிபாதி, மும்பைக்கு எதிராகவும் அதிரடியாக ரன் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு தொடக்க வீரரான அஜிங்க்ய ரஹானே, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், மனோஜ் திவாரி, எம்.எஸ்.தோனி ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். அந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணிக்காக விளையாட சென்றுவிட்டார்.
இது புணேவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஸ்டோக்ஸýக்கு பதிலாக மயங்க் அகர்வால் அல்லது உஸ்மான் கவாஜா இடம்பெறலாம்.

வேகப்பந்து வீச்சில் ஜெயதேவ் உனட்கட், ஷர்துல் தாக்குர், கிறிஸ்டியான் கூட்டணி மிரட்டி வருகிறது. அவர்களின் ஆதிக்கம் மும்பைக்கு எதிராகவும் தொடரும் என நம்பலாம். சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பாவை நம்பியுள்ளது புணே.

இதுவரை...

இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் புணே 3 வெற்றிகளையும், மும்பை ஒரு வெற்றியையும் பெற்றுள்ளன.

May 13, 2017

இன்றைய கடைசி ஆட்டத்தோடு கலைக்கப்படுகிறது குஜராத் லயன்ஸ் அணி.. உருக்கமான ரெய்னா


குஜராத் லயன்ஸ் அணிக்காக, கடைசி லீக் ஆட்டத்தில் ஆடுவதற்கு முன்பாக அந்த அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா வீடியோ மெசேஜ் ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடுியவில்லை. சூதாட்ட புகார் காரணமாக இவ்விரு வருடங்களும் அந்த அணி ஆட தடை விதிக்கப்பட்டது. எனவே, இந்த காலகட்டத்தில், புனே மற்றும் குஜராத் அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

புனே அணியில் டோணி, அஸ்வின் உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்களும், குஜராத் அணியில் ரெய்னா, ஜடேஜா போன்ற சிஎஸ்கே வீரர்களும் ஆடினர். இவ்வாறாக பல அணிகளும் அவர்களை ஏலம் எடுத்திருந்தன.
அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் ஆட வர உள்ளன. இந்த ஆண்டு சீசனில் குஜராத் லயன்ஸ் இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தை, ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆடியது. பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் தகுதி பெறவில்லை என்பதால், அந்த அணிக்கு இது இவ்வாண்டின் கடைசி போட்டியாகும்.

எனவே அனைத்து தரப்புக்கும் உருக்கமாக நன்றி தெரிவித்து ரெய்னா வீடியோ மெசேஜ் வெளியிட்டுள்ளார். அடுத்த ஐபிஎல் சீசனில் எந்த அணிக்காக ஆடினாலும், தனக்கான ஆதரவை தருமாறு ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

May 11, 2017

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் ஹர்பிரீத் சிங் வெண்கலம் வென்றார்


ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் ஹர்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு வீரர் குர்பிரீத் சிங் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் ஹர்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு வீரர் குர்பிரீத் சிங் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஈரான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஜப்பான், கொரியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்தியா சார்பில் 24 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

இன்று கிரேக்கோ ரோமன் பிரிவில் இந்திய வீரர்கள் குர்பிரீத் சிங், ஹர்பிரீத் சிங் ஆகியோர் தங்கள் எடைப்பிரிவுகளில் பெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு முனனேறினர்.

75 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற குர்பிரீத் சிங், ரெப்பேஜ் சுற்றில் கிர்கிஸ்தானின் பர்கோ பெய்ஷாலீவை தோற்கடித்தார். 80 கிலோ எடைப்பிரிவில் ஹர்பிரீத் சிங், கொரியாவின் ஜூன்-ஹூயங் கிம்மை வீழ்த்தினார்

அதன்பின்னர் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் குர்பிரீத் சிங், சீனாவின் பின் யாங்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், குர்பிரீத் சிங் 0-8 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தார்.

அதன்பின்னர் 80 கிலோ எடைப்பிரிவில் ஹர்பிரீத் சிங், சீனாவின் நா ஜன்ஜியுடன் மோதினார். இப்போட்டியில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் ஹர்பிரீத் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய அணி வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.